சிறப்புக் களம்

தர்மயுத்தத்திற்குள் ஒளிந்து கொண்ட ஒபிஎஸ்

தர்மயுத்தத்திற்குள் ஒளிந்து கொண்ட ஒபிஎஸ்

webteam

பிப்ரவரி 7ஆம் தேதி தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையாக அமையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மிகச் சரியாக அரசியல் நாடியை பிடித்த ஓ.பன்னீர்செல்வம், மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வந்து உட்கார்ந்தார். மாபெரும் அமைதி. அவர் இமைத் திறப்பதற்கு முன்னால் பலர் காமிராவை திறந்து வைத்து காத்திருந்தனர். என்ன சொல்ல போகிறார்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் ஏதேனும் மர்மமா? அந்த முடிச்சியை அவிழ்ப்பாரா பன்னீர் என பல கேள்வி ரேகைகள் பல காட்சி ஊடகங்களின் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தளவுக்கு நேஷனல் செய்தியானார் ஓபிஎஸ். 

நினைத்தைப் போலவே தனது கண்களை நன்றாகத் தேய்துவிட்டுக் கொண்ட ஓபிஎஸ் கொஞ்சமும் ஒளிவு மறைவில்லாமல் பேச ஆரம்பித்தார். அதாவது சசிகலாவின் நிர்பந்தம் ஆட்சியை ஆட்டிப்படைக்கிறது என நேரடியாக அவர் சொல்ல நினைத்திருக்கலாம். ஆனால் நேராக மெரினாவுக்குப் போனவர் சுற்றிச்சுற்றி விஷயத்திற்குள் வர மறுத்தார்.  
“ஜெயலலிதா நினைவிடத்திற்கு மனசாட்சி உந்தப்பட்டதால் வந்தேன். நாட்டு மக்களுக்கும் அ.தி.மு.க., தொண்டர்களுக்கும் உள்ளார்ந்த அன்போடு சில உண்மைகளை சொல்ல ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்தியது.” என்றார். 

அதுவரை ஒபிஎஸ் என்பவர் ஒரு பொம்மை முதல்வர் என கணக்குப் போட்டுக் கொண்டிருந்த கண்களுக்கு பொறுப்புள்ள தலைவனாக தெரியத் தொடங்கினார். ஆட்சிக்கு மாரும் நெருக்கடிகள் வந்த வேளையில் எல்லாம் ஜெ.வின் கண்களுக்கு தெரிந்தவர் ஒபிஎஸ். 2001ம் ஆண்டு முதன்முறையாக ஜெ.வின் ஆட்சிக்கு ஆபத்து வந்தபோது  என்ன செய்யப்போகிறார் ஜெ? அவர் நம்பிக்கைக்குரிய அந்த நபர் யார் என காத்திருந்தது தமிழகம். எங்கோ மூலையில் பல அமைச்சர்களுக்கு மத்தியில் மறைந்து நின்ற பன்னீரை அரியணைப் பந்தலுக்கு பன்னீர்த் தெளித்து கெளவரம் சேர்த்தார் ஜெ. அதன் பின் ஜெவின் சேனைக்கு நேரடியான தளபதி ஒபிஎஸ்தான். ஆனால் அதில் ஒரு அவலம். அதை அவர் வெளிப்படையாக வெளியில் சொல்ல முடியாது. அவர்தான் முதல்வர். ஆனால் இல்லை. படையப்பா படத்தில் ‘மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை என்னது’ என செந்தில் சொல்வதைபோல ஆட்சிக் கட்டிலில் என்னவோ ஒபிஎஸ் உட்கார்ந்திருந்தார். மறையில் என்னவோ மன்னார்குடி இருந்தது.

ஜெவின் நினைவிடத்தில் போய் நின்ற ஓபிஎஸ் சொல்ல நினைத்து ஒன்று. ஆனால் மக்கள் எதிர்பார்த்தது மற்றொன்று. அதாவது ஜெ.வின் மறைவில் உள்ள மர்மத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள். அப்படியொரு மர்மம் இருக்கிறதா? இல்லையா? என்பது வேறு விஷயம். மக்களை பொருத்தவரை ஜெ.வுக்கு இறக்க வேண்டிய வயதில்லை. அதோடு இத்தனை உயர் சிகிச்சை வசதிகள் இருக்கும்போது எப்படி ஒரு முதல்வரால் லேசில் இறந்துவிட முடியும்? அதுதான் மக்களின் சந்தேகம். 

ஜெயலலிதா ஊழல் செய்தார் என நீதிமன்றமே சொன்னதும். ஆனால் மக்கள் ஏற்கவில்லை. ஜெயிலுக்குப் போய் வந்த அவரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்கள். உண்மையில் அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் சொன்னார்கள். இல்லை, இல்லை அவர் இயற்கையாக இறக்கவே இல்லை என மக்கள் நினைத்தார்கள். இதுதான் முரண். 
சட்டப்படி மிக சாவதானமாக 18 ஆண்டுகள் நின்று நிதானித்து கொடுக்கப்பட்ட தீர்ப்பை மக்கள் ஏற்கவில்லை. 75 நாள்கள்அப்போலோவில் மருத்துவர்கள் போராட்டிக் கொடுத்த சிகிச்சையை கூட மக்கள் நம்பில்லை. ஏன்? மக்கள் ஜெ.வை நம்பினார்கள். அவர் எப்போதும் ஜெயிக்க கூடியவர் என நம்பினார்கள். அரசியல் ரீதியாக அவர் ஒரு இரும்பு மனுஷி. அவருக்கு  சாவு என்பதே இல்லை. சகலத்தையும் வெற்றிக் கொள்ளும் அதிசய பிறவி அவர். அப்படிதான் ஒவ்வொரு எம்ஜிஆர்  தொண்டனும் நினைத்தான். ஆனால் அந்த எம்ஜிஆருக்கும் சாவு வந்தது. 

மகாபாரதத்தில் “மிகப் பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா? ஒவ்வொரு மரணத்தையும் கண்டுவிட்டு ஒவ்வொருவனும் நமக்கு சாவு வராது என நினைக்கிறானே அதுதான்”என்று ஒரு வசனம் உண்டு. அந்த வசனத்தை போலதான் ஜெ.வின் ரசிகர்கள் அம்மாவுக்கு மரணம் இல்லை என நினைத்தார்கள். ஆனால் அந்த நினைப்புக்கு ஏற்ப கடந்த சில வருடங்களாகவே ஜெ.வின் வாழ்க்கை அமையவில்லை. அவர் ஒவ்வொரு அரசு விழாவிலும் அடி எடுத்து வைத்து நடக்கவே அஞ்சினார். அந்தளவுக்கு அவர் உடல் சீர்குலைந்திருந்தது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வராது என பலரும் ஆருடம் போட்ட நேரத்தில் மக்கள் நல கூட்டணியில் புண்ணியத்தால் விஸ்வரூம் எடுத்திருந்தார் ஜெயலலிதா. 

அவர் வெற்றியை காலை முதலே உறுதி செய்து கொண்டிருந்தன ஊடகங்கள். அவர் வீட்டு முன்பாக கூடிய கூட்டம் மேளதாளம் போட்டு போயஸ்கார்டன் அமைதியையே ஆட்டி வைத்து கொண்டிருந்தது. அமோக வெற்றி என உறுதியானத் தகவல் வந்தபோது கூட தொண்டர்களை சந்திக்க மதியம் வரை வெளியே வரவில்லை ஜெயலலிதா. அத்தனை காவல்துறை அதிகாரிகளும் அவர் வீட்டு முன்பு ஆஜர். அரசு உயர்மட்ட அதிகாரிகள் வரிசையாக வந்து வழி நெடுக காத்திருக்கிறார்கள். மிகத் தாமதமாக எழுந்து வந்து வீட்டிற்குள் அமர்ந்த படியே வாழ்த்துகளை வாங்கிக் கொண்டார் ஜெ. அவர் முகத்தில் அப்போதுதான் போடப்பட்ட மேக் அப். ஆனால் அதையும் மீறி அவர் முகத்தில் ஏதோ ஒரு குறை.ஏதோ செளகர்யம் இல்லாத ஒரு தோரணை.  இதில் என்ன ஒளிவு? அவர் சுகவீனமாக இருந்தார். உடல் அசெளகர்யம் அனைவருக்குமானதுதான். ஆனால் அதை தைரியமாக வெளியே காட்டிக்கொள்ள ஜெ. விரும்பவில்லை. ஆக, அவர் அரியணையில் அமர்ந்த நேரத்தில் இருந்தே அவர் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதை அத்தனை ஊடகங்களும் ஊதி ஊதி எழுதின. ஆனால் அதற்கும் அவர் மெளனமாகவே இருந்தார்.

உயிரோடு இருக்கும் போதே தன் உடல்நிலைக்குறித்து வந்த செய்திக்கு மறுப்பு கொடுக்காத ஜெவின் மறைவுக்குதான் பலரும் உண்மையை விளக்கக் கேட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்த அரசியலை தனது பதிவி சண்டைக்குப் பயன்படுத்த விரும்பிய ஒபிஎஸ் மெரினாவை தேர்ந்தெடுத்தது தற்செயலானதல்ல. வந்தவர் நினைத்தைப்போலவே “ஜெ., நோய் வாய்ப்பட்டு அப்போலோவில் சிகிச்சையிலிருந்து 70 நாட்களுக்கு பிறகு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என கூறினார்கள். மாற்று ஏற்பாட்டிற்கு என்ன தேவை என கேட்டேன். ஜெயலலிதா அ.தி.மு.க., பொதுச்செயலராக அவை தலைவர் மதுசூதனனை நியமிக்க கூறினார்.என்னை முதல்வராக சொன்னார். நான் முதல்வராக மறுத்தேன். அதற்கு, 2 முறையை என்னால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் நீ்ங்கள். தற்போது, உங்களை தவிர்த்து வேறு ஒருவரை முதல்வர் ஆக்கினால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையும் என சொன்னார்கள். அதனால், முதல்வர் பதவியை ஏற்றேன்.” என்றார்.

மேலும் “முதல்வரான பிறகு சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் வந்த திவாகரன் என்னுடைய அக்காவை ஊருக்கு அழைத்து செல்ல உள்ளேன் என்றார். காரணம் கேட்டதற்கு என்னுடைய அக்காதான் பொதுச்செயலராக வேண்டும் என்றார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் டில்லியில் பிரதமரை சந்திக்க சென்ற போது தம்பிதுரை தலைமையில் 50 எம்.பி.,க்கள் வந்தார்கள். பிரதமர் எனக்கு அனுமதி அளித்து இருக்கிறார். வாருங்கள் அனைவரும் ஒன்றாக சென்று சந்திப்போம் என சொன்னதற்கு மறுத்துவிட்டார்.

நான் முதல்வராக இருக்கும் போது, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். நான் முதல்வராக இருக்கும் போது எனக்கு கீழ் உள்ள அமைச்சர் இவ்வாறு பேட்டி அளித்தது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்தேன். அவர்கள் அமைச்சரை கண்டிப்பதாக கூறினார்கள். இதேபோல், தொடர்ந்து அமைச்சர் செல்லுார் ராஜூ, செங்கோட்டையன் உள்ளிட்டோர் சசிகலா முதல்வராக வேண்டும் என பேட்டி அளித்தனர்.

அ.தி.மு.க., சட்டசபை கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. அவர்களே அனைத்து பணிகளை முடித்து விட்டு என்னை குறிப்பிட்டு என்னிடம் கூறினார்கள். நான் அவர்களுடன் பொறுமையாக நீண்ட நேரம் விவாதித்தேன்.என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.முதல்வர் பதவியை விரும்பாத என்னை  முதல்வராக்கி அவமானப்படுத்தி விட்டனர்.என்னை பொறுத்தவரை நான் முதல்வர் ஆக வேண்டும் என விரும்பவில்லை. அ.தி.மு.க., தொண்டர்கள், மக்கள் விரும்பும் ஒருவரே முதல்வராக பதவி ஏற்க வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற தனித்து போட்டியிடுவேன். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன்” என்றார்.

உண்மையில் ஒபிஎஸுக்கு காத்திருந்த மாபெரும் வாய்ப்பு அது. அரசியல் ரீதியாக வாரிசு இல்லாது தவித்த அதிமுக அற்புதமான தலைவரை கண்டுப் பிடித்து விட்டது என்றே பலரும் கருத்து தெரிவித்தார்கள். போயஸ்கார்டன் வீட்டின் முன்பு சசிகலாவின் வருகைக்காக காத்திருந்த ஒபிஎஸ், அவரை பொதுச்செயலாளராக அமர்த்த துடித்துடித்த ஒபிஎஸ் இறுதியில் ‘தர்மயுத்தத்திற்கு’ அழைப்பு கொடுத்ததும் பெரும் கொந்தளிப்பு நிலவியது. கருணாநிதி பாணியில் சொன்னால் ‘பழம் நழுவி பன்னீர் கையில் விழும்போது’ கவனிக்க தவறிவிட்டார் இந்தப் பன்னீர்.

வீட்டுக்கு முன்பாக திரண்ட தொண்டர்களுக்கு சாப்பாடு தயாரித்து போட்டவர், மீடியாவின் கேள்விகளுக்கு மிக அன்பாக பதில் கொடுத்தவர் என ஊரே பன்னீரை பற்றி பேசியது. அவரது தனித்தன்மையான வணக்கம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை சரியாக கையாண்டது என பல நற்பெயர்களை மக்கள் எடைப்போட்டு பேசிக் கொண்டிருந்தபோது அவர் மறைமுகமாக சிலரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்ததை பல அரசியல் விமர்சகர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள். பல உண்மைகளை பேசுவார் என நினைத்து காத்திருந்த போது அவர், தனது ஊர் கிணற்று பிரச்னையை கூட வெளிப்படையாக பேச முன் வரவில்லை. அங்கே ஆரம்பித்தது அடி.

2001 செப்டம்பர் 21 முதல் 1 மார்ச்  2002 வரை முதல்வர் பதவி. அடுத்து 29 செப்டம்பர் 2014 முதல் 22 மே 2015 வரை முதல்வர்.  6 டிசம்பர் 2016 முதல் 15 பிப்ரவரி 2017 வரை முதல்வர் என மாறி மாறி ஆட்சி வாய்ப்புக்கள் அவரை தேடி வந்தன. அவரும் ஆசைத் தீர அந்தப் பதவியில் உட்கார்ந்தார். சொல்லப்போனால் ஸ்டாலினுக்கே கிடைக்காத அரிய வாய்ப்பு அது. ஆனால் அந்த அரிய வாய்ப்பை அவர் மக்கள் சேவைக்கானது என நினைத்திருந்தால் ‘தர்மயுத்தத்தை’ தொடர்ந்திருப்பார். மக்கள் தரப்போகும் மறக்க முடியாத மக்கத்தான பரிசை பெற்றிருப்பார். அதிமுகவின் அரசியல் வெற்றிடம் ஒரு வெற்றியின் அடையாளமாக மாறியிருக்கும். ஆனால் அதற்கு பன்னீர் மனம் இடம் தரவில்லை. நீதிக்கேட்டுக் கொண்டே திரைமறைவில் அவர் சமரசம் பேசிக் கொண்டிருந்தார். அவர் விரும்பியது அதிமுகவின் தலைமை பொறுப்பை அல்ல; தற்காலிகமாக கிடக்க இருக்கும் துணை முதல்வர் பொறுப்பை.  ஆகவேதான் இன்று எல்லா காயங்களையும் மறைத்து கொண்டு ‘தர்ம யுத்தத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது. நாங்கள் ஒன்றுகூடி இருக்கிறோம். நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது’ என்று வாக்கு மூலம் தருகிறார். 

நீங்கள் ஒன்று கூடிவிட்டீர்கள். ஆனால் மக்கள் உங்களை விளக்கி வைத்துவிட்டார்களே? அதைதானே ஆ.கே.நகர் நிரூபித்திருக்கிறது. 40 நிமிட மெளம், 25 ஆண்டுகால அரசியல் வாழ்வு என அனைத்தையும் கொட்டி புதைத்துவிட்டீர்களே ஒபிஎஸ்? அதை வர போகும் பொதுத்தேர்தல் உங்களுக்கு இன்னும் அதிகமாக புரிய வைக்கும். ஒபிஎஸின் தர்மயுத்தம் இன்று  மக்கள் யுத்தமாக மாறி இருக்கிறது. கொஞ்சம் கண் திறந்து பேசுங்கள் ஒபிஎஸ்.