சிறப்புக் களம்

கொரோனா நோயாளியின் பராமரிப்பாளர் அணுகப்படுவது எப்படி? - ஓமந்தூரார் மருத்துவமனை டீன் பேட்டி

கொரோனா நோயாளியின் பராமரிப்பாளர் அணுகப்படுவது எப்படி? - ஓமந்தூரார் மருத்துவமனை டீன் பேட்டி

நிவேதா ஜெகராஜா

மருத்துவனைக்குச் செல்லும் நோயாளியின் பராமரிப்பாளர்கள், தொற்று அபாயத்தை தவிர்க்க எந்தளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் விவரிக்கும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் டீனும், மருத்துவருமான ஜெயந்தி, நோயாளியின் நேரடி பராமரிப்பாளருக்கு, நோய்த்தடுப்புக்காக மருத்துவமனையில் என்னென்ன வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதையும் நமக்குத் தெளிவாக விளக்குகிறார். 

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வார்டுகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மிகவும் ஆரோக்கியமான விஷயமாக இது பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்களில் அதிக பாதிப்புகள் தெரியவரும் மாநிலத்தில் தமிழகத்துக்கே முதலிடம்.

சூழலை சமாளிக்க, அரசு முன்பைவிடவும் வேகமாகவும், விரைவாகவும் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. தொற்றை கட்டுப்படுத்துவதில், அதன் பரவலை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு, தொற்றாளர்களை காக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

அந்தவகையில், நோயாளிகளை தனிமைப்படுத்துவது குறித்தும், அவர்களை பராமரிப்பதை பற்றியும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால், அவர்களை பராமரிக்க தினமும் மருத்துவமனைகளுக்கு வரும் பராமரிப்பாளர்களுக்கு நிறைய அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. வீட்டுத்தனிமையில் இருப்போரை பராமரிக்கும் நபர்களைவிட, இப்படி மருத்துவமனையில் இருப்போரை பராமரிக்கும் நபர்களுக்கு தொற்று ஆபத்து அதிகமென்பதால் இது சொல்லப்படுகிறது.

“பல நேரங்களில், அவர்களை கொரோனா வார்டுக்கு அனுமதிப்பது கிடையாது” என்கிறார் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் டீன் ஜெயந்தி. இதுபற்றி அவர் விரிவாக பேசும்போது, “தொற்று அபாயம் இருப்பதால், பெரும்பாலும் பார்வையாளர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், நடப்பதற்கே சிரமப்படுபவர்கள், உடல்ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு மட்டும், பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவர். அவர்களும் உள்ளே செல்லும்போது, பாதுகாப்பு உடைகள் அணிந்திருப்பர்.

இப்படி செய்யும்போது, ஒரு சில பராமளிப்பாளர்களுக்கு பதற்றம் வருவது இயல்புதான். அதை தவிர்க்க, பராமரிப்பாளர், கீழே தனியாக காத்திருப்போர் அறையில் அமரவைக்கப்பட்டிருப்பர். அங்கு நோயாளியின் நிலையை, ரிப்போர்ட்டை பெரிய திரையில் அப்டேட் செய்து திரையிடுகிறோம். அதன்மூலமாக நோயாளியின் உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அவர் அறியலாம்.

கூடவே, வார்டுகளில் ‘நோயாளிகள் உதவி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு, அவரைப்பற்றி கேட்டு அறிந்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் அவருடன் பேசலாம்.

இதன்மூலம் பராமரிப்பாளர்களின் பதற்றம் குறையும். நம்முடைய உறவினர் பாதுகாப்பாக உள்ளார் என்ற தன்னம்பிக்கையும் கிடைக்கும். இந்த வசதிகளுடன் சேர்த்து, மனநல ஆலோசகர்கள் மூலமாகவும் அவர்களுக்கு பேசும் வசதிகள் செய்து தரப்படுகிறது. ஆகவே எந்தவித பதற்றமும் அவர்களுக்கு இருக்காது” என்றார்.

இருப்பினும், இந்த வசதிகள் அனைத்தும் மாநகர – நகராட்சி – ஒன்றிய மருத்துவமனைகளிலும் இருக்கிறதா என்றால், அதுபற்றிய உறுதியான தகவல்கள் இல்லை.

மருத்துவரும் செயற்பாட்டாளருமான ரவீந்திரநாத் கூறும்போது, “பராமரிப்பாளர்களுக்கு தேவையான வசதிகள் அரசு சார்பில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவை அனைத்து இடங்களுக்கும் கிடைத்துள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த விஷயத்தில், செவிலியர்கள் – பணியாளர்கள் என பலரும் இதுவரை மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கூடுதல் பணியாளர்களுக்கான தேவை இருக்கிறது. பேண்டெமிக் நிலையென்பதால், பராமளிப்பாளர்கள் தரப்பிலும் ஒத்துழைப்பு தேவை.

மருத்துவமனைக்கு செல்லும்போது கவனமாக இருப்பது, அடிக்கடி வார்டுக்குள் செல்லாமல் இருப்பது என இருப்பது முக்கியம். மீறி செல்ல நேர்ந்தால், நிச்சயம் பாதுகாப்பு கவசம் அணியவேண்டும். மருத்துவ பணியாளர்கள் தேவைப்படும் இடங்களில், அரசுதான் தன் முனைப்புடன் அதை நிவர்த்தி செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

மருத்துவர் ஜெயந்தி கூறும்போது, “ ‘நோயாளிகள் உதவி மையம்’ என்ற ஐடியா, அனைத்து மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்போதுதான் இது தொடங்கப்பட்டுள்ளது என்பதால், இப்போதைக்கு குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில், அனைத்து இடங்களிலும் விரிவு செய்யப்படும்” என்றார்.