சொடுக்கு பந்தாட்டத்தால் தமிழகத்திற்கு மிடுக்கேற்றி வருபவர் ரவிச்சந்திர அஸ்வின். ஐபிஎல் மூலம் கிரிக்கெட்டில் அங்கீகாரம் பெற்றவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தரத்திற்கு தன்னை உயர்த்திக்கொண்டவர். டெஸ்ட் உலக அரங்கில் நம்பர் 1 இடம் பிடித்த இந்திய பவுலர். பல காலம் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையிலும் அஷ்வின் தான் நம்பர் ஒன். இவருக்கு புதிய தலைமுறை விளையாட்டுப்பிரிவிற்கான தமிழன் விருதை வழங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் விளையாடிய 2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் பந்துவீச்சில் ஆட்ட நாயகனாக அசத்தியவர் ரவிச்சந்திர அஸ்வின். டி20- போட்டிகளில் வெளிப்பட்ட அவரின் திறமை தேசிய அளவிலான போட்டிகளில் கோலோச்ச வழிவகுத்தது.
மற்ற வீரர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவது இவரது வித்தியாசமான பந்து வீச்சு. சொடுக்குப் பந்து என்ற தனித்துவமான முறையால் பந்தை வலது கையால் அடிப்பதிலும், வலது கையால் சுழற்றி வீசுவதிலும், உலக கிரிக்கெட் வீரர்களில் இருந்து தன்னை வேறுபடுத்தி, வெற்றி வாகை சூடி வருபவர் அஸ்வின் ரவிச்சந்திரன்.
2011-ல் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் அஸ்வின். 2016-இல் சர்கார்ஃபீல்டு சொபர்ஸ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2014 -ல் அர்ஜுனா விருது, 2013ல் ஐசிசி - டெஸ்ட் டீம் ஆஃப் தி இயர், 2012ல் பாலி உம்ரிகர் விருது, 2016ம் ஆண்டில் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டர், அதே ஆண்டில் ஐசிசி கிரிக்கெட்டர் விருதுகளை வென்று அசத்தியுள்ளார் அஸ்வின்.