சிறப்புக் களம்

“அய்யய்யோ...என்னை ஏன் பாஜக வேட்பாளரா அறிவிச்சீங்க?” - பாஜகவுக்கு ஷாக் கொடுத்த சம்பவங்கள்!

“அய்யய்யோ...என்னை ஏன் பாஜக வேட்பாளரா அறிவிச்சீங்க?” - பாஜகவுக்கு ஷாக் கொடுத்த சம்பவங்கள்!

Sinekadhara

தேர்தல்களில் போட்டியிட சீட்டு கொடுக்க மறுக்கிறார்கள் என பிரச்னை செய்யக்கூடியவர்களை பார்த்திருப்போம். ஆனால், "எங்களுக்கு எதற்கு சீட் கொடுத்தார்கள்?" என பிரச்னை செய்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? - அப்படித்தான் நடந்தேறியுள்ளது மேற்கு வங்க மாநிலத்தில்.

தேர்தல்கள் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளுக்குள் கலாட்டாக்கள் கண்டிப்பாக நடைபெறும். கலாட்டாவிற்கு முக்கிய காரணம், தேர்தலில் யார் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதுதான். பெரும்பாலான கட்சிகளில் முக்கியத் தலைவர்கள் பலரும் பிரிந்து செல்வதற்கு காரணம், கட்சித் தலைமை தேர்தலில் சீட்டு கொடுக்காததுதான். ஆனால், மேற்குவங்க மாநிலத்திலோ இதற்கு அப்படியே தலைகீழாக நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காசிப்பூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தருண் சாஹா.
இவர் 2011, 2016-ஆம் ஆண்டு இரண்டு முறை வெற்றி பெற்று, இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள மாலா சாகாவின் கணவர் ஆவார்.

தனது பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள தருண் சாஹா, "நான் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். என்னை கலந்தாலோசிக்காமல், பாரதிய ஜனதா கட்சி அவர்களாகவே எனது பெயரை வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்கள். என் மனைவிக்கும், கட்சிக்கும் நான் துரோகம் செய்யமாட்டேன்" என ஒரு போடு போட, பாஜக தலைவர்கள் செய்தவறியாமல் நெளிந்து கொண்டிருக்கின்றனர்.

அதேபோல சவ்ரங்கி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஷிக்கா மித்ரா. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரான மறைந்த சோமன் மித்ராவின் மனைவியாவார்.

இவரது பெயரும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட, உடனடியாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட மித்ரா, "பாரதிய ஜனதா வழங்கக்கூடிய சீட்டில் நான் தேர்தலில் நிற்பது என்பது என்றைக்கும் நடக்காத ஒன்று. நான் பாஜகவில் இணையாதபோது, என்னை எப்படி அவர்கள் வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறார்கள்? இது முழுக்க மடத்தனம். அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிவை இழந்துவிட்டார்கள்" என சற்று கடுமையான வார்த்தையிலேயே பேசியுள்ளார்.

’’பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த சுவேந்து அதிகாரி சில வாரங்களுக்கு முன்பு என்னை சந்தித்ததார். பாஜகவில் இணையும்படி கேட்டுக்கொண்டார். எனது கொள்கை வேறு, உங்கள் கட்சியின் கொள்கை வேறு. எனவே, உங்கள் கட்சியில் சேரமுடியாது என அவர் முகத்தின் முன்பாகவே தெரிவித்துவிட்டேன்" எனவும் மித்ரா பேசியுள்ளார்.

முன்னதாக, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மன்னந்தாவடி தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மணிகுட்டன் என்பவரது பெயர் அறிவிக்கப்பட்டது. இவர் பணியா பழங்குடி இனத்தவரில் முதன்முதலாக எம்பிஏ முடித்தவர் என்பதால் அந்த தொகுதியில் பிரபலமானவர். எனவே, இவரது பெயரை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக அறிவித்து இருந்தது.

ஆனால் அறிவிப்பு வெளியான உடனேயே இதனைக் கடுமையாக மறுத்த மணிகுட்டன், "எனது பெயர் அறிவிக்கப்பட்ட உடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் எந்த கட்சியிலும் இல்லை. கட்சியில் இல்லாத என் பெயரை ஏன் அறிவித்தார்கள் என எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நான் ஒரு சாதாரண குடிமகன்தான். எனக்கு தேர்தல் அரசியலில் போட்டியிட வேண்டுமென்ற ஆசை கிடையாது. அதே நேரத்தில் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் பாஜகவிற்கு தெரிவித்துவிட்டேன்" எனவும் கூறியிருந்தார்.

இதைச் சொல்லி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கிண்டல் அடிக்க, பாரதிய ஜனதா கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு வேட்பாளர்கள் பாஜக சார்பில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என மறுத்து இருப்பது இந்த தர்மசங்கடத்தை மேலும் அதிகரித்திருக்கின்றது. பொதுமக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் கேலிப் பொருளாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் பாஜகவை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

மிக முக்கியமான தேர்தலில் ஒரு வேட்பாளரின் சம்பந்தமே இல்லாமல் அவரது பெயரை இவ்வளவு பெரிய கட்சி எப்படி அறிவித்தது என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பி வரக்கூடிய நிலையில், தேர்தலில் தற்பொழுது கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்த பெயர் குழப்பம் தொடர்பாக பின்னர் விசாரிக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், இந்த விவகாரம் கட்சியின் டெல்லி தலைமை வரை அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

- நிரஞ்சன் குமார்