சிறப்புக் களம்

ஐ.என்.எஸ். விராத்தை சொந்த டாக்சியாக உபயோகித்தாரா ராஜீவ் காந்தி? - அலசல்

ஐ.என்.எஸ். விராத்தை சொந்த டாக்சியாக உபயோகித்தாரா ராஜீவ் காந்தி? - அலசல்

webteam

ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜீவ் காந்தி குறித்த பேச்சு இந்தியாவில் ஒலிக்கிறது. இம்முறை மிகத் தீவிரமாக அவரது அரசு விமர்சிக்கப்படுகிறது. இதற்கு கண்டிப்பாக அவர் பதில் கூறப்போவதில்லை. ஆனாலும் தேர்தல் அரசியலால், ராஜீவ் காந்தி குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். அவர் மீது விமர்சனங்கள் குவிகின்றன. 

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை குற்றம் சாட்டி, “சௌகிதார் ஜோர் ஹே” என்ற விமர்சனத்தை ராகுல் காந்தி முன்னெடுத்தார். அதற்கு பழி தீர்க்கும் வகையில் கூட, ராஜீவ் காந்தியின் அரசு மீதான விமர்சனத்தை மோடி முன்னெடுத்திருக்கலாம். ஏனெனில் நேரு பதில் சொல்ல மாட்டார் என்று தெரிந்தும் இந்தியாவின் நிலைமைக்கு நேருவே காரணம் என்று கடுமையாக விமர்சித்தவர் அவர். 

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி “ இந்தியாவின் போர்க்கப்பல்களில் ஒன்றாக ஐ.என்.எஸ். விராத்தை தன்னுடைய டாக்சி போல ராஜீவ் காந்தி பயன்படுத்தினார். அவர் சென்றது மட்டுமல்லாமல் இத்தாலியில் இருந்து வந்த சிலரையும் விடுமுறைக்காக அழைத்துச் சென்றார்” எனக் கடுமையாக சாடினார். 

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு காங்கிரஸ் கட்சியை கொதிப்படையச் செய்தது. சமூக வலைத்தளங்கள் ராஜீவ் காந்தியின் பெயரை உச்சரிக்க தொடங்கின. மோடிக்கு ஆதரவாக கருத்துக்களும், ராஜீவ் காந்திக்கு ஆதரவாக கருத்துக்களும் பதிவேற்றப்பட்டன. ஆரம்பத்தில் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத காங்கிரஸ், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் மூலம் விளக்கம் கொடுத்தது. 

அட்மிரல் தனது விளக்கத்தில் “ ராஜீவ் காந்தி தனது சொந்த தேவைகளுக்காக போர்க்கப்பலை பயன்படுத்தினார் எனக் கூறுவது பொய்யான தகவல், அவர் அலுவல் ரீதியில் போர்க்கப்பலில் பயணம் செய்தார். மேலும் லட்சத் தீவுகளுக்குச் செல்ல அவருக்கு ஹெலிகாப்டர்கள் கொடுக்கப்பட்டன. ஒரு பிரதமர் என்ற முறையில் அங்குள்ள அதிகாரிகளை சந்திக்க சென்றார். இதில் எந்த விதிமீறலும் இல்லை, சொந்த தேவையும் இல்லை. மேலும் நிகழ்ச்சி ஒன்றின் தலைமை தாங்கவே அவர் போர்க்கப்பல் மூலம் பயணித்தார்” எனக் கூறியிருந்தார். 

அதே நேரத்தில் கடற்படை அதிகாரிகள் சிலர், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு உண்மை எனவும் கூறியிருக்கிறார்கள். முன்னாள் நேவி கமாண்டர் விகே ஜெட்லி கூறும் போது “இந்தியக் கடற்படையின் கப்பல் , மற்ற வசதிகளை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ , அந்த அளவுக்கு ராஜீவ் காந்தியும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தினார்கள். அதற்கு நானே சாட்சி, ஏனெனில் அந்தச் சமயத்தில் ஐ.என்.எஸ். விராத்தில் நான் பணியமர்த்தப்பட்டிருந்தேன்” என்று கூறினார். 

மற்றொரு கடற்படை அதிகாரியான ஹரிந்தர் ஷிக்கா “எங்களால் ஏதும் பேச முடியவில்லை, நாங்கள் அமைதியாக இருக்க உத்தரவிடப்பட்டோம், பிரதமர் மட்டும் என்றால் கூட ஓகே, ஆனால் அவரது மனைவி, வெளிநாட்டை சேர்ந்த சிலர் எனப் பலரும்  இருந்தார்கள். எங்கள் யாருக்கும் உள்ளே செல்ல அனுமதியில்லை; ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறை வரை சென்றார்கள். ஜாலியாக போர்க்கப்பல் முழுக்க சுற்றி திரிந்தார்கள்” என்றார். 

தொடர்ந்து வெளிநாட்டினர் போர்க்கப்பலில் இருந்ததாக இவர்கள் கூறினாலும் , ஐ.என்.எஸ். விராத்தின் கேப்டன் வைஸ் அட்மிரல் வினோத் பஸ்ரிச்சா கூறும் போது “ போர்க்கப்பலில் பிரதமரும் அவரது மனைவி மற்றும் மகன் மட்டுமே இருந்தனர். அவர்களோடு மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். வெளிநாட்டினர் யாரும் பயணிக்கவில்லை; தனது சொந்த டாக்சி போன்று பயன்படுத்தினார் எனக் கூறுவது முழுக்க பொய், பிரதமர் எங்களோடு 2 நாள்கள் இருந்தார், அவருக்கு நாங்கள் உணவளித்தோம், லட்சத்தீவுகளுக்குச் சென்ற போது கூட, ராகுலை அவர் அழைத்துச் செல்லவில்லை” எனக் கூறினார். மேலும் போர்க்கப்பல்களில் பிரதமர்கள் செல்வது எப்போதும் நடக்க கூடிய ஒன்று, பிரதமர் மோடிக்கு அது தெரியுமே” என்றும் தெரிவித்தார். 

இவர்கள் கூறுவதில் இருந்து நாம் உறுதியாக தெரிந்து கொள்ளக் கூடிய விஷயம் ஒன்று மட்டுமே. அது ராஜீவ் காந்தி ஐ.என்.எஸ். விராத்தில் பயணித்தார் என்பது. ஆனால் மற்ற விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சாட்சிகளாக இவர்கள் நிற்கிறார்கள். இதில் எது உண்மை, எது பொய் என்பதை எப்படி அறிந்து கொள்வது ? வேண்டுமானால் ராஜீவ் காந்தி மேல் ஒரு விசாரணை குழு அமைக்கலாம். ஆனால் அவர்கள் யாரை விசாரிப்பார்கள் என்பதற்கு பதிலில்லை. ஏனெனில் ஐ.என்.எஸ் விராத் கடற்படையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு வருடங்கள் ஆகிறது. 

இந்நிலையில் தி இந்தியன் எக்பிரஸ் நாளிதழ், ராஜீவ் காந்தியின் லட்சத்தீவு பயணம் குறித்து எழுதியிருக்கிறது. பிரதமர் வைத்த விமர்சனம், அதன் பின்னர் நடந்த விஷயங்களை எல்லாம் வைத்து, அவர்கள் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். 

டிசம்பர் 16, 1987ம் ஆண்டு வெளிவந்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் “ கடந்த ஆண்டு அந்தமானின் புது வருடத்தை கொண்டாடிய ராஜீவ் காந்தி, இந்த ஆண்டு லட்சத்தீவுகளில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களோடு கொண்டாட இருக்கிறார் , இதற்காக பாதுகாப்பாளர்கள், ஒப்பந்ததாரர்கள், காங்கிரஸ் தலைவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பின் ஒரு வாரம் அங்கு இருப்பார்கள்” எனக் கூறப்பட்டது. 

டிசம்பர் 28, 1987 அன்று வெளியான செய்தியில் “ பிரதமர் ராஜீவ் காந்தி பயணத்துக்காக 4 மாதங்கள் முன்பிருந்தே தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் லட்சத்தீவுகள் செல்ல பொதுமக்கள் தடை விதித்து வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் லட்சத்தீவு செல்வதற்கான கப்பல் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.அதில் சில டிக்கெட்டுகள் அமைச்சர்கள், அதிகாரிகள் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 15-ம் தேதி வரை யாரும் செல்ல வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இது குறித்து கேட்டபொழுது “ புதுவருட கொண்டாட்டம் காரணமாக முன்கூட்டியே பலரும் லட்சத்தீவு செல்ல முன்பதிவு செய்ததால், புதிதாக யாரும் செல்ல முடியாத சூழல் என விளக்கம் கொடுக்கப்பட்டது” எனக் கூறப்பட்டது. 

டிசம்பர் 29, 1987ல் வெளியான செய்தியில் “ மத்திய அமைச்சர்கள் , அதிகாரிகள் வருவதையோ , ஏன் பிரதமர் வருவதையோ கூட லட்சத்தீவு நிர்வாகத்துக்கு கூறவில்லை ; அதோடு மிகப்பெரிய அளவில் பால் பாயாசம் திருவனந்தபுரத்தில் லட்சத்தீவுகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது” எனச் செய்தி வந்தது. இது கொச்சி பதிப்பில் வெளியானது. 

டிசம்பர் 30, 1987 அன்று வெளியான செய்தியில் “ பிரதமர் ராஜீவ் காந்தி தனது விடுமுறைக்காக பங்காராம் தீவை தேர்வு செய்துள்ளார், லட்சத்தீவுகளில் இங்கு மட்டுமே மது வகைகள் உட்கொள்ள அனுமதி உண்டு. இதிலிருந்து புதுவருட கொண்டாட்டத்திற்கு பிரதமர் திட்டமிட்டுள்ளது தெரிகிறது” எனக் கூறப்பட்டது. 

ஜனவரி 24, 1988 அன்று வெளியான செய்தியில் “ 8 வெளிநாட்டினர் உட்பட 24 பேர் கொண்ட குழு, பிரதமரின் விருந்தில் பங்கேற்றது. இதற்காக மது வகைகள், சிறப்பு உணவுகள் கேரளாவில் இருந்து வான்வழியாக அனுப்பப்பட்டது. அதோடு விருந்துக்காக 70 பேர் கொண்ட குழு செயல்பட்டது. அத்தோடு சுமார் 1200 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். மேலும் ஐ.என்.எஸ் விராத், ஐ.என்.எஸ். விந்தியகிரி. ஐ.என்.எஸ். தாராகிரி ஆகிய போர்க் கப்பல்களும் தீவுகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் தனிச் செயலர் ஜார்ஜ், மணி சங்கர் ஐயர், சர்லா க்ரூவெல், எம்.எம்.ஜேக்கப் ஆகியோர் ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலில் தங்கியிருக்கின்றனர்” எனச் செய்தி வந்தது. 

ஜனவரி 24, 1988 அன்று வெளியான செய்தியில் “ பிரதமர் ராஜீவ் காந்தியின் விருந்தில் சோனியா, ராகுல், பிரியங்கா, அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா , குழந்தைகள் ஸ்வேதா, அபிஷேக், சோனியா காந்தியின் தாய், தங்கை, சோனியாவின் தோழி எனப் பலரும் கலந்து கொண்டனர்” என்று வெளியானது. 

எக்ஸ்பிரஸ் செய்தி அடிப்படையில் பார்த்தால், ராஜீவ் காந்தி தனது குடும்பத்தோடும் உறவினர்களோடும் லட்சத்தீவுகளில் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். ஆனால் போர்க்கப்பலில் இதுவெல்லாம் நடந்தது எந்த ஆதாரமும் இல்லை. அதே நேரத்தில்  
இந்தக் கொண்டாட்டத்திற்காக போர்க்கப்பல்கள் பாதுகாப்பில் இருந்தன என்பதையும் பார்க்க முடிகிறது. பிரதமர் கூறுவது போல், போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விராத்தை சொந்த டாக்சியாக ராஜீவ் காந்தி உபயோகித்தார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் அதிகாரிகள் சிலர் அதனை உண்மை என்றும் கூறுகிறார்கள். சிலர் பொய் என்றும் கூறுகிறார்கள்.