சிறப்புக் களம்

‌‌‌‌பவர்கட்டும் கான்வேயின் விக்கெட்டும் மட்டும்தான் பிரச்சனையா?

‌‌‌‌பவர்கட்டும் கான்வேயின் விக்கெட்டும் மட்டும்தான் பிரச்சனையா?

webteam

சென்னை ரசிகர்கள் தரித்திருந்த கணிதமேதை அவதாரம் நேற்றோடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இனி இங்கே கால்குலேட்டர்களுக்கு வேலையே இல்லை. பெங்களூருவும் ராஜஸ்தானும் அடுத்தடுத்து தோற்று சென்னையை ப்ளே ஆஃப்ஸூக்கு அழைத்து செல்லவும் அவசியம் இல்லை ஏனெனில், சென்னையே இங்கே தோற்று தங்களின் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை மொத்தமாக முடித்துவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய நேற்றைய போட்டி சிஎஸ்கேவுக்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டி. வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இப்படியான ஆட்டத்தில் சிஎஸ்கே தங்களின் முழுபலத்தையும் திரட்டி அசாத்தியமான பெர்ஃபார்மென்ஸை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், சிஎஸ்கே had other ideas. இந்த சீசனிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக சொதப்பி போட்டியை தோற்றிருக்கிறது. ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பையும் இழந்திருக்கிறது.

சென்னைதான் முதலில் பேட்டிங் செய்தது. 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. டேனியல் சாம்ஸின் முதல் ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கான்வே lbw ஆகி வெளியேறி சிஎஸ்கேவின் வீழ்ச்சியை தொடங்கி வைத்திருந்தார். சென்னை அணியின் தோல்விக்கு இந்த விக்கெட்தான் காரணம் பெரும்பாலானோர் கருத்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

மைதானத்தில் பவர் சப்ளையில் பிரச்சனை இருந்ததால் DRS முதல் இரண்டு ஓவர்களுக்கு வேலை செய்யவில்லை. இந்த சமயத்தில்தான் கான்வே Lbw ஆகினார். கான்வே ரிவியூவ் எடுக்க விரும்பினார். ஆனால், ரிவியூவ் எடுப்பதற்கான வாய்ப்பே அங்கே இல்லை.

டேனியல் சாம்ஸ் வீசிய பந்து ஸ்விங் ஆகாமல் ஆங்கிள் இன் டெலிவரியாக வந்து கான்வேயில் பேடில் தாக்கியிருக்கும். ஸ்விங் ஆகி வெளியே திரும்பாததால் இந்த பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்தது. 'நிச்சயமாக இது அவுட் கிடையாது. அந்த பந்து குறைந்தபட்சம் ஒரு 3 இன்ச்சாவது லெக் ஸ்டம்பை விட்டு விலகி சென்றிருக்கும்' என மேத்யூ ஹேடன் பேசியிருந்தார். கான்வேயின் விக்கெட்டை ரீப்ளேவில் பார்த்த அத்தனை பேருக்குமே அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டதில் பெரிய உடன்பாடு இல்லை.

கடந்த சில போட்டிகளில் கான்வே சென்னை அணியின் மிக முக்கிய வீரராக மாறியிருக்கிறார். கடந்த 3 போட்டிகளில் மட்டும் 228 ரன்களை அடித்திருக்கிறார். மூன்று போட்டிகளிலுமே அரைசதம் அடித்திருக்கிறார். ருத்துராஜ் கெய்க்வாட்டுடன் இரண்டு சென்ச்சூரி பார்ட்னர்ஷிப்களை அமைத்திருக்கிறார். இந்த மூன்று போட்டிகளில் சென்னை இரண்டு போட்டிகளில் வென்றிருக்கவும் செய்தது.

ஆக, சென்னை அணியின் வெற்றிக்கு கான்வேயின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஒருவேளை அந்த டேனியல் சாம்ஸ் ஓவரில் கான்வேக்கு ரிவியூவ் எடுக்கும் வாய்ப்பு இருந்து அவர் ரிவியூவும் எடுத்திருந்தால் அவர் தப்பித்திருக்கக்கூடும். தொடர்ந்து நின்று ஆடி பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்க முடியும். அதனால் சென்னையின் ஸ்கோரும் உயர்ந்திருக்கும். சென்னை வென்றிருக்கவும் வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும்.


இப்படியெல்லாம் கற்பனை செய்ய தோன்றுவதே கான்வேயின் வீரதீரங்களுக்கான பெருமிதமாக எண்ண முடியாது. மாறாக, சென்னை அணியின் பலவீனங்களையே இந்த கற்பனைகளெல்லாம் படம் போட்டு காட்டுகின்றன.

ஒரு கான்வே இல்லாவிட்டால் சென்னை அவ்வளவுதான் என்கிற சென்னையின் இழிநிலையையே இவை ஹைலைட் செய்து காட்டுகின்றது. கான்வே அவுட் ஆனது பிரச்சனைதான். ஆனால், அது மட்டும்தான் சென்னையின் தோல்விக்கு காரணமா?

கான்வே அவுட் ஆன அதே பவர்ப்ளேயில் சென்னை மேலும் 4 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. பவர்ப்ளே முடியும்போது சென்னையின் ஸ்கோர் 32-5. ப்ளேயிங் லெவனில் பாதியை அங்கே காலியாக்கிவிட்டார்கள். மும்பை அணி இந்த சீசனில் இவ்வளவு சிறப்பான பவர்ப்ளே ஸ்பெல்லை வீசியதே இல்லை. பவர்ப்ளேயில் முதல் 11 போட்டிகளில் மும்பை பௌலர்கள் 14 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கின்றனர். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை பவர்ப்ளேயில் எடுத்திருந்தனர். இதுதான் அவர்களின் பெஸ்ட் பவர்ப்ளே பெர்ஃபார்மென்ஸாக இருந்தது. சென்னை அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் அதை உடைத்து புதிய ரெக்கார்டை வைத்திருக்கின்றனர்.

97 ரன்களுக்கு அவுட் ஆகிவிட்டு கான்வேயின் விக்கெட்டின் மீதும் அது சார்ந்த சர்ச்சைகளின் மீதும் மட்டுமே கவனத்தை குவிப்பது சென்னை அணிக்கு எந்த வகையிலும் உதவாது. உண்மையான பிரச்சனை ஒரு சில வீரர்களை மட்டுமே அதிகமாக சார்ந்திருப்பதில் இருக்கிறது. கான்வேக்கு பிறகு பவர்ப்ளேயில் விக்கெட்டை விட்ட அடுத்த 4 வீரர்களின் டிஸ்மிசலிலும் எந்த சர்ச்சையும் இல்லையே? அவர்கள் ஏன் அத்தனை சுலபமாக விக்கெட்டை விட்டார்கள்? ஒரே ஷார்ட் பாலில் மொயீன் காலி. இரண்டு பந்துகளை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி விட்டு மூன்றாவது பந்தை ஸ்டம்ப் லைனில் வீசினால் உத்தப்பா காலி. எங்கோ ஒயிடாக செல்லும் பந்துக்கு பேட்டை விட்டு ருத்துராஜ் காலி. இவர்கள் மூவரின் விக்கெட்டை வீழ்த்தவும் மும்பை அணி எடுத்துக்கொண்டது வெறும் 14 பந்துகள் மட்டுமே. பவர்ப்ளேயில் 5 விக்கெட்டை எடுத்த சமயத்திலேயே மும்பையின் வெற்றி உறுதியாகிவிட்டது.


இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சென்னை அணிக்கு இதுதான் இந்த ஒன்றிரண்டு வீரர்களை நம்பியிருப்பதுதான் பிரச்சனை. பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க தீபக் சஹார் இல்லை. அவர் மட்டும் இருந்தால் கதையே வேறு என்பதுதான் சென்னை அணியின் மீதான மதிப்பீடாக இருந்தது. அதேமாதிரிதான் பேட்டிங்கிலும் ருத்துராஜ் ஃபார்முக்கு வந்துவிட்டால் சென்னை பட்டாசாக வெடிக்கும் என பேசப்பட்டது. ஒரு தீபக் சஹாரும் ஒரு ருத்துராஜூம் மட்டும்தான் சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தர முடியுமெனில் மற்ற வீரர்கள் எதற்கு?

தனித்தனி வீரர்களை நம்பியிராமல் ஒரு அணியாக முழுமையாக பெர்ஃபார்ம் செய்யும் குழுதான், எக்காலத்திற்குமான அணியாக இருக்கும். அப்படிப்பட்ட அணியால்தான் எப்பேற்பட்ட நெருக்கடியான சூழலிலும் வெல்ல முடியும். ஒரு கான்வேயையும் ஒரு ருத்துராஜையும் மட்டுமே நம்பியிருக்கும் அணி தோல்விகளையும் சறுக்கல்களையும் தள்ளிப்போடலாமே ஒழிய அவற்றை தவிர்க்க முடியாது. சென்னை அணிக்கு இந்த போட்டியில் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. அது ப்ளே ஆஃப்ஸ் கனவை முறித்துப்போடும் அளவுக்கு அமைந்தது கொஞ்சம் வேதனையானதுதான். ஆனால், இங்கிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொண்டு ஒரு குழுவாக சிறப்பாக செயல்படக்கூடிய அணியாக அடுத்த சீசனில் சென்னை மாற வேண்டும்.

- உ.ஸ்ரீராம்