சிறப்புக் களம்

கற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை ! மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை

கற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை ! மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை

webteam

திரையிசை கண்ட கவிஞர்களில் அசாத்திய சாதனையாளர் வாலி. எம்ஜிஆர் தொடங்கி இன்றைய இளம் நாயகர்கள் படங்கள் வரை பாடல்கள் எழுதியுள்ளார். கவி உள்ளம் தந்த தனிப்பாடல்களும் ஏராளம். பாட்டால் வையம் வென்ற வாலியின் பிறந்த நாள் இன்று.

இயக்குநர் திலகம் கே.எஸ். கோபால கிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த கற்பகம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள்தான் தமிழ்த் திரையுலகில் வாலி என்ற கவிஞனின் வரவை உரைத்தன. கவியரசர் கண்ணதாசன் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அவர் இன்றி வேறொரு கவிஞர் அத்தனைப் பாடல்களையும் எழுதி படமும் வெற்றி பெற்றது என்றால் அது கற்பகம்தான். இந்த வெற்றி அவரை கவியரசருக்கும் நெருக்கமாக்கியது. அழகர் மலைக் கள்ளன் தொடங்கி சில பாடல்களை எழுதியிருந்தாலும் கற்பகமே வாலிக்கு வரவேற்பைத் தந்தது.

1931ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள் திருப்பராய்த்துறையில் பிறந்தவர் வாலி. இயற்பெயர் ரங்கராஜன். அவரது இளமைப் பருவம் ஸ்ரீரங்கத்தில் கழிந்தது. அந்நாளில் புகழ் பெற்ற ஓவியர் மாலி போல் வரவேண்டும் என்று நினைத்ததால் பள்ளித் தோழன் அவர் பெயர் மாற்றி வாலியாக்கினான். பள்ளிப்படிப்பு முடிந்து ஓவியமும் பயின்ற வாலி, ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுடன் இணைந்து நேதாஜி என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தினார். இதன் மூலம் வானொலி நாடகங்கள் எழுத வாய்ப்பு வந்தது. முருகன் மேல் கொண்ட அன்பால் எழுதிய கற்பனை என்றாலும் பாடலை டிஎம் எஸ்ஸிற்கு அனுப்பி, அவர் அதைப்பாடித் தந்ததோடு, வாலியை திரைவாய்ப்பைத் தேடவும் பணித்தார். சென்னை வந்த வாலி நண்பர் நடிகர் வி கோபால கிருஷ்ணன் உதவியோடு பாடல் எழுதும் வாய்ப்புகளைத் தேட கடும் போராட்டத்திற்குப் பின் கற்பகம் வாய்ப்புக் கிட்டியது. கற்பகத்தைத் தொடர்ந்து எம்ஜிஆரின் படகோட்டி பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் வெற்றி பெற வாலியின் வெற்றிப் பயணம் வேகம் பிடித்தது.

பின்னர் சிவாஜி, ஜெமினி, முத்துராமன் என அனைத்து நட்சத்திரங்களுக்கும் எழுதினார். மெல்லிசை மன்னர் தொடங்கி வைத்த பயணம், இசைஞானி, இசைப்புயல் தாண்டி இன்றைய அனிருத் வரை அத்தனை இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார் வாலி. ஐந்து முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினை வென்றுள்ளார். 1989இல் வருஷம் 16 மற்றும் அபூர்வ சகோதரர்கள் திரைப்படங்களுக்காக தேசிய விருதினை வென்றார் வாலி.

தாயைப் பெரிதும் போற்றும் கவி உள்ளம் படைத்த வாலி, சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த மன்னன் படத்தில் எழுதிய அம்மா என்று அழைக்காத உயிரில்லையே பாடல் திருச்சியில் ஒரு கோவிலின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு.எம்ஜிஆர் தொடங்கி தற்கால சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்களைத் தந்துள்ளார் கவிஞர் வாலி. தத்துவச் செறிவு நிறைந்திருக்கும் பாடல்களைத் தரும் வாலி, நம்பிக்கை ஊட்டும் பாடல்களையும் அதிகம் தந்துள்ளார்.தன் இறுதிக்காலத்தில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலே அதற்கு உதாரணம்

கடவுள் அமைத்த மேடை, ஒரே ஒரு கிராமத்திலே திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய வாலி, ஏராளமான நாடகங்களை எழுதி அரங்கேற்றியுள்ளார். நாடகத்தில் நடித்த ரமண திலகம் என்பவரை காதலித்து மணந்தவர் வாலி. திரைதாண்டி தன் கவித்திறன் மிளிர ராமாயணம், மகாபாரதம், ராமானுஜர் காவியம் உள்ளிட்டவற்றை புதுக்கவிதையாய் வடித்துள்ளார். பொய்க்கால் குதிரை , பார்த்தாலே பரவசம், ஹே ராம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார் வாலி. இசையமைப்பாளர்கள் இயக்குநர்கள் கேட்கும் விதத்தில் பாடல்களை எழுதித் தருவதில் அவருக்கு நிகர் அவரே. அழியாப் புகழ் தரும் வகையில் திரைக்கு 15ஆயிரம் பாடல்களைத் தந்த வாலி உடல் நலக்குறைவால் 2013ஆம் ஆண்டு ஜூலை 18இல் மறைந்தார். அவர் உடல் மறைந்திருக்கலாம். காற்றுள்ள காலம் மட்டும் கானங்களால் நம் இதயம் நிறைந்திருப்பார்‌ வாலி.