சிறப்புக் களம்

லாஸ் ஏஞ்சல்சில் நடந்த வித்தியாசமான நாடாளுமன்றக் கூட்டம்

லாஸ் ஏஞ்சல்சில் நடந்த வித்தியாசமான நாடாளுமன்றக் கூட்டம்

webteam

வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டம் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே கட்டடத்தில் பங்கேற்பார்கள். ஆனால் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து காணொளிக் காட்சிகள் மூலமும் ஸ்கைப் மூலமும் இணைந்து நடத்திய ஒரு வித்தியாசமான கூட்டம் லாஸ்  ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. அது நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்றக் கூட்டம். 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சென்று வந்தவர் தமிழினியன். நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் அந்தக்  கூட்டத்தில் பங்கேற்றார்.புதிய தலைமுறை இணையதளத்திலிருந்து அவரிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தோம். 

நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு வித்தியாசமான கருத்தாக்கமாக இருக்கிறதே அதைப் பற்றிச் சொல்லுங்கள்....

எப்போதுமே ஈழத் தமிழர்கள் தங்களுக்னெ புதிய பாதையை வகுத்து வந்துள்ளனர். எந்த ஒரு போராட்ட அமைப்பும் இயங்காத வகையில் உலகால் அங்கீகரிக்கப்படாத அரச  நிர்வாகம், காவல் நிர்வாகம், நிதி நிர்வாகம், நீதி நிர்வாகம், படை நிர்வாகம் உள்ளிட்ட ஒரு அரசுக்குத் தேவையான அனைத்து அம்சங்களுடன் கூடிய ஒரு அரசாட்சியை  நடத்தி வந்தனர். அமெரிக்காவின் இரண்டடைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னர் உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற வகையில் நடத்திய பல்வேறு  ஒடுக்குதல்களால் புலிகளின் தனித் தமிழீழம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு 2011ல் நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு இந்திய தேசியப் போராட்டத்திற்காக நேதாஜி கட்டமைத்த ராணுவம் சில அரசுகளின்  ஆதரவுடன் இயங்கியது. அதே போல தலாய்லாமா திபெத்தில் இந்திய அரசின் ஆதரவுடன் ஒரு தனியரசு நடத்தி வருகிறார். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது  முற்றிலும் புதிய ஒரு கருத்தாக்கம். இந்த அரசின் நாடாளுமன்றத்திற்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் உரிமை செயல்பாட்டாளர்கள் மத்தியில் இருந்து உறுப்பினர்கள்  தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன்.  

இந்த நாடாளுமன்றக் கூட்டம் எப்போதெல்லாம் நடக்கும்?

இந்த நாடாளுமன்ற கூட்டம் வருடம் தோறும் இரண்டு முறை நடக்கும். மாவீரர் தின வாரம் என்ற பெயரில் நவம்பரிலும், முள்ளி வாய்க்கால் வாரம் என்ற பெயரில் மே  மாதத்திலும் நடக்கும். இந்த முள்ளிவாய்க்கால் வாரக் கூட்டம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 17 முதல் 21 வரை நடைபெற்றது. நான் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். 

கூட்டத்தில் நீங்கள் பங்கேற்ற அனுபவம் பற்றிக் கூறுங்கள்..

நான் முதன் முதலாக பங்கேற்ற கூட்டம் இது. எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. நுழைவு விசா மறுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் லண்டனில் இருந்தும், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் காணொளிக் காட்சி மூலம் அமெரிக்க அரங்கிற்கு வந்து கலந்து  கொண்டனர், முன்னால் இலங்கை பிரதமர் சந்திரிகாவின் சித்தப்பாவாகிய டாக்டர் செனவர்த்தன கூட ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். தமிழகத்தில் இருந்து அதிமுகவின் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், திருமாவளவன், இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோரும்  காணொளி காட்சி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர், 

நாடு கடந்த தமிழீழ அரசு ஆரம்பித்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டது? அது சாதித்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

இந்த ஏழு ஆண்டுகளில் இலங்கை அரசு உலக நாடுகள் மத்தியிலும் ஐநாவிலும் தான் செய்த இனப்படுகொலைக்கு பதில் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி  இருக்கிறது. ஐநா குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் அடிப்படையில் ஒரு சர்வதேச அழுத்தத்தை இலங்கை மீது தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசால் உருவாக்க  முடிந்திருக்கிறது. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை படை அதிகாரிகள் கோத்தபய போன்றவர்கள் இப்போதும் பல்வேறு நாடுகளுக்கும் தொடர்பு அதிகாரிகளாக  இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அந்தந்த நாடுகளில் வழக்குகள் தொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்.

இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழர்கள், தங்களின் அமைப்பை எப்படிப் பார்க்கிறார்கள்?

இப்போதும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் காட்டிலும், நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்றத்தின் மீதுதான் அதிக நம்பிக்கை உள்ளதாக அங்கிருந்து வந்த செய்திகளை என்னால் காண முடிந்தது.