தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான 2 காலி இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
இந்திய நாடாளுமன்றம் மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக் சபா) என்ற இரு சட்ட அவைகளை கொண்டுள்ளது. மக்களவை உறுப்பினர்கள், மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் முறையே 6 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 80ன் படி மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 238 பேர் தேர்தல் மூலமும், மீதியுள்ள 12 பேர் நியமனம் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குடியரசுத் துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவர் ஆவார்.
மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும். அவ்வாறு நிறைவடையும் உறுப்பினர்களின் பதவிகளுக்கு அவ்வப்போது இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். இந்த தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையில் நடைபெறும். அதன்படி ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெற வேண்டும். இந்தக் குறிப்பிட்ட அளவு வாக்குகள், அதற்கென்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அளவீடு மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு 100 வாக்குகளாக கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் அவசியமாகிறது.
யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை தேர்தல் குழு, உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 7 யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு மட்டுமே மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் உண்டு. எஞ்சிய 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற யூனியன் பிரதேசங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியக் குடிமகனாகவும் 30 வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது. குற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.
மாநிலங்களவை ஏப்ரல் 3, 1952 அன்று நடைமுறைக்கு வந்தது. அதன் முதல் கூட்டம், அதே ஆண்டு மே 13 அன்று நடைபெற்றது. இந்திய அரசமைப்புச் சட்டம், மக்களவை, மாநிலங்களவை இரண்டுக்கும் இடையே சட்டப்படி அதிகாரச் சமநிலையை வழங்கியிருந்தாலும், சில விஷயங்களில் விதிவிலக்குகளையும் அளிக்கிறது. பண மசோதா அல்லது நிதி மசோதாக்கள் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே மானியக் கோரிக்கைகளுக்கும் மக்களவையே அனுமதியளிக்க வேண்டும்.
இன்னொரு பக்கம், மாநிலங்களவை சில சிறப்பு அதிகாரங்களையும் கொண்டிருக்கிறது. மாநிலப் பட்டியலில் அடங்கியுள்ள விஷயங்களின் மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கும், அனைத்திந்திய அரசுப் பணிகளை உருவாக்கவும் மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம். ஒவ்வொரு மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் அது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், மக்களவை கலைக்கப்பட்டிருக்கும்போது நெருக்கடி நிலையையும் குடியரசுத் தலைவரின் ஆட்சியையும் அறிவிப்பதற்கு மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
*அரசாங்கக் கொள்கைத் திட்டங்கள் மீது விளக்கம் கேட்கலாம் வினா எழுப்பலாம், விவாதிக்கலாம்.
*சட்டத் திருத்தம் செய்ய மாநிலங்களவையின் ஒப்புதல் கட்டாயம் தேவை. இவையன்றி இரு அவைகளின் ஒப்புதலோடு மட்டுமே துணை ஜனாதிபதி தேர்தல், நெருக்கடி நிலை, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீக்குதல் போன்ற நடவடிக்கை எடுக்க முடியும்.
*மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் அதிகாரம் உண்டு.
*ஷரத்து 312ன் படி புதிய இந்தியப் பணிகளை உருவாக்கலாம். அதை நெறிப்படுத்தும் அதிகாரம் உண்டு. ஷரத்து 249ன் படி மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரம் ஒன்றின்மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கலாம்
*குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உண்டு. இரு அவைகளின் ஒப்புதலுடன் நீக்க முடியும்.
*மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். மக்களவை நெருக்கடி நிலைக்கு ஆளாகி கலைக்கப்பட்டாலும் கூட மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டு ஆட்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்.
*மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை