சிறப்புக் களம்

பெட்ரோல் விலையேற்றத்தின் பின்னால் உள்ள அரசியல் தெரியுமா?

பெட்ரோல் விலையேற்றத்தின் பின்னால் உள்ள அரசியல் தெரியுமா?

webteam

எப்போதும் இல்லாத அளவில், 80 ரூபாயை எட்டியிருக்கிறது பெட்ரோல் விலை; டீசலும் தன் பங்குக்கு 72 ரூபாயை எட்டியிருக்கிறது. காரணம் என்ன? என கேட்டவுடன் நேரடியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியதாக விளக்கம் வரும். அதேபோல், 15 நாள்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்த போதும் இந்த அளவுக்கு இல்லையே என்றால், அப்படியெல்லாம் இல்லை, இந்த மாற்றம் தவிர்க்க இயலாத ஒன்றே என்று சமாளிக்கவே செய்கிறார்கள்.  

இந்தியாவில் எப்படி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆசையுண்டு. ஏனெனில் பாகிஸ்தானில் நம்மை விட 10 ரூபாய் கம்மியாக பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது என வரும் வாட்ஸ் அப் பார்வர்ட் செய்திகளை நாம் பகிர்வதில் இருக்கும் வேகம் அப்படி. அது உண்மையும் கூட. தெற்காசிய நாடுகளில் அதிக விலை கொடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் நுகர்வோர் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றனர்.
நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50% பணத்தை வரிக்காக மட்டும் செலுத்துகிறோம்; அந்த வரிகள் நீக்கப்பட்டால் விலையானது பாதியாகக் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, 1 லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் என்று வைத்து கொண்டால், முகவர்கள் 47 ரூபாய்க்கு வாங்குகின்றனர். அதில் கமிஷன் 5 ரூபாய் – மொத்தம் ரூ.52; பின்னர் மத்திய அரசு ரூ27 வரியாக விதிக்கிறது; மாநில அரசு ரூ21 வரியாக விதிக்கிறது. அதாவது வரியாக மட்டும் ரூ.48 விதிக்கப்படுகிறது. இதனை நுகர்வோர் அதாவது மக்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இதில் கலால் வரி மட்டும் ஏறக்குறைய ரூ20 வரை வசூலிக்கப்படுகிறது. கடந்த 2014க்கு பிறகு 9 முறை கலால் வரி உயர்த்தப்பட்டும், 1 முறை மட்டும் குறைக்கப்பட்டும் உள்ளது. பலமுறை கலால் வரி உயர்த்தப்பட்ட போது , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தே காணப்பட்டது. ஆனால் அப்போது கூட பெட்ரோலியம் மீதான வரியோ, ஒட்டுமொத்த விலையோ குறைக்கப்படவில்லை.  

மத்திய அரசு ஏன் இது போன்ற விலை உயர்வை குறைக்க மறுக்கிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்ட போது , “மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரியான “வாட்” வரியை நீக்கினால், விலை குறையும் என்று கூறியதோடு, பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது, ஆனால் மாநில அரசுகளின் ஒத்துழைப்பை பெற முடியவில்லை” என்கிறார். “அதே நேரத்தில் மத்திய அரசு விதிக்கு கலால் வரியை குறைப்பது என்பது சர்வதேச சந்தை விலையை சார்ந்தே இருக்கிறது” என்றார்.  

இந்தியாவை பொறுத்தவரை, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து 26% கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. அதே போல் சவுதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளில் இருந்தும் தேவைக்கேற்ப கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ஈராக்கில் இருந்துதான் இந்தியாவுக்கான அதிகபட்ச கச்சா எண்ணெய் வருகிறது. ஆனால் அவ்வப்போது அங்கு நிலவும் அரசியல் சூழல், மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்துகிறது. இதனால், கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான செலவு அதிகரிக்கிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது ஏற்படும் செலவையும் சேர்த்து விலை நிர்ணயம் செய்வதால், இது போன்ற முகவர் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என்கின்றனர் சில சார்ந்த நிபுணர்கள்.

பெட்ரோல், டீசல் விலைக் குறைய வாய்ப்பே இல்லையா என வினவினால், வாய்ப்பிருக்கிறது ஆனால் அது அரசியல்வாதிகள் கையில் இருக்கிறது என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள். அதாவது இந்தியா மற்ற நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ29 , சுத்திகரிப்பு, போக்குவரத்து செலவு என அது 7-9 ரூபாய் சேர்க்கப்படும். இவற்றை சேர்த்து முகவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 35 அல்லது ரூ37 க்கு விற்கப்படும். ஆனால் நுகர்வோரின் கைக்கு கிடைக்கும் போது அதன் தற்போதைய விலை குறைந்தபட்சம் ரூ.70-ல் இருந்து ரூ80 ஆக மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு கிடைக்கிறது.

அதாவது ஏறக்குறைய ரூ.35-ரூ40 வரை வரியாக மட்டும் செலுத்தும் நிலை இருக்கிறது. இதனை குறைத்தால் பெட்ரோல், டீசலை இந்திய நுகர்வோரும் குறைந்த விலைக்கு வாங்க முடியும். அதற்கு பெட்ரோலிய பொருட்களுக்கு ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட வேண்டும் அல்லது வரி குறைக்கப்பட வேண்டும்.

இலாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச சந்தையை காரணம் காட்டி, வரி மேல் வரி விதித்து குடிமக்களின் கஜானாவை காலி செய்கின்றன அரசாங்கங்கள்