மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று பெரியார் தனது மேடைகளில் அடிக்கடி கூறுவார். சாதி, மதத்தை புறந்தள்ளி மானமும் அறிவும் உள்ள சுயமரியாதைக்காரனாக மனிதர்கள் வாழ வேண்டும் என்று வீதியெங்கும் பேசியவர் பெரியார். எதுகை, மோனை இன்றி, சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் அவரது பேச்சுகள் இருக்கும். தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் மேடைப்பேச்சை மக்கள் மொழியிலேயே மாற்றியமைத்த பெருமை பெரியாரையேச் சாரும். தன்னைப் பொறுத்தவரை, பேச்சு கேட்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார். சுயமரியாதை திருமண மேடைகளை அவர் பயன்படுத்திய விதம் அலாதியானது. அந்த மேடையை மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, சிக்கனம், பெண் கல்வி, பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு என சமுதாயத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் அலசுவதற்கு அவர் பயன்படுத்தத் தவறியதில்லை.
ஒரு முறை தீண்டாமையைப் பற்றி மேடையில் முழங்கினார் பெரியார். மனிதனை மனிதன் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது - தெருவில் நடக்கக்கூடாது - குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பன போன்ற கொடுமைகளை தாங்கிக் கொண்டு இந்தச் சமூகம் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் காலம் தள்ளும் என்று கொந்தளித்தார்.
பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகள் மீது மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களும் கூட, அவர் வேறு பல பிரச்னைகளுக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடியதை மறுக்க முடியாது. குறிப்பாக, பெண்ணடிமைத் தனத்துக்கு எதிராக அவர் சிங்கம் போல் கர்ஜித்தார். ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், தொண்டுகளையும் பெண்களும் செய்ய முடியும் என முரசு கொட்டினார். பெண்கள் தங்களை பிறவி அடிமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் எனவும் குரல் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக, பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை போன்றவை அடிப்படைத் தேவை என்றும், விதவைப் பெண் மறுவாழ்வு, வரதட்சணைக் கொடுமை போன்றவை கட்டாயம் தேவை என முழங்கினார்.
சமூகத்தைத் சீர்திருத்தும் பணிக்காக, தான் வகித்த 29 பதவிகளைத் துறந்து, 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றியவர். மக்கள் செல்வாக்கு இருந்தும் திராவிடர் கழகத்தை அரசியல் கட்சியாக மாற்றாத மாமனிதர். மண்ணை விட்டு மறைந்து 45 ஆண்டுகள் கடந்த பிறகும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர் பெரியார்தான்.
தொடக்கத்தில் காந்தியடிகளின் கொள்கைகள்மீது ஈர்ப்புக் கொண்டபெரியார், ஆடம்பர உடைகளைத் துறந்து, கதர் ஆடைக்கு மாறினார். தனது குடும்பத்தினரையும் கதர் ஆடைகளையே அணியச் செய்தார். செல்வச் செழிப்பு நிறைந்த குடும்பத்தில் பிறந்தபோதிலும், எளிமையான வாழ்க்கை வாழத்தொடங்கினார். கள்ளுண்ணாமையை அண்ணல் காந்தியார் வலியுறுத்தியதன் விளைவாக, தனது தோட்டத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிச்சாய்த்தவர் பெரியார். ஊர் ஊராகச்சென்று கள்ளுக்கடைகளுக்கு எதிராக மக்களைத்திரட்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டார். இதுபோன்ற சமயங்களில் தனது சாதாரண பேச்சின் வாயிலாக எளிய மக்களைச் சென்றடைந்தார் பெரியார்.
அதன் விளைவாகவே, 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உள்ளிட்ட புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் செயல்பட்டன.
1937இல் காங்கிரஸ் அரசின் முதலமைச்சராக இராஜகோபாலச்சாரியார் இருந்தபோது, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு எதிராக தந்தை பெரியார் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதுவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அணி திரளக் காரணமாக அமைந்தது.
தனது பெயருக்கு பின்னால் இருந்த நாயக்கர் என்ற சாதிப் பட்டத்தை தூக்கியெறிந்து, பிறருக்கு முன் உதாரணமானார். இன்றளவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், தலைவர்கள், ஏன் சாதாரண மக்கள் கூட தங்களது பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக் கொள்ள வெட்கப்படுவதற்குக் காரணம் பெரியார் தான். தெருக்களில் இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்கள் அகற்றப்படுவதற்கு வித்திட்டவரும் அவரே.
இதுபோன்ற சூழலில்தான், 1944ஆம் ஆண்டு நீதிக்கட்சி திராவிடர் கழகமானது. கல்வி, வேலைவாய்ப்பில் சாதி எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம், வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என்பதும், சாதியக் கட்டமைப்பை தகர்க்க, அதனைத் தாங்கிப் பிடிக்கின்ற அத்தனையையும் தகர்ப்பது திராவிடப் பேரியக்கத்தின் அடிநாதமாக உருவெடுத்தது. பெரியாரின் இயக்கம் தலையெடுத்த பின்னர்தான், இடுப்பில் துண்டைக்கட்டி கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டிருந்த சமூகத்தினர், தோளிலே துண்டைப் போட்டு வலம் வரத் தொடங்கினர். குறிப்பிட்ட இனத்தவர் வீடுகளில் மட்டுமே இருந்த புத்தகங்கள், ஏடுகள் அவர்களின் வீடுகளைத் தாண்டி அனைவரது கைகளுக்கும் வந்தன.
பெரியார் பொதுவாக எந்தவொரு விசயத்தையும் சிந்திக்காமல் பேசமாட்டார் என்று சொல்வார்கள். இதனை அறியாத பலர், அவரிடம் ஏதாவதுகேள்வி எழுப்பி விழி பிதுங்கியதுஉண்டு. பொதுநலம், சுயநலம் என அடிக்கடி கூறுகிறீர்களே, அதற்கு உங்களால்விளக்கம் தர முடியுமா? என்றுஅவரிடம் ஒரு முறைகேள்வி எழுப்பப்பட்டதாம்.அதற்கு, மழை பெய்வது பொதுநலம், குடை பிடிப்பது சுயநலம்என்று உடனடி பதில் வந்ததாம் பெரியாரிடமிருந்து.
இந்திய விடுதலைக்கு முன்னரே தனித் தமிழ்நாடு எனும் முழக்கத்தை முன்வைத்தவர் அவர்தான். பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அண்ணாதனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்த பின்னரும், அவரது கொள்கைகளையே திமுகவும் தனது கொள்கையாகக் கொண்டது. தேர்தல் அரசியல் கூடாது என்பதில் தனது வாழ்நாள் முழுவதும் உறுதியாக இருந்தார்பெரியார். முதலமைச்சர் பதவி தம்மைத் தேடிவந்த போதும் அதனை ஏற்காத மாமனிதர் அவர்.
இன்று தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்கும் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த பேராசான் அவரே. இந்திய அரசியல் சாசனத்தில் முதலாவது திருத்தமாக இடஒதுக்கீட்டை இடம்பெறச் செய்தவர் பெரியார்தான். இதற்காக அவரும், தமிழின முன்னோடிகளும் செய்த தியாகங்களை பட்டியலிட முடியாது. தமிழ்நாடே இன்று கல்வியின் முன்னோடியாகத் திகழ மூல காரணமாக இருந்ததால்தான் அவர் இன்றும் போற்றப்படுகிறார்.
(புதிய தலைமுறைக்காக ஜாகிர் உசேன்)