சிறப்புக் களம்

"ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்துங்கள்" - மாநிலங்களவை விவாதத்தின் முக்கிய அம்சங்கள்

webteam

இடஒதுக்கீட்டுக்கான 50 சதவிகித உச்சவரம்பை நீக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் புதன்கிழமை மாநிலங்களவையில் வலியுறுத்தின. ஓபிசி மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

ஓபிசி மசோதா என்பதால் மழைக்கால கூட்டத்தொடரில் முதன்முறையாக புதன்கிழமை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றன. இதுவரை இந்தக் கூட்டத்தொடரில் எந்த ஒரு மசோதா மீதான விவாதத்திலும் எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய காட்சிகள் ஆட்சி நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகள் 'அரசியல் சாசனம் 127-வது திருத்தம்' மசோதாவை ஆதரித்தன. இதனாலேயே மழைக்கால கூட்டத்தொடரில் ஆரம்பம் முதல் தொடர்ந்த முழக்கங்களை நிறுத்திக்கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓபிசி பட்டியலை முடிவு செய்வதற்கான அதிகாரம் உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் இந்த முக்கிய மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றன.

விவாதத்தில் பேசப்பட்டது என்ன?

திமுகவின் திருச்சி சிவா இந்த விவாதத்தில் பங்கேற்று, "இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை அதிகரித்தால் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி கிடைக்கும். தமிழ்நாட்டில் பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்றோரின் விடாமுயற்சியால் பிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதல் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு செய்தத் தவறின் காரணமாகவே சட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. அந்தத் தவறு தற்போது சரி செய்யப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக 617 ஓபிசி சமுதாயங்கள் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவானது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து இடஒதுக்கீடு சரியான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்" என்றார் திருச்சி சிவா.

காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி, "சட்டத்தில் குழப்பம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இந்த மசோதா இன்றியமையாதது. மாநிலங்களுக்கு ஓபிசி பட்டியலை முடிவு செய்யும் அதிகாரத்துடன் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் உரிமையும் அளிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் தேவ கௌடா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரைன், சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக விவாதத்தில் பங்கேற்றனர்.

அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் மற்றும் தம்பிதுரை விவாதத்தில் பங்கேற்று, "தமிழ்நாடு இடஒதுக்கீடு விவகாரத்தில் முன்னோடி" என பதிவு செய்தனர். "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமூக நீதிக்காக பாடுபட்டார். அதேபோல பிரதமர் மோடியும் சமூக நீதி காக்கும் நடவடிக்கைகளில் விரைந்து செயல்படுகிறார்" என்று தம்பிதுரை பேசினார்.

தமிழ்நாடு போலவே பல மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேசியவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பல முடிவுகளை எடுக்கும் அதிகாரத்துடன் இருந்தாலும் அத்தகைய முடிவுகளை எடுக்காமல் பிறரை குறை கூறுவதாக பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் மசோதா என்பதால் வாக்கெடுப்பு நடத்தி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரில் இரண்டு அவைகளின் ஒப்புதலையும் பெற்ற முக்கிய சட்டத் திருத்தமாக ஓபிசி மசோதா கருதப்படுகிறது.

இந்தச் சட்டத்திருத்தம் அரசாணையில் வெளியிடப்பட்ட பிறகு மகாராஷ்டிர அரசு மீண்டும் "மராத்தா இடஒதுக்கீடு" கோரிக்கையை அமல்படுத்த மீண்டும் முயற்சி செய்யும் என மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓபிசி மசோதா ஏன்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என சிவாசேனா உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் வலியுறுத்தி வந்தன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தங்களுடைய மாநிலத்திலேயே ஓபிசி பட்டியலை முடிவு செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்தபோதிலும், உச்சநீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் அளித்த தீர்ப்பில் மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்த இடஒதுக்கீட்டை ரத்து செய்திருந்தது.

அசாதாரணமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே, இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை மீறலாம் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி வருவது ஒருபக்கம் இருந்தாலும், மாநில அரசுகளுக்கு ஓபிசி பட்டியலை மாற்றியமைக்க சட்டத்தில் இடமில்லை என்ற தீர்ப்பளித்தது, அரசியல் ரீதியாக சலசலப்பை உண்டாக்கியிருந்தது. இதனால், மாநில அரசுகளால் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்ட சமுதாயங்களை இடஒதுக்கீடு பறிபோகுமா என்ற கவலையை இந்த சட்டத் திருத்தம் மூலம் மத்திய அரசு நீக்கியுள்ளது.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கு தனித்தனி ஓபிசி பட்டியல் உள்ள நிலையில், சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களுடைய பட்டியலை அமல்படுத்தலாம் என்பது மசோதாவின் சாரம். மத்திய அரசுதான் ஓபிசி பட்டியலில் மாற்றங்களை செய்யமுடியும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலைப்பாட்டை மாற்றவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களின் ஓபிசி பட்டியல் மத்திய அரசின் மூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று, குடியரசு தலைவரின் கையொப்பத்துடன் வெளிவர வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு அல்ல என என்பது சட்டத் திருத்தத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இந்த மசோதா நாடாளுமன்ற ஒப்புதலை பெற்ற பிறகு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் எந்த குழப்பமும் இன்றி தங்கள் ஓபிசி பட்டியலை மாற்றியமைக்கலாம்.

- கணபதி சுப்பிரமணியம்