சபரிமலைக்கு செல்வதாக பரபரப்பை ஏற்படுத்திய ரஹானாவை இஸ்லாமிய மதத்தில் இருந்து நீக்குவதாக கேரள முஸ்லீம் ஜமாத் கவுன்சில் அறிவித்துள்ளது
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கவிதாவும், பெண்ணியவாதியான ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலைக்கு சென்றனர். இதில் ரஹானா இருமுடி அணிந்து ஐயப்ப பக்தராக சென்றார். இவர்கள், சபரிமலை சன்னிதானத்தின் நடைப்பந்தல் வரை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அதற்கு மேல், இரு பெண்களையும் அனுமதிக்க மறுத்து ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்தால் இரு பெண்களையும் திருப்பி அனுப்ப, கேரள அரசு உத்தரவிட்டது.
இதில் கலந்து கொண்ட ரஹானா பாத்திமாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரின் சர்ச்சைக்குரிய பட போஸ்டர்களை வெளியிட்டும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள ரஹானாவின் வீட்டையும் மர்ம கும்பம் அடித்து நொறுக்கியது. இந்நிலையில் ரஹானாவும், அவரது குடும்பத்தினரும் இஸ்லாமிய மதத்தில் இருந்து நீக்கப்படுவதாக கேரள முஸ்லீம் ஜமாத் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கேரள முஸ்லீம் ஜமாத் கவுன்சில், ''லட்சக்கணக்கான இந்து மத பக்தர்களின் மனம் புண்படும்படி ரஹானா நடந்துகொண்டுள்ளார். இது மட்டுமின்றி முத்தப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். ஆபாச திரைப்படத்தில் நடித்துள்ளார். அவர் இஸ்லாமிய பெயரை பயன்படுத்த உரிமையற்றவர். அவரையும் கேரள அரசு அவர் மீது இனவாத வெறுப்பு வழக்கு தொடர வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 வயதான ரஹானா 'எகா' என்ற ஓரினச்சேர்கையாளர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்கியவர் அவரது கணவர் மனோஜ். விதிகளை உடைப்பதே தன் கொள்கை எனக் கூறிக்கொள்ளும் ரஹானா, பிறப்பால் ஒரு இஸ்லாமிய பெண் என்றாலும் அந்த மதத்தை தான் பின்பற்றுவதில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்தார். பெண்கள் குறித்த பேராசிரியரின் சர்ச்சையான பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் 'என் உடல் என் உரிமை' என்ற தலைப்பில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர். கேரளாவில் நடந்த முத்தப்போராட்டத்திலும் கலந்துகொண்டார் ரஹானா.