Kylian Mbappe pt desk
சிறப்புக் களம்

“எனது கனவு பலித்த அற்புத தருணம் இது"-ரியல் மாட்ரிட்டில் இணைந்தார் எம்பாப்பே! சம்பளம் இவ்வளவு கோடியா?

Kaleel Rahman

1902 இல் தொடங்கப்பட்ட ரியல் மாட்ரிட் கிளாப் அணிக்காக விளையாடுவது என்பது ஒவ்வொரு கால்பந்து வீரனின் கனவு என்றே சொல்லலாம். அந்த கனவை நனவாக்கி இருக்கிறார் கிலியன் எம்பாப்ஃபே. கால்பந்து ஜாம்பவான்களான ரொபோர்ட்டோ கார்லஸ், ரொனால்டோ, சேவியோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் இணைந்து விளையாடிய அணி ரியல் மாட்ரிட் அணி. இந்த அணியில் இப்போது பிரான்ஸ் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர் எம்பாப்ஃபே இணைந்திருக்கிறார்.

Kylian Mbappe

இந்நிலையில், நேற்று (செவ்வாய்) ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், சான்டியாகோ பெர்னாபியூ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் அடுத்த ஐந்து ஆண்டு காலத்துக்கு ரியல் மாட்ரிட் அணியில் எம்பாப்ஃபே இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு அந்த அணியின் தலைவர் புளோரன்டினோ பெரெஸ், 9-ம் எண் ஜெர்சியை வழங்கி வரவேற்றார். இதைத் தொடர்ந்து பேசிய எம்பாப்ஃபே...

“எனது கனவு பலித்த அற்புத தருணம் இது. பல ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணிகக்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த கிளப் அணிக்காக என்னை அர்ப்பணிக்க உள்ளேன்” என்று உணர்ச்சி பொங்க பேசினார். இதையடுத்து எம்பாப்ஃபே பெயரை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உரத்த குரலில் சொல்லியபடியே இருந்தனர். அப்போது அங்கிருந்த அவரது பெற்றோர் கண்கலங்கினர்.

Kylian Mbappe

சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பிரான்ஸ் நாட்டுக்காக விளையாடி வரும் 25 வயதான எம்பாப்ஃபே, கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற வீரர்களை தொடர்ந்து சிறந்த நட்சத்திர வீரராக திகழ்கிறார். இதுவரை பிரான்ஸ் நாட்டின் கிளப் அணியான பிஎஸ்ஜி கிளப் அணிக்காக 306 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 256 கோல்களை அடித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் சீசனில் அவர், ரியல் மாட்ரிட் அணியில் இணைந்து விளையாடுவார் என கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ரியல் மேட்ரிட் கிளப் அணியில் இணைந்துள்ள அவருக்கு ஒரு சீசனில் விளையாட சம்பளமாக சுமார் 15 மில்லியன் யூரோக்களை (ரூ.137 கோடி) பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் அவர் இணைந்துள்ளதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.