சிறப்புக் களம்

போலியோ சொட்டுமருந்து ஏன் முக்கியம்? ’பாக்., ஆப்கானை பாருங்கள்’; எச்சரிக்கும் சுகாதாரத்துறை

போலியோ சொட்டுமருந்து ஏன் முக்கியம்? ’பாக்., ஆப்கானை பாருங்கள்’; எச்சரிக்கும் சுகாதாரத்துறை

நிவேதா ஜெகராஜா

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி உள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 மையங்களில் நடைபெற்று வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என இம்முகாமில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் கூட மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். விடுபடும் குழந்தைகளை கண்டறிய, சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கபட வேண்டும்.

இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் உட்பட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உப்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் (Transit Booths) கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலையில் நடைபெற உள்ள போலியோ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்து 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தாமே சொட்டு மருந்து வழங்கி முகாமிற்கு வரும் சிறார்களுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளார்.

கரூர் மாவட்டத்தில்  5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை   மின்சாரத் துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் கரூர்  மாவட்டத்தில் 825 மையங்களில் நடைபெறும் முகாமில்  ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 517 குழந்தைகளுக்கு  சொட்டு மருந்து அளிக்கப்படவுள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், `போலியோ சொட்டு மருந்து’ குறித்து புதிய தலைமுறைக்கு அளித்த விழிப்புணர்வு பேட்டியில் பேசுகையில், “கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ நோய் இல்லை. இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் போலியோ இல்லை. எனினும் போலியோ வைரஸ் பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம்தான். இன்றளவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலேயே இன்னும் போலியோ ஒழிக்கப்படவில்லை. வைரஸ் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பரவுவது எவ்வளவு சுலபம் என கோவிட் நோயில் நாம் பார்த்திருப்பதால் தெரியும். எனவே போலியோ சொட்டு மருந்தை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் நாம் கொடுத்தாக வேண்டும். இதற்கு முன் எத்தனை முறை கொடுத்திருந்தாலும் மீண்டும் கொடுக்க வேண்டும்.

கடந்த அக்டோபர் 2021 ல் கூட போலியோ பாதிப்பு ஆப்கனிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 ஆம் வாரத்தில் மால்வியில் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல் போல் ஆரம்பத்தில் அறிகுறிகள் தோன்றினாலும் ஒரு சில குழந்தைகளுக்கு உடல் சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு போலியோ வைரஸில் அதிகம். ஆகவே அதை தடுப்பற்காக போலியோ சொட்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சிறுவயதில் குழந்தைக்கு ஏற்படும் குறையென்பது, குழந்தையையும், அவர்களின் குடும்பத்தையும் தீரா துயரில் ஆழ்த்திவிடும் என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

சாதாரண இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்தாலும் தாராளமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம். இது தவிர, சந்தேகம் இருப்பின் குழந்தையின் உடல்நிலையை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரிடம் பரிசோதித்து சொட்டு மருந்து கொடுக்கலாம். மருத்துவமேனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே சொட்டு மருந்து உடனடியாக கொடுக்க இயலாது. அதையும் கூட சிகிச்சையளிக்கும் மருத்துவரே முடிவு செய்வார்.

சொட்டு மருந்து கொடுத்துவிட்டு குழந்தையை தட்டிக் கொடுத்து சிறிது நேரத்திற்கு பின் பாலூட்ட வேண்டும். இல்லையெனில் சில நேரத்தில் மூச்சுவிடுதலில் லேசான சிரமம் ஏற்படும். 90 லட்சம் டோஸ் போலியோ சொட்டு மருந்துகள் தமிழகத்தில் தற்போது கையிருப்பில் உள்ளன. போலியோ சொட்டு மருந்திற்கு எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் 86,801 குழந்தைகளுக்கு 453 மையங்களில் 870 குழுக்களைக் கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பெரிய மார்க்கெட், மணக்குள விநாயகர் கோயில், மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா மையங்களிலும், மாநில எல்லைகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்படுகிறது.