சிறப்புக் களம்

பக்குவமில்லா பகடி முயற்சி, 'லாஜிக்'கில்லா ஜாலி: பேய் மாமா - ஒரு விரைவுப் பார்வை

பக்குவமில்லா பகடி முயற்சி, 'லாஜிக்'கில்லா ஜாலி: பேய் மாமா - ஒரு விரைவுப் பார்வை

subramani

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, கோவை சரளா, மாளவிகா மேனன், 'மொட்டை' ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் சினிமா 'பேய் மாமா'. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் 'பேய் மாமா' எப்படி இருக்கிறது? - இதோ ஒரு விரைவுப் பார்வை.

பட்டுமலை பங்களாவில் பேய்கள் இருப்பதால், அந்த பங்களாவை யாரும் வாங்க முன்வரவில்லை. அந்த பங்களாவில் இருக்கும் பேய்களை விரட்ட முயலும் வில்லன் குழுவிற்கும் யோகிபாபு குழுவிற்கும் இடையே நடக்கும் நகைச்சுவை கலந்த ஃபேண்டஸி ட்ரீட்தான் இந்த 'பேய் மாமா'வின் திரைக்கதை.

வழக்கமான கதைதான், ஆனால் காலத்திற்கு ஏற்ப சில புதிய விஷயங்களை இதில் சேர்த்திருக்கிறார்கள். வைரஸை பரப்பும் வில்லன் குழு, அதற்கு மருந்து வைத்திருக்கும் பாரம்பரிய எம்.எஸ்.பாஸ்கர் குடும்பம் என நீளும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் ஆறுதல். மற்றபடி நகைச்சுவை என்ற பெயரில் ஸ்பூஃப் ஃபார்முலாவைதான் ஷக்தி சிதம்பரம் இந்தத் திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார்.

ஒரு திரைப்படத்தையோ, பல திரைப்படங்களையோ அல்லது புகழ்பெற்ற திரைப்பட காட்சிகளையோ ஸ்பூஃப் சினிமா (Spoof Movies) ஆக எடுப்பது சினிமாவின் முக்கிய வகைமைதான். அப்படியான படங்களில் பகடிகள் பட்டாஸாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சினிமாக் காட்சியை யூடியூபர்கள் போல் நகைச்சுவை முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது கொஞ்சம் அசதியை ஏற்படுத்துகிறது. டிக் டாக், ரீல்ஸ், ஜாலியான யூடியூப் சேனல்களில் மலிந்துள்ள காமெடி வீடியோக்களை கண்டுகளிக்கும் மக்களுக்கு பெரிதாக வித்தியாசமான சினிமா அனுபவத்தை தருவதில் திணருகிறது 'பேய் மாமா'.

நித்யானந்தாவை இமிடேட் செய்வது, யூடியூபரை கலாய்ப்பது எனத் துவங்கி 'புன்னகை மன்னன்' காட்சிகளை ரேகா - மொட்டை ராஜேந்திரனை வைத்து மீள் உருவாக்கம் செய்வது வரை நீள்வது இழுவை.

பழைய பேய்ப்பட உப்புமாவை புதிய வாழை இலையில் பரிமாறியிருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு உள்ளிட்ட சில அரசியல் விஷயங்களை விமர்சிக்கும் காட்சிகள் ஓகே. ரேகா போன்ற சீனியர் நடிகை, தான் நடித்த திரைப்படக் காட்சிகளை தானே கேலி செய்வது போலான காட்சிகளில் நடித்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும், அது தரும் உருப்படியான தாக்கம் குறித்தும் யோசித்திருக்கலாம்.

பாடல்கள், கிராஃபிக்ஸ் காட்சிகள், ஒளிப்பதிவு இவை எல்லாம் கதைக்கு ஏற்ப நிறைவாகவே அமைந்திருக்கிறது. திரைக்கதைக் கோர்வை, கதை அமைப்பு உள்ளிட்டவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு ஜாலியாக இரண்டு மணி நேரத்தை குடும்பத்தோடு செலவு செய்ய நினைப்பவர்களுக்கு 'பேய் மாமா' நல்ல ஜாலி மாமாவாக இருப்பார்.

யோகிபாபு தனது வழக்கமான வலிந்து திணிக்கும் செயற்கையான நகைச்சுவை பாணியைத் தவிர்த்துவிட்டு, கதாபாத்திரத்தின் போக்கில் இயல்பாக நடித்திருப்பது இன்னோர் ஆறுதல்.