சிறப்புக் களம்

'ஷேர்னி'யைக் கண்டோரும், காண விழைவோரும் அறியவேண்டிய 'அவ்னி' புலியின் கதை!

'ஷேர்னி'யைக் கண்டோரும், காண விழைவோரும் அறியவேண்டிய 'அவ்னி' புலியின் கதை!

PT WEB

மனிதவாடை கண்ட புலியைக் கொல்ல ஒரு தரப்பும், உயிருடன் பிடிக்க இன்னொரு தரப்பும் வனத்துள் பயணிக்க விறுவிறு திரைக்கதை புலிப்பாய்ச்சல் காட்டும் த்ரில்லர் சினிமாதான் 'ஷேர்னி'. இந்தப் படம் குறித்து விவாதிக்கும்போது, நம்மில் பலருக்கும் பரிச்சயமான 'அவ்னி' எனும் புலியின் உண்மைக் கதையை முழுமையாக உள்வாங்கிக்கொள்வது மிகவும் அவசியம்.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள வித்யாபாலனின் 'ஷேர்னி' மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் மனித வாடை கண்ட ஆட்கொல்லி புலியாக அறிவிக்கப்பட்ட T12 புலியை இடமாற்றம் செய்யும் முயற்சியில் இருக்கிறார் வனத்துறை அதிகாரியாக வரும் வித்யாபாலன். அரசியல் ஆதாயம், தேர்தல், அதிகாரிகளின் மெத்தனத்தன்மை, மக்களின் அறியாமை, தனியார் வேட்டைக்காரர்களின் சூழ்ச்சி முதலானவற்றை மீறி, அந்தப் பெண் அதிகாரியால் என்ன செய்ய முடியும்? மனித வாடை கண்ட புலி பிடிப்பட்டதா, புலிக் குட்டிகளின் நிலைமை என்ன ஆனது முதலானவற்றை நோக்கியதே திரைக்கதை. இங்கு சொல்லப்படும் T12 புலியைப் போலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓர் உண்மைச் சம்பவம் நடந்துள்ளது. சொல்லப்போனால் அந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலே இக்கதை அமைந்துள்ளது எனலாம்.

'அவ்னி'யின் கதை: மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத் மாவட்டத்தில் இருக்கிறது பந்தர்கவாடா. அங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள திபேஸ்வர் வனவிலங்கு சரணலாயத்தில் 9 புலிகள் வாழ்கின்றன. 13 பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியாக அறிவிக்கப்பட்ட புலியின் பெயர்தான் 'அவ்னி'. 170 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியில் அவ்னியை தவிர, மேலும் ஓர் ஆண்புலியும், பெண் புலியும் இருந்ததாக கூறப்பட்டது. அந்த வனத்தை ஒட்டி 18 கிராமங்கள், விளைநிலங்கள் இருக்கின்றன. 2016-ஆம் ஆண்டு வரை புலியால் யாரும் தாக்கப்படவில்லை. ஆனால் 2016 ஜூன் முதல் தேதியில் அவ்னியால் ஒருவர் தாக்கப்பட்டார். அதுதான் முதல் தாக்குதல். இதுவரை புலிகள் இல்லை என கூறப்பட்ட வந்த வனப்பகுதியில், புலி நாடமாட்டம் கண்டறியப்பட்டு, வனத்துறையினால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அடுத்த 3 மாதங்கள் புலியின் நடமாட்டம் இல்லை என்று சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிறகு செப்டம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் தொடரச்சியாக 2 நபர்கள், புலியால் தாக்கப்பட்டனர். அக்டோபர் மாதத்தில் விளைநிலத்திலேயே ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் மக்களிடையே பெரும் பீதியைக் கிளம்பியது.

இதனையடுத்து, வனப்பகுதியில் ஒட்டியுள்ள கிராம மக்கள் அனைவரும் இரவும் பகலுமாக கிராமத்தை பாதுகாத்து வந்தனர். அடுத்த 9 மாதங்களுக்கு எந்தவித துர்சம்பவமும் நடக்கவில்லை. 2017 செப்டம்பர் மாதத்தில் 5 வேட்டைகள் நடந்தன; ஆக்டோபர், டிசம்பர் மற்றும் 2018 ஜனவரி என தொடர்ச்சியாக 5 பேர் இறந்தனர். இது மட்டும் அல்லாமல் ஆகஸ்ட் 4,10,28 தேதிகளில் அடுத்தடுத்து 3 பேர் புலியால் பலியாகினர். இதில் அவ்னி புலியால் 5 பேர் இறந்தது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இங்கு கவனிக்க வேண்டியவை: பலியான அனைவருமே கால்நடைகளை மேய்ச்சலுக்காக காட்டுக்குள் அழைத்துச் சென்றவர்கள். மக்கள் காட்டுக்குள் செல்வது வனவிலங்குகளுக்கு மனரீதியாக பாதிப்பை அடைய செய்திருக்கலாம். அவை தற்காப்புக்காக முதலில் தாக்கியிருக்கலாம். இவற்றில் கவனிக்க வேண்டியவை, புலியால் நடத்தப்பட்ட 13 தாக்குதலில் 11 சம்பவங்கள் வனப்பகுதியில் நடந்தவை. மற்ற இரண்டு மட்டும் விளைநிலங்களில் நடந்தவை என கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவ்னியை கொல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தத் தொடங்கினர். அப்புலியை கொல்லவும் உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2019 ஜனவரி மாதத்தில் அவ்னி கர்ப்பமாக இருப்பது வந்தது. அதனைத் தொடர்ந்து 31-ஆம் தேதி உயிருடன் பிடித்தால் மட்டும் போதும் என உத்தரவு தளர்த்தப்பட்டது. பிப்ரவரி மாத இறுதியில் தனது இரு குட்டிகளுடன் அவ்னி வலம் வருவதை ட்ரோன் மூலம் அறிந்த வனத்துறை, இந்த சூழ்நிலையில் பிடிப்பது கடினம் எனக் கூறியது. மேலும் அவ்னியை பிடிக்க முயன்றால், குட்டிகளுக்கு ஆபத்தும் நேரிடும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தினர். அதேசமயம், ஆகஸ்ட் மாதத்தில் 3 தாக்குதல்கள் அவ்னியால் நடத்தப்பட்டது. நிலைமையே தலை கீழாக மாறியது. அப்புலி மனித வாசத்தையும், மாமிசத்தை உணரப் பழகி இருக்கும். மேலும் குட்டிகளும் தாயுடன் சுற்றுவதால் அவையும் மனித வாடையை பழகியிருக்க வாய்ப்புகள் இருக்கும் என அவற்றைப் பிடிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

செப்டம்பர் 6-ல் விலங்கு நல ஆர்வலர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், செப் 11-ஆம் தேதி அவ்வழக்கை தள்ளுபடி செய்து அவ்னி புலியை மேன் ஈட்டராக (Man Eater) அறிவித்தது நீதிமன்றம். மேலும், புலியை உயிருடன் பிடிக்க வேண்டும். முடியவில்லை என்றால் சுட்டுக்கொல்லாம் என் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்புக்கு விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அவ்னிக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டது #saveforavni #saveavni #savetigers என்ற ஹேஷ்டேக்குகளுடன் டிரெண்ட் செய்யப்பட்டன.

வன உயிர் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருந்தபோதிலும் ஹைதராபாத் ஷாபாத் அலி கான் எனும் வேட்டைக்காரர் அழைக்கப்பட்டார். இவர் வன விலங்குகளை வேட்டையாடுவதை ரசித்து செய்வாராம். 'அவரிடம் இந்த புராஜெக்ட்டை கொடுத்தால் கண்டிப்பாக கொன்று விடுவார். அவ்னியை உயிருடன் பிடிக்க வாய்ப்பு கிடைத்தால்கூட அதைக்கூட செய்யமாட்டார்' என்ற பேச்சு எழுந்தது.

அவ்னி விஷயத்தில் இரு வேட்டைகளைத் தவிர மற்ற அனைத்துமே வனப்பகுதியில் நடந்தவை. இதில் அவள் மாமிச உண்ணியாக மாறி இருப்பதற்கான தக்க ஆதாரங்கள் இல்லை என வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

200 வனக் காவலர்கள், 2 டிரோன் கேமராக்கள், இருவர் பயணிக்கும் பாராகிளைடர், புலித் தடங்களை மோப்பம் பிடிக்க இத்தாலிய வகை வேட்டை நாய்கள், 90 கேமரா டிராப்புகள் என பெரும் படையோடு அவ்னியை 45 நாட்கள் தேடி அலைந்துள்ளனர். அப்போதும் அவள் பிடிபடவில்லை. ஒரு மாவட்டத்தையே தனக்குப் பின்னால் ஓட விட்டு தன் குட்டிகளுடன் வனப்பகுதியில் உலா வந்து கொண்டிருந்தாள் அவ்னி.

கிட்டதட்ட மூன்று மாதங்கள் வனத்துறையினால் தேடப்பட்ட அவ்னி புலி, நவம்பர் 2 அன்று வனத்துறையின் உதவியுடன் ஹைதராபாத்தை சேர்ந்த ஷாஃபத் அலி கான் எனும் வேட்டைக்காரரால் சுட்டுகொல்லப்பட்டது. கொல்லப்பட்ட 13 பேரின் உடல்களில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு இருந்த நிலையில், 5 பேரின் உடலில் அவ்னியின் டி.என்.ஏ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒருவரது உடலில் அதேப் பகுதியை சேர்ந்த மற்றோரு புலியின் டி.என்.ஏ இருந்துள்ளது. அதேவேளையில், வேட்டைக்காரர் அவ்னியை சுடும்போது வனத்துறையினரோ, மருத்துவர்களோ உடன் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதன்முலம் அவ்னியை உயிருடன் பிடிக்க வனத்துறை சார்பில் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என புகார்கள் எழுந்து சர்ச்சைக்குள்ளானது என்பது குறப்பிடத்தக்கது.

சூழலியல் ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

'அவ்னி வேட்டையாடப்பட்டதற்கு மிக முக்கிய காரணம், மனித - விலங்கு மோதல் என சொல்லப்படுகிறது. வனவிலங்கு வாழ்விடங்களை மனிதர்களின் வளர்ச்சித் திட்டங்களால் துண்டாடப்படுவது, விலங்குகள் வாழக்கூடிய இடத்தில் வளர்ச்சித் திட்டங்களை புகுத்துவது, உதாரணமாக ரயில்வே பாலங்கள், சாலைகள் போடுவது என சொல்லிக்கொண்டே போலாம்.

முதலில் எந்த புலியையுமே 'மேன் ஈட்டர்' என்று சொல்லக்கூடாது. சொல்லவும் முடியாது. அதன் வாழிடத்தில் தொடர்ந்து நடக்கும் மனித தலையீடுகளால் தனது இருப்பிடத்தை காத்திட மிரட்டுகிறது. ஒரு வாழிடத்திற்குள் வேறு ஒரு புலி வந்தாலே சண்டை நிகழும். அப்படி இருக்க, மனிதர்கள் ஓயாமல் வந்து தொந்தரவு செய்தால் தாக்குதல் ஏற்படத்தான் செய்யும். அதுபோக, கால்நடைகள் மேய்ச்சல் மூலம் தாவரங்களைத் தீர்ந்து விடுவதும், அதன் பற்றாக்குறை காரணமாகவே வனவிலங்குகள் வயல்வெளிக்கு வருகின்றன.
புலிகள் போன்ற வேட்டையாடி விலங்குகள் உணவில்லாமல் ஊருக்குள் உணவு தேடி வந்துவிடுகின்றன. இதைப் புரிந்துகொண்டு அதற்கான வாழ்விடத்தை அமைத்து கொடுக்க வேண்டுமே தவிர, அதனை சுட்டுக் கொல்லக்கூடாது. Core zone எனப்படும் அடர்ந்த வனப்பகுதியில் மக்களுக்கு என்ன வேலை? மேலும், Buffer zone வனத்திற்கு அருகிலேயே விளைநிலங்களை அமைத்தது யாருடைய தவறு?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இதுமாதிரியான சம்பவங்கள் நடந்ததில்லை. வட இந்தியாவை பொறுத்தவரை மக்களின் அறியாமையே பல பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது' என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.

அவ்னி குறித்த புரிதலுடன் ஷேர்னி படத்தைப் பாருங்களேன்.

- ஆர்.கெளசல்யா