சிறப்புக் களம்

பெருகும் ஆதரவு.. பரவும் போராட்டம்..! #SterliteProtest

பெருகும் ஆதரவு.. பரவும் போராட்டம்..! #SterliteProtest

webteam

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. யாராவது ஒருவர் போராட்டக் களத்திற்கு வந்து மக்களுக்கு ஆதரவு அளித்து செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் போராட்டம் வீரியமடைகிறது. குமரெட்டியார்புரம் கிராமத்தை அடுத்து பண்டாரம்பட்டி கிராம மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மக்களின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஸ்டெர்லைட் மறுத்து வரும் நிலையில் அங்கு வேலை பார்த்த சில ஒப்பந்த தொழிலாளர்களை அணுகினோம். ஆலையில் உள்ளே நடப்பது என்ன ? எதனால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது..? எனக் கேட்டோம். நம்மிடம் பேசிய மாரியப்பன், ஸ்டெர்லைட் தரப்பில் அவர்களது செயல்திறனுக்கு ஏற்ப உற்பத்தி செய்தால் மாசு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் எப்போது டார்க்கெட் என்று சொல்லக்கூடிய உற்பத்தி இலக்கு வைத்து ஆலையை இயக்குகிறார்களோ அப்போது அதிகப்படியான மாசு ஏற்படும் என்றார். குறிப்பாக ஒவ்வொரு மாத இறுதியிலும் கடைசி 5-10 நாள்கள் இந்த டார்க்கெட் நாளாக இருக்கும் என்றும் அந்த சமயத்தில் ஆலையில் அருகே நின்றாலே மயக்கம் வந்துவிடும் என்றார். அவர் பணியாற்றிய 2006-ம் ஆண்டு சமயத்தில் தாமிர பிரித்தெடுப்பு பிரிவில் நடைபெற்ற விபத்தில் இறந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நிலை என்னானது என்பதே தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.

பணியாற்றுபவர்களுக்கே பாதுகாப்பில்லையா..? என அங்கே பணிபுரிந்த சதீஷ் என்பவரிடம் பேசியபோது, மாஸ்க் எனப்படும் முகமூடி அணியாமால் வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லா நோயும் வருமென்று தெரிவித்தார். அதோடு உயர் பதவி வகிப்பவர்கள் யாரும் ஆய்வு சமயத்தை தவிர மற்ற சமயங்களில் உற்பத்தி பகுதிக்கு வரமாட்டார்கள் என்றும் அப்படியே வந்தாலும் உடனடியாக தங்கள் அறைக்கு சென்று விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், சில வருடங்களுக்கு முன்பு வரை அதிக சம்பளத்துக்கு பணியாற்றும் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலை வெளியே 1கிமீ தூரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்ததாகவும், இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே குடியிருப்பு கட்டி அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் எனவும் தெரிவித்தார் மகேஷ். மேலும் வட இந்தியர்கள் பலர் வெறும் 10,000 ரூபாய்க்காக இங்கு வந்து வேலை பார்ப்பதாகாவும்  யாரையும் 5 ஆண்டுகளுக்கு மேல் உற்பத்தி பிரிவில் ஆலை நிர்வாகம் பணியில் வைத்திருப்பதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் 1 மாதம் மட்டுமே பயன்படுத்த கூடிய சல்பியூரிக் ஆசிட்டை தாங்க கூடிய ஷூக்களை ஒரு வருடம் வரை பயன்படுத்த வைப்பதால் தோல் அரிப்பு ஏற்பட்டு காயம் உருவாகும் என்றும் தனது கையில் இருந்த தழும்பை காட்டினார்.

இதற்கிடையில் "ஸ்டெர்லைட் ஆலைக்கென பிரத்யேக மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் இயங்குகிறது. பல லட்சம் லிட்டர் தண்ணீர், லாரிகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி கொண்டு வரப்படுகிறது. காற்றை மாசுபடுத்திய ஆலை இப்போது நீரையும் உறிஞ்சி இந்த பகுதியை பாலைவனமாக்க முயற்சிக்கிறது; தாமிர உற்பத்தியால் ஏற்படும் வெப்பம், மின் உற்பத்தியால் ஏற்படும் வெப்பம் என அனைத்தும் சேர்ந்து காற்றில் ஈரப்பத அளவை மிகவும் குறைத்துவிட்டது. பாலைவனங்கள் மட்டுமே பார்க்கும் வெயிலும், ஈரப்பத அளவும் இங்கேயும் இருக்கிறது என தெரிவித்தார் ராஜா.

இதுதொடர்பாக ஆலை நிர்வாகத்தை அணுக முயற்சி செய்தபோது ஆலை 15 நாட்கள் பராமரிப்பு பணியில் இருப்பதாகவும் சந்தேகம் இருந்தால் ஆய்வு செய்து முடிவெடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் கமல், ரஜனிகாந்த், ஜி.வி.பிரகாஷ் போன்றோர் ஒரு முறை ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட வேண்டுமெனவும் தவறான தகவல்கள் அவர்களை சென்று சேர்ந்து விட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. அதோடு அனைத்தையும் உரிய முறையில் பராமரித்து சுத்திகரிப்பு செய்தே கழிவுகள் வெளியே செல்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆலையில் தாமிரம் பிரித்தெடுத்த பின்னர் கழிவாக வெளியேற்றப்படும் மணல் கறுப்பு நிறத்தில் இருக்கும். அதனை முறையாக தேக்கி வைக்காமல் விவசாய நிலஙகளுக்கு அருகே தேக்கி வைத்துள்ளனர் என்பதும் மக்கள் குற்றச்சாட்டு. கறுப்பு மணல் என தெரியக்கூடாது என்பதால் அதன்மேல் செம்மண் கொட்டி செடிகளை வளர வைக்கின்றனர். மூன்று அடிக்கு மேல் வளரும் செடிகள் வாடி உயிரிழக்கும் என்கிறனர் மக்கள்.

விரிவாக்கம் செய்தால் அனைத்தும் அதிகமாகும். வாழ முடியாத, தகுதியில்லாத இடமாக கிராமங்கள் மாறும் என்பதால் தொடர் போராட்டம் என்றும் அனைவரின் ஆதரவும் பெருகுவதால் ஆலை மூடப்படும் என மக்கள் நம்புகின்றனர்.