சிறப்புக் களம்

ஸ்டார்ட் அப் இளவரசிகள்-27 : தி டாட்ஸ் சமூக வலைப்பின்னல் தளத்தின் நாயகி ஜேமிசன்!

webteam

படைப்பூக்கம் கொண்டவர்களுக்கான வலைப்பின்னலை உருவாக்கிய ஜேமிசன் (Pip Jamieson) பற்றி கொஞ்சம் அதிரடியான அறிமுகத்துடனே துவங்கலாம். தி டாட்ஸ் (The Dots ) எனும் சமூக வலைப்பின்னல் தளத்தின் நிறுவனரான ஜேமிசன், லிங்க்டுஇன் கதையை முடித்து வைப்பதே தனது நோக்கம் என்பது (“My mission is to kill LinkedIn,” ) போல ஒரு முறை கூறியிருக்கிறார்.

தொழில்முறை நோக்கிலான வலைப்பின்னல் தளமான, லிங்க்டுஇன், சமூக வலைப்பின்னல் பிரிவில் முன்னோடி தளங்களில் ஒன்று எனும்போது ஜேமிசன் போர்ப்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் இவ்விதமாக கூறியிருப்பது மிகை கருத்து அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனக் கருதலாம். ஆனால், இந்த வாசகத்திற்கு ஜேமிசன் அளித்த விளக்கத்தை படித்துப்பார்த்தால் அவர் சொல்வதற்கான காரணம் புரியும். ’ இது ( லிங்க்டுஇன் –ஐ சாய்ப்பது), ஓரிரவில் நிகழ்ந்து விடாது, ஆனால், லிங்க்டுஇன் பாரம்பரிய தொழில்களின் பலத்தில் உருவாக்கப்பட்டது, இவற்றின் சக்தி மங்கத்துவங்கும் போது, அந்த சமூகம் தானியங்கிமயமாகும் போது எங்கள் சமூகம் எழுச்சி பெறும்’ என்று ஜேமிசன் கூறியிருக்கிறார்.

தானியங்கிமயம்

ஜேமிசன் கூறும் கருத்து முக்கியமான அவதானிப்பாகும். லிங்க்டுஇன் எனும் சேவை மீது தனிப்பட்ட வகையில் அவர் எந்த கருத்தையும் கூறவில்லை. மாறாக, தொழில்முறை பணியாளர்களின் இணைய சமூகமாக இருக்கும் அந்த சேவையின் தன்மையை குறிப்பிட்டு, டிஜிட்டல் யுகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை குறிப்பிடுக்கிறார். தானியங்கிமயம் என்பது தான் அந்த மாற்றம். ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு எல்லாத்துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த துவங்கியிருக்கும் சூழலில், வழக்கமான வேலைகள் பல இயந்திரங்கள் வசமாகி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், பாரம்பரிய பணிகள் பல வழக்கொழிந்து போகலாம் என்பது ஜேமிசன்னின் கணிப்பு. அவ்வாறு நிகழும் போது, லிங்க்டுஇன் சேவையின் செல்வாக்கும் மங்கலாம் என்கிறார்.

லின்க்டுஇன் ஆதார பலமாக இருக்கும் பாரம்பரிய நிறுவனங்கள் செயல்படும் விதத்தில் பெரிய மாற்றம் தானியங்கியத்தால் வர இருக்கிறது என்றும் சொல்கிறார். ஜேமிசன் இப்படி சொல்வதற்கு முக்கிய காரணம், தி டாட்ஸ் (The Dots ) தளத்தை படைப்பூக்கம் கொண்ட பணியாளர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக அவர் உருவாக்கியிருப்பது தான். ஏ.ஐ நுட்பம் பலவற்றை தானியங்கிமயமாக்கலாம். ஆனால் படைப்பூக்கம் என்று வரும் போது தானியங்கிமயம் எடுபடாது என்கிறார் ஜேமிசன். இத்தகைய படைப்பூக்கம் கொண்ட சுயேட்சை வடிவமைப்பாளர்கள், பிரிலான்சர்களை சார்ந்ததாக தி டாட்ஸ் சேவை உருவாக்கப்பட்டுள்ளதால், எதிர்கால பணிகளுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக இது விளங்குவதாக ஜேமிசன் நம்புகிறார்.

புதிய வலைப்பின்னல்

எண்ணற்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் இருந்தாலும், தனக்கென தனி நோக்கத்தையும், அதற்கேற்ற இலக்கு பயனாளிகளையும் கொண்ட மாறுபட்ட சமூக வலைப்பின்னல் தளங்களில் ஒன்றாக தி டாட்ஸ் விளங்குகிறது. 2014 ல் துவக்கப்பட்ட இந்த தளம், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டதாக வளர்ந்திருக்கிறது. அதைவிட முக்கியமாக படைப்பூக்கம் கொண்டவர்கள் தங்களுக்கான இணைய சமூகமாக இந்த தளத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தி டாட்ஸ் தளத்தில் அப்படி என்ன சிறப்பு அன்றும், அதை ஜேமிசன் உருவாக்கிய விதத்தையும் பார்க்கலாம். பிப் ஜேமிசன், பிரிட்டனில் பிறந்து வளர்ந்தவர். டிஸ்லெக்‌ஷியா எனும் கற்றல் குறைபாடு பாதிப்பு கொண்டிருந்ததால், அவர் 11 வயதில் தான் படிக்கத்துவங்கினார். அப்பா, அம்மாவின் அன்பும், ஆதரவும் இந்த குறைபாட்டை எதிர்கொள்ள உதவியதாக கூறுபவர், குறிப்பாக தந்தையின் தாக்கம் அதிகம் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

தந்தை இசைத்துறையில் இருந்தாதால் அவரைச்சுற்றி படைப்புக்கம் மிக்க நபர்கள் நிறைந்த நிலையில் ஜேமிசன் வளர்ந்தார். கலை ஆர்வம் இருந்தாலும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் தனக்கான தொழில்முறை பாதையை தானே தேடிக்கொள்ள விரும்பினார். பட்டம் பெற்றதும் அரசு துறையில் அவருக்கு வேலை கிடைத்தாலும், இந்த பணியில் ஏமாற்றத்தை உணர்ந்தார். பொருளாதார வல்லுனர் என்ற முறையில் அரசுக்கு தகவல் அளிப்பதை விட, அரசு விரும்பும் தகவல்களை அளிக்கும் விதமாகவே இந்த பணி இருப்பதாக உணர்ந்தவர், அங்கிருந்து படைப்புக்க துறைக்கு வந்துவிட்டார். எம்.டிவியில் இருந்து… முதலில் விருது நிகழ்ச்சி ஒன்றில் பணியாற்றியவர் அதன் பிறகு இசை தொலைக்காட்சியான எம்டிவில் இணைந்தார். எம்டிவி பணி அவருக்கு பிடித்தமானதாக இருந்தது.

அங்கிருந்தவர்கள் வழக்கமான வேலை பார்ப்பவர்களை விட படைப்புக்கம் மிக்கவர்களாகவும், வளைந்து கொடுக்கும் வேலைவாய்ப்பை கொண்டிருந்ததையும் கவனித்தார். எம்டிவியில் இருந்தவர்கள் பணத்தை துரத்திச்செல்வதை விட, பணித்திட்டங்களை நாடுபவர்களாக இருந்தனர். இதன் காரணமாக அடிக்கடி வேலை மாறுபவர்களாகவும் இருந்தனர். பொதுவாக வர்த்தக உலகில் வேலைவாய்ப்புக்கான குறிப்புகளை பெற லிங்க்டுஇன் ஏற்ற சேவை என்றாலும், படைப்பூக்கம் கொண்டவர்களுக்கு அது அத்தனை உகந்ததாக இல்லாததையும் ஜேமிசன் கவனித்தார்.

அதே நேரத்தில் எம்.டிவி நிறுவனத்தில் புதிய நிகழ்ச்சிகளில் இணைந்து செயல்பட திறமைசாலிகளை தேடி கண்டுபிடிப்பதும் சிக்கலாக இருப்பதை உணர்ந்தார். பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பரிந்துரை பேரிலேயே திறமைசாலிகளை கண்டறியும் நிலை இருந்தது. ஆனால், வேறுபட்ட பின்னணியை கொண்ட பல வகையான திறமைசாலிகளை கண்டறிவது சவாலாகவே அமைந்தது. அவர்கள் அனைவருமே ஒரே மாதிரியான தன்மை கொண்டிருந்தனர். திறமைசாலிகளை தேடி கல்லூரிகளுக்கு சென்றாலும், பெரும்பாலானோர் ஒரே மாதிரியான பின்னணியை கொண்டிருப்பதை தவிர்க்க இயலாததாக இருந்தது.

ஜேமிசன் தொழில்முனைவில் ஆர்வம் கொண்டவராக இல்லை என்றாலும், இந்த சிக்கலுக்கு தீர்வு காண விரும்பினார். இதன் பயனாக, படைப்பூக்கத்தின் முக்கிய அம்சமான மாறுபட்ட திறமைகளை கண்டறிய வழி செய்வதற்காக என்றே தி-டாட்ஸ் சமூக வலைப்பின்னலை துவக்கினார். படைப்பூக்க பாதை லிங்க்டுஇன் தளத்தில் இருந்து மாறுபட்ட வகையில் தி டாட்ஸ் தளத்தை உருவாக்கினார். பணி நிரந்தரம் போன்றவற்றை எதிர்பாராமல், படைப்பூக்கம் சார்ந்த திட்டங்களில் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டவர்களின் சமூகமாக இந்த தளத்தை உருவாக்கினார். கலைஞர்களுக்கான வலைப்பின்னலாக ஏற்கனவே பிஹான்ஸ், டேவியன் ஆர்ட் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இருந்தாலும், தி டாட்ஸ் அவற்றில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. கோட் சூட் அணியாதவர்களுக்கான லிங்க்டுஇன் என்று சொல்லக்கூடிய வகையில் இந்த சேவை உருவானது.

தி-டாட்ஸ் தளத்தில் கலைஞர்கள் போல செயல்படும் விருப்பம் கொண்ட திறமைசாலிகள் தங்களுக்கான அறிமுக பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். இமெயில் அல்லது பேஸ்புக், டிவிட்டர் கணக்கு மூலமும் உள் நுழையலாம். அதன் பிறகு அவர்கள் தாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திட்டங்களை பகிர்ந்து கொண்டு, ஒத்த கருத்துள்ளவர்களோடு உரையாடலாம். இதன் மூலம் தங்களுக்கான வலைப்பின்னல் தொடர்புகளையும் உருவாக்கி கொள்லலாம். இதன் கேள்வி பதில் பகுதியிலும் துடிப்பான சமூக தன்மை கொண்டுள்ளது. பணி சூழல், வேலைவாய்ப்பு தொடர்பான கட்டுரைகள், வழிகாட்டி குறிப்புகளையும் வழங்கும் தனி பகுதியையும் இந்த தளம் கொண்டுள்ளது.

இந்த தளத்தில் உறுப்பினராவது எளிது. இதற்கு கட்டணம் கிடையாது. இதன் காரணமாக விளம்பர ஊடுருவல்களும் கிடையாது. லிங்க்டுஇன் தளத்துடன் ஒப்பிடும் போது இது மிகப்பெரிய ஆறுதலாகும். வர்த்தக நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி தங்கள் வேலைவாய்ப்புகளை பட்டியலிடுவதால் தரமான வேலைவாய்ப்புகளை கண்டறியலாம்.

சுயேட்சை பணி, தொலைதூர பணி, பகுதி நேர பணி, புதிய திட்டங்கள் என வகையான பணிகளை கண்டறியலாம். ஃபேஸ்புக் அலை அதே நேரத்தில் லிங்க்டுஇன் போலவே வர்த்தக நிறுவனங்களும் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். நிறுவனங்கள் வித்தியாசமாக சிந்தித்து செயல்படக்கூடிய துடிப்பான திறமைசாலிகளை கண்டறிய விரும்பினால் இந்த தளத்தை அதற்கான மேடையாக பயன்படுத்திக் கொள்ளலாம். பிபிசி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள துவங்கியதால், இந்த தளம் இரு தரப்பினர் மத்தியிலும் வேகமாக வளர்ந்தது. ஃபேஸ்புக் அலைக்கு பிறகு வெற்றிகரமாக உருவாக சமூக வலைப்பின்னல் சேவைகளில் தி டாட்ஸ் தளத்தை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

பிரிட்டனைச் சேர்ந்தவர்களை அதிகம் உறுப்பினர்களாக கொண்டிருந்தாலும் இந்த தளம் சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளது. துவக்கத்தில் இந்த தளத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் ஆண்களாகவும், அதிலும் மேற்கத்திய நாடுகளைச்சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். எனினும், பெண்களையும், கருப்பின படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த தளம் செயல்பட்டு பரவலான உறுப்பினர்களை பெற்றுள்ளது. தனியாக செயல்படும் தொழில்முனைவோர் என்ற முறையில் இந்த தளத்திற்கு நிதி திரட்டுவது தான் மிகவும் சவாலாக இருந்தது என்கிறார்.

ஜேமிசன். பெண் தொழில்முனைவோர் என்பதாலேயே பலமுறை நிதி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் கூறுகிறார். எனினும் இந்த தடைகளை வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறார். நிறுவனத்தை நடத்துவதில் கணவரின் ஆதரவு தனக்கு மிகப்பெரிய பலம் என்றும் ஜேமிசன் கூறியிருக்கிறார். தனது கற்றல் குறைபாடை அவர் ஈடு செய்வதாகவும் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

தன்னைச்சுற்றி உற்சாகம் மிக்கவர்களை வைத்துக்கொள்வது வெற்றிக்கு வழி வகுப்பதாகவும் ஜேமிசன் கூறுகிறார். வர்த்தகத்தை நடத்துவது என்பது ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணம் என்பதால், குடும்பம் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு தேவை என்கிறார்.