சிறப்புக் களம்

”கொரோனாவின் தீவிரத்தை நாம் உணரவில்லை” - WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நேர்காணல்

”கொரோனாவின் தீவிரத்தை நாம் உணரவில்லை” - WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நேர்காணல்

webteam

கொரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமாருடன் 'புதிய தலைமுறை' நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் சிறப்பு நேர்காணல் நடத்தினார். அதில், WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்  பகிர்ந்து  கொண்டவை இங்கே... 

கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவுவதற்கு என்ன காரணம்?

"கொரோனா வைரஸ் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற தகவல் பரவிவிட்டது. இது ஒரு தவறான விஷயம். ஆனால், அதுகுறித்த புரிதல் நமக்கு தற்போது வந்துவிட்டது.

இந்த கொரோனா வைரஸ் இன்னும் சில வருடங்களுக்கு நம்மோடு இருக்கப்போகிறது. தடுப்பூசி போடுவதால் நமக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக் கூடும். ஆனால், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். ஆகையால் நாம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், வீடுகளை காற்றோட்டமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்."

இந்தியாவில் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் எப்படியானது?

"இந்தியாவில் உருமாற்றம் அடைந்துள்ள பி1.617 கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதன் காரணமாக ஒரே நேரத்தில் அதிகளவு நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால்தான் அதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் நன்றாக வேலை செய்கின்றன. அதை நாம் எடுத்துக்கொள்ளும்போது நோயாளி ஆபத்தான கட்டத்தை அடைவதை தடுக்க முடியும்."

ஸ்டீராய்டு பயன்படுத்துவது குறித்து உங்களின் கருத்து என்ன?

"ஸ்டீராய்டு பயன்படுத்த தகுதியானதுதான். ஆனால் அதனை  நோயாளி ஆபத்தானக் கட்டத்தை அடையும்போது கொடுக்க வேண்டும். அதுவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி. ஆரம்ப நிலையில் ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டால் அது ஆபத்தை விளைவிக்கும்.

ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லாத ஒன்று. இதனால் நோயாளிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் தங்கும் நரம் குறையுமே தவிர, வேறு எந்த பலனும் இல்லை."

இளவயது மரணங்கள் அதிகமாக இருக்கிறதே?

"இளம் வயதினர் அதிகமாக வெளியே செல்வதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது."