சிறப்புக் களம்

'மீம்' மக்களின் கிரியேட்டிவிட்டியைத் தூண்டிவிட்ட 'சார்ப்பட்டா வாத்தியாரே' சைக்கிள் காட்சி!

'மீம்' மக்களின் கிரியேட்டிவிட்டியைத் தூண்டிவிட்ட 'சார்ப்பட்டா வாத்தியாரே' சைக்கிள் காட்சி!

நிவேதா ஜெகராஜா

டிஜிட்டல் யுகத்தில் மீம்ஸ்களின் உலகம் எப்போதும் அலாதியானது. ஒரு போட்டோ, சில வார்த்தைகள்... அவ்வளவுதான். ரசித்துக்கொண்டே இருக்கலாம். துக்கமோ, கவலையோ, கோபமோ ஒரு நொடியில் எல்லாவற்றையும் உடைத்துச் சிரிக்கவைக்கும் மருந்துகள்தான் மீம்ஸ்கள். அப்படியாக நேசமணி மீம்ஸுக்கு பிறகு, அனைத்து தரப்பினரையும் கவர்ந்து ரசிக்க வைக்கிறது 'வாத்தியாரே' மீம்ஸ்.

அமேசான் பிரைமில் வெளியான 'சார்பாட்ட பரம்பரை'யின் மீம் டெம்ப்ளெட்டை, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே தனது புகழ்பெற்ற 'மணி ஹெயிஸ்ட்' சீரிஸ் ப்ரோமோஷனுக்கு பயன்படுத்தும் அளவுக்கு, 'வாத்தியாரே' மீம்ஸை பிரபலமாக்கியிருக்கிறார்கள் நம் மீம் கிரியேட்டர்கள்.

தமிழ்நாட்டில் சுமார் மூஞ்சி குமாருக்கு பிறகு, வாத்தியாரை அதிகம் டார்ச்சர் செய்தது என்னமோ கபிலன்தான். 'வரமாட்டேன்' என்று கூறி ஒதுங்கிய வாத்தியாரை 'வான்டடாக' சைக்கிளில் ஏற்றியது கபிலன் என்றால், கபிலனையும் சேர்த்து டைனோசர் முதுகில் ஏற்றியிருக்கிறார்கள் 'மீம்ஸ் மன்னர்கள்'.

குறிப்பாக 'சார்பட்டா பரம்பரை' படத்தில் வரும் அந்தக் காட்சியில், ரங்கன் வாத்தியார் கடும் கோபத்தில் இருப்பார். தன்னை ஏமாற்றிய ராமனை பார்க்க அவசர அவசரமாக கிளம்புவார். அப்போதுதான் கபிலன் அவரை சைக்களில் ஏற்றிக்கொள்வான். அப்படியான சீரியஸ் காட்சி அது. சொல்லப்போனால், அந்தக் காட்சியை எழுதும்போது, இந்த அளவுக்கு டிரெண்டாகும் என ரஞ்சித் துளியும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அப்படியொரு காட்சியை தேர்வு செய்து, அதை மக்கள் ரசிப்பார்கள் என கணித்ததில் இருக்கிறது ஒட்டுமொத்த மீமர்களின் கிரியேட்டிவிட்டி!

குறிப்பிட்ட டெம்ப்ளேட்டுக்குள் வார்த்தைகளை சுருக்கி, படத்தை பொருத்தி மீம் ஒன்றை உருவாக்கிய பின்னர், அதை பார்த்துவிட்டு, ஸ்க்ரோல் செய்வதில் இருக்கிறது ஒரு மீமின் தோல்வி. அந்த ஸ்க்ரோலில் கரைந்துவிடுகிறது மீம் கிரியேட்டியரின் ஒட்டுமொத்த உழைப்பும்.

இதனிடையே, மக்களின் உளவியல் சார்ந்து, அவர்கள் விருப்பத்தையொட்டி, மீமை உருவாக்கி, `இது டிரெண்டாகும்' என கணிப்பதற்கு அசாதாரணமான திறன் தேவைப்படுகிறது. ரங்கன் வாத்தியார் சீரியஸாக இருக்கும் அந்தக் காட்சியில், சைக்கிளில் பெடல் மிதிக்கும் கபிலன் மட்டுமே பேசிக்கொண்டிருப்பான். பதிலுக்கு ரங்கன் வாத்தியாரிடமிருந்து பதில் இருக்காது. அதுவும் கூட இந்த மீமுக்கு கச்சிதமாக பொருந்திப் போகிறது.

'வாத்தியாரே கைய விட்டு ஓட்டவா?' 'வாத்தியாரே லாரில விடணும்போல இருக்கு விடட்டுமா?' 'வாத்தியாரே நம்ம பாட்டுக்கு மாஸ்க் போடாம போறோம்' - இப்படியான கபிலனின் ஒரு சில வரிகளும் அந்தக் காட்சியே இணையத்தில் உலாவும் மீமின் மிகப்பெரிய வெற்றி.

ஆக, 'சார்பட்டா பரம்பரை' படம் வந்தாலும் வந்தது, தமிழ் மீம் கிரியேட்டர்கள் ஒரே பிஸிதான். படத்தின் ஒவ்வொரு சீனையும் அக்குவேர், ஆணிவேராக பிரித்து ரீ கிரியேட் செய்ய தொடங்கிவிட்டனர். யூடியூப் சேனல் முதல் ட்விட்டர் வரை இந்தப் படத்தின் தாக்கம்தான்.

அதிலும், வேம்புலியை சண்டைக்கு அழைக்கும் சீனை வீடியோ கிரியேட்டர்கள் கையிலெடுக்க, மீம்ஸ் கிரியேட்டர்களோ ரங்கன் வாத்தியாரை ஒரு கை பார்த்துவருகின்றனர். ரங்கன் வாத்தியாரை கபிலன் சைக்கிளில் அழைத்துச் செல்லும் மீம் டெம்ப்ளேட்தான் கடந்த சில நாள்களாக தமிழ் இணைய உலகின் ட்ரெண்டிங்.

சினிமாவில் தொடங்கி அரசியல், விளையாட்டு என உலகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களிலும் வாத்தியார் மீம்ஸ்தான். சென்னை மழை முதல் 'ஆம்பள' படத்தில் விஷால் பறக்கும் காட்சி வரை ரங்கன் வாத்தியாரை வைத்து வெளியான பிரபல மீம்ஸ்களின் சிறிய தொகுப்பு இதோ...

அவதார்: சைக்கிளில் செல்வது போல் கபிலனும், ரங்கன் வாத்தியாரும் அவதார் பறவை மேல பறப்பது போன்ற மீம் வைரலாகி வருகிறது.

அஜித் மீம்: அஜித் சைக்கிளிங் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, 'வாத்தியாரே அங்க பாரு தல... வா போய் பாத்துட்டு வருவோம்' என ஆர்யா கூறுவதுபோல் மீம்ஸ் ஒன்று வைரலாகி உள்ளது.

டைனோசர்: ஆர்யாவும் பசுபதியும் டைனோசர் மேல் உட்கார்ந்து செல்வதுபோல் ஒரு மீம் இது.

கிட்டார் கம்பி: 'நவராசா'வின் 'கிட்டார் கம்பி' ரெஃபரென்ஸ் வைத்த மீம் இணையத்தை கலக்குகிறது.

வெற்றிக்கொடி கட்டு: 'வெற்றிக்கொடி கட்டு' பார்த்திபன் - வடிவேல் காமெடி பாணியில் இந்த மீம் வைரலாகி வருகிறது.

பிராக் லெஸ்னர் மீம்: 'வாத்தியாரே வேம்புலி அடிக்கிறது ஒரு மேட்டரே இல்ல... இந்த பிராக் லெஸ்னர் அடிக்கணும்" என்று ரெஸ்லிங்க் போட்டிகளை மையப்படுத்திய மீம் இது.

குற்றாலம்: குற்றாலம் அருவி வரைக்கும் ஆர்யாவும், பசுபதியும் சைக்கிளில் செல்வதை போன்ற மீம் நெட்டிசன்களை கவர்ந்துளளது.

வாத்தியார் வித் வாத்தியார்: 'மாஸ்டர்' வாத்தியார் விஜய், பசுபதியை சைக்கிளில் ஏற்றி செல்வதை போல மீம் இது.

இதுபோல பல மீம்ஸ் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. சினிமா செலிபிரிட்டிகளும் தங்கள் பங்குக்கு வாத்தியார் டெம்பிளேட்டில் கலக்கத் தொடங்கி இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் முதல் பலர் இதில் அடக்கம்.