"த்ரில்லர்" பட பிரியர்களாலும், கல்ட் கிளாசிக் திரைப்பட விரும்பிகள் இப்போதும் சிலாகித்து பார்த்து போற்றப்படும் படம் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்
இயக்கத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "சைக்கோ". எப்போதும், மக்கள் சைக்கோ கதாப்பாத்திரத்தில் உருவான திரைப்படங்களை விரும்பி பார்ப்பார்கள். உதாரணத்துக்கு தமிழில் கூட பாலுமகேந்திராவின் "மூடுபனி", பாரதிராஜாவின் "சிகப்பு ரோஜாக்கள்" ஆகியவை எப்போதும் வரவேற்புக்குள்ளான படங்கள். ஆனால், சைக்கோ தொடர்பான படங்களை வெள்ளித்திரையில் ஒரு பரபரப்புக்காக ரசிக்கும் நாம், நம் வீட்டில் அருகிலோ அல்லது நம்மூரில் எங்கோ நடக்கும் சைக்கோ கொலைகளை நாம் ரசிப்பதில்லை.
அண்மையில் கூட விழுப்புரத்தில் 13 வயதுச் சிறுமி, ரத்த வெள்ளத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்த போலீஸார், சைக்கோவின் கைவரிசையாக இருக்கும் என சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், சைக்கோ எதனால் எப்படி உருவாகுகிறார்கள் என நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா? சைக்கோக்களும் நம்மை போலத்தான் இருப்பார்கள். அவர்களும் சாதாரணமாக வேலைக்கு போவார்கள். அன்றாட வேலைகளை செய்வார்கள். ஆனால் எப்போது கொடூரங்களை நிகழ்த்துவார்கள் என யாருக்கும் தெரியாது.பெரும்பாலான மனோத்தத்துவ மருத்துவர்கள், நம் எல்லோருக்கும் உள்ளேயும் ஒரு சைக்கோத்தனம் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால், நமக்கும் அதனால் மிகையாக பாதிக்கப்பட்டவர்களுக்குமான சதவிதம் மாறுபடும், அதுதான் வித்தியாசம்.
ஒரு சாதாரண குழந்தை பின்னாளில் சைகோவாக மாற காரணங்கள் ?
மிக மோசமான பெற்றோர்கள் (எப்பவும் அடிக்கும் அப்பா; அடங்காப்பிடாரி அம்மா ),கேலி செய்யும், கூட சேராத பள்ளி நண்பர்கள், சிறுவயதில் பாலியல் தொந்தரவுகள் அல்லது கொலை போன்ற அசம்பாவிதங்களைக் காண நேருதல்,செக்ஸ் வாழ்கையில் கேள்விகுறி, வெகு சில தருணங்களில் மூளை கோளாறு இவைதான் முதல் கட்டமாக சைக்கோவாக மாறுவதற்கான முக்கியக் காரணிகள். மேலே குறிப்பிட்டுள்ள ஐந்தில் ஏதேனும் ரெண்டு இருந்தாலே சமுகத்திற்கு ஒரு சைகோ கில்லர் ரெடி.
ஏன் கொலை செய்கிறார்கள் ?
சிலர் செக்ஸூக்காக செய்கிறார்கள். சிலர் சில நிமிட மகிழ்ச்சிக்காக செய்கிறார்கள். சிலர் ‘அந்த நபரை (அல்லது பெண்ணை) பிடிக்கவில்லை அதனால் கொன்றேன்’என்கிறார்கள். என்னை வேறு சக்தி ஆட்கொண்டது, அது என்னிடம் ‘கொல் கொல்’ என்றது அதனால் கொன்றேன் என்கிறார்கள். அந்த நபரை பார்த்து ஏன் கொலை செய்தாய் என கேட்டால், எனக்குத் தெரியாது. நான் கண்விழித்து பார்த்த பிறகுதான் தெரிகிறது என் அருகே செத்து அவன் கிடக்கிறான் என்கிறார்கள். அந்த நபர் என்னை இடித்து விட்டு சாரி கேட்காமல் சென்றான் அதனால் கொன்றேன் என்கிறார்கள். ஆயிரம் காரணம் சொன்னாலும் கொலை செய்வது தவறு. ஒரு உயிர் அவர்கள் கைகளில் ஊசல் ஆடும்போது அவர்களுக்கு புரிவதில்லை. ஒரு பொம்மையை உடைக்கும் குழந்தையின் மனநிலையை ஒத்து இருக்கும் அவர்களின் மனநிலை.
சில சைக்கோ கொலைகாரர்களை கண்டுபிடிக்க முடியாது. தடயமே இருக்காது. வருவார்கள், கொல்வார்கள், செல்வார்கள்.கூடவே அந்தக் கொடூரத்தை நான்தான் செய்தேன் என்பதற்கு சாட்சி எதாவது விட்டு செல்வார்கள் சைக்கோ கொலைக்காரர்கள்.
இன்னும் சிலர் விளம்பர பிரியர்கள் தனக்கு ஒரு பேர் கொடுத்து கொள்வார்கள். தன்னை பற்றி பொது ஜனங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும்
என்பார்கள். சொல்லலேன்னா கொலை விழும் என்பார்கள். சிலர் போற போக்கில் போட்டு தள்ளி விட்டு கமுக்கமாக இருப்பார்கள். சைலென்ட் கில்லர். கொலை யார் செய்தது ஒரு ஆளா வெவ்வேறு ஆட்களா என்பது கூட தெரியாது. ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு டிசைன். இதுபோன்ற கேஸ்கள்தான் போலீஸ் விசாரணைக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.
ஈசி டார்கெட்!
ஒரு அடிப்பட்ட புலியோ அல்லது வயதான புலிதான் ஆட்கொள்ளியாக மாறும். அப்படி மாறும் புலிகளுக்கு மனிதன்தான் ஈசி டார்கெட். அதைப்போலவே சைக்கோ கொலைக்காரர்களுக்கு குழந்தைகளும் பெண்களும்தான் அவர்களுக்கு ஈஸி டார்கெட். அதிலும் மாற்றுத்திறனாளி என்றால் இன்னும் சுலபம். ஒரு சைக்கோ கில்லர் ஒரு முழுமையான கொலைகாரனாக மாறுவதற்கு அவர் பல கட்டங்களை கடந்து வருகிறார். அதில், சிறு வயதில் கேவலப்படுதல் அல்லது கொடுமைபடுத்தப்படுதல், தனிமையில் இருத்தல், முதல் கொலை (தப்பும் தவறுமாக), அமைதியாக இருத்தல் (போலீஸ் தன்னைக் கண்டு பிடித்து விடுமோ என்ற பயம்), தன்னை கண்டுபிடிக்கவில்லை என்றால் அடுத்த கொலைக்காகக் காத்திருத்தல், அடுத்த நபர் கிடைத்தவுடன் தடையமில்லா கொலை செய்தல். சில தொடர் சைக்கோ கொலைக்காரர்கள், உண்மை கண்டறியும் கருவிக்கே ஆட்டம் காட்டிய கதைகள் உண்டு. இந்த வரிசையில் இந்தியாவில் மும்பையில் இரவில் சாலையோரம் சரமாரியாக கொன்ற ராமன் ராகவ் என்ற சைக்கோ தொடர் கொலைக்காரன்தான் மிக பிரபலம்.
ஒரு குழந்தை எதிர்கால சைக்கோ என்பதை கண்டு பிடிக்க முடியுமா ?
ஒரு சில விஷங்களை வைத்து சொல்லலாம். ஆனால், இவையெல்லாம்தான் அறிகுறி எனத் தெளிவாக கூற முடியாது. சிறு வயதில் தூக்கத்தில் தன்னை அறியாமல் சிறுநீர் கழித்தல் (10% வாய்ப்பு), சிறு எறும்பு, பறவை, நாய் போன்றவற்றை கொடுமை படுத்துதல் (20% வாய்ப்பு), வெளி வர முடியாத மனஅழுத்தம் (20% வாய்ப்பு), பயந்தாலும் வெளிக் காட்டி கொள்ளாமல் மறைத்தல் (10% வாய்ப்பு),
பெற்றோர்களை வெறுத்தல் (10% வாய்ப்பு) . ஆக எல்லாருமே வாழ்வின் ஒரு கட்டத்தில் சைக்கோ நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம், ஆனால் அதிலிருந்து வெளியே வருவதற்கு நம் குடும்பச் சூழல் பெரிதும் உதவியிருக்கும், அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ உதவியிருப்பார்கள்.
ஆனால், பாதிப்புகளில் இருந்து வெளியே வராதவர்களின் எதிர்கால வாழ்க்கை முறைதான் நீங்கள் சைக்கோவா மாறுகிறீர்களா இல்லையா என்பதனை தீர்மானிக்கிறது.