சிறப்புக் களம்

பென்னிகுவிக் கல்லறை இடிக்கப்படுவதா?: பொங்கி எழுந்த தமிழர்

பென்னிகுவிக் கல்லறை இடிக்கப்படுவதா?: பொங்கி எழுந்த தமிழர்

webteam

முல்லைப்பெரியாறு அணைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின், லண்டன் கல்லறைக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலந்த முல்லையாற்றின் குறுக்கே அணைக் கட்டி அந்தத் தண்ணீரை பாசனத்திற்கு திருப்பி விட்டு, தமிழகம் வளம் பெறவும், தமிழர்கள் வாழ்வு சிறக்கவும் வழி செய்தவர் ஜான் பென்னிக்குவிக். ஆங்கிலேயே பொறியாளரான இவர், லண்டனில் உள்ள தனது சொத்துக்களை எல்லாம் விற்று இந்த அணையைக் கட்டினார்.

1911ம் ஆண்டு உயிரிழந்த பென்னி குவிக்கிற்கு லண்டனில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்தில் கல்லறை எழுப்பப்பட்டது. லண்டன் தேவாலய விதிப்படியும், லண்டன் அரசு உத்தரவுப்படியும், 100 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் இடிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதில் பென்னிகுவிக் கல்லறையும் அடங்கியது. இந்நிலையில் லண்டனில் படிக்க சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்தான பீரொலி என்ற இளைஞர் பென்னிக்குவிக் கல்லறை இட்டிக்கப்பட உள்ளது குறித்து அறிந்து, பென்னிகுவிக்கின் சகோதரர் வழி பேத்தி மூலம் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், பென்னிக்குவிக் தமிழகத்தில் கடவுளாக பூஜிக்கப்படுபவர் என்பதற்கான ஆதாரங்களை வழங்க உத்தரவிட்டது.

அதன்படி, பென்னிகுவிக் சகோதரர் வழி பேத்தி மற்றும் தேவாலய உறுப்பினர்கள் கடந்த ஜனவரி மாதம் தமிழகம் வந்து முல்லைப்பெரியாறு அணை, பென்னிகுவிக்கிற்கு அரசு கட்டிய நினைவு மண்டபம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். அதோடு, பொங்கல் விழாவை பென்னிகுவிக் பிறந்த நாளன்று கொண்டாடியது வரையிலான ஆவணங்களை லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். நீதிமன்றத்தில் பென்னிக்குவிக் கல்லறை குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், லண்டன் புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்தில் உள்ள பென்னிகுவிக்கின் கல்லறைக்கு நாளுக்கு நாள் பார்வையாளர்கள் வருகை அதிகரித்துள்ளது. கல்லறைக்கு வருவோர், மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். பிரார்த்தனை செய்து வணங்கி நன்றி தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பென்னிக்குவிக்கிற்கு உள்ள முக்கியத்துவத்தை கண்ட லண்டன் நீதிமன்றம், அவரது கல்லறைக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்திருப்பதையும் உற்று நோக்கி வருகிறது. இதற்கிடையில் தேவாலயம் சார்பில், பென்னிக்குவிக்கின் கல்லறை புணரமைக்கப்படும் என அதன் இயக்குனர் தமிழக முதல்வருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். அதோடு, தேவாலய உறுப்பினராக இருக்கும் லண்டன் தமிழரான நெல்சன் கூறும்போது, லண்டன் நண்பர்கள், இந்திய நண்பர்கள் உதவியுடன் கல்லறையை புதுப்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அணைக் கட்டி தமிழகத்தை காத்த பென்னி குவிக்கின் கல்லறையை பாதுகாப்பதும், அதனை புணரமைப்பதும் தான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.