சிறப்புக் களம்

இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்படுகிறதா? - 'பாவை' ஆன 'ராவண் லீலா' சர்ச்சையின் பின்புலம்

இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்படுகிறதா? - 'பாவை' ஆன 'ராவண் லீலா' சர்ச்சையின் பின்புலம்

PT WEB

நடிகர் ப்ரதிக் காந்தி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள 'பாவை' படத்தை தடை செய்ய வேண்டும் என்பதுடன், அவரையும் கைது செய்ய வேண்டும் என ஒரு தரப்பு ட்விட்டரில் பிரசாரம் செய்து வருகிறது. இதன் பின்னணியைப் பார்ப்போம்.

'ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி' வெப் சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ப்ரதிக் காந்தி. இந்த ஒற்றை வெப் சீரிஸ் ப்ரதிக் காந்தியை நாடு முழுவதும் அறியப்படும் நபராக மாற்றியது. இந்த நிலையில், ப்ரதிக் காந்தி தனது முதல் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். 'ராவண் லீலா' என முதலில் பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தில் ராவணன் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார் ப்ரதிக் காந்தி. குஜராத்தின் பிரபலமான நாட்டுப்புற நாடக வடிவத்தின் பின்னணியில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

'கஹானி', 'நமஸ்தே இங்கிலாந்து' மற்றும் 'தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' போன்ற படங்களை தயாரித்த புகழ்பெற்ற பென் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், படம் திடீரென சர்ச்சையில் சிக்கியது. படத்தில் ராவணன் வேஷமிட்டிருக்கும் ப்ரதிக் காந்தியின் புகைப்படங்கள் வெளியாக, படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக போர்க்கொடி உயர்த்தப்பட அது சர்ச்சையானது.

இந்துத்துவா ஆதரவு நெட்டிசன்கள் பலரும் படத்தை தடை செய்து, நடிகர் ப்ரதிக் காந்தி மற்றும் படக்குழுவினரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து #BanRavanLeela_Bhavai என்ற ஹேஷ்டேகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே இந்த ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் படத்தின் பெயர் 'பாவை' என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், ``ராமாயணம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சி திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டது. அது இந்து உணர்வுகளை புண்படுத்தாது" என்றும் படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

என்றாலும், படத்துக்கான எதிர்ப்பு என்பது தொடர்ந்துகொண்டே உள்ளது. ஒரு ட்விட்டர் பயனர், ``படத்தின் பெயரை மாற்றுவது என்பது படத்தின் கதையையோ கதையின் உள்நோக்கத்தையோ மாற்றாது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் இதுபோன்ற முட்டாள்தனமான பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்" என்றுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பயனரோ, ``ராவண் லீலாவின் ட்ரெய்லர் தீயவற்றை நல்லது என்றும், நல்லதை தீயது என்றும் காட்டுகிறது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் இந்த மறைமுக அஜெண்டா தடுத்து நிறுத்தப்பட வேண்டும்" என்றுள்ளார்.

இன்னொருவர், ``இந்தப் படம் இந்து மக்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை புண்படுத்துகிறது. இளம் தலைமுறை இளைஞர்கள் மத்தியில் பகவான் ராமர் குறித்து தவறான இமேஜை ஏற்படுத்துகிறது. இது நல்லதல்ல" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இவர்கள் அனைவரும் நடிகர் ப்ரதிக் காந்தியை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் கவனம் பெற்றுவருகிறது.

அதேவேளையில், படத்தை முழுமையாகப் பார்க்காமல், கணிப்பின் பெயரில் இப்படி கண்மூடித்தனமாக எதிர்ப்புப் பிரசாரம் செய்வது சரியல்லை என்ற குரல்களும் எழும்பத் தொடங்கியுள்ளது.

- மலையரசு