சிறப்புக் களம்

'பன்றிக்கு நன்றி சொல்லி' - ஒரு பன்றியின் சிலைக்கு இத்தனை அக்கப்போரா..? - விரைவு விமர்சனம்

'பன்றிக்கு நன்றி சொல்லி' - ஒரு பன்றியின் சிலைக்கு இத்தனை அக்கப்போரா..? - விரைவு விமர்சனம்

subramani

பாலா அரன் எழுதி இயக்கியிருக்கும் சினிமா ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. வடிவேலு நடித்த புலிகேசி படத்தில் வரும் ஒரு வசனத்தை இப்படத்தின் தலைப்பாக வைத்தது ஒரு கவன ஈர்ப்பைக் கொடுத்தது. அதே ஈர்ப்பு படத்திலும் இருந்ததா எனப் பார்ப்போம்.

அடிப்படையில் இது ஒரு சிலைக்கடத்தல் தொடர்பான கதை. ஆனால் கொஞ்சம் வித்யாசமானது. ஆயிரம் ஆண்டு பழமையான பன்றியின் சிலையொன்று சீனா இந்தியா என பயணித்து கதைக் களத்தை வந்தடைகிறது. அதன் மதிப்பு பத்துகோடிக்கும் அதிகம் எனத் தெரியவரவே., ஒரு ரவுடிக் கும்பல், போலீஸ் அதிகாரிகள் சிலர், தன் முதல் படத்தை இயக்க முயலும் சினிமா உதவி இயக்குநர் என வெவ்வேறு தரப்பு ஆள்களுக்கு நடுவே அந்த சிலைத் தேடல் படலம் தொடர்கிறது. பன்றியின் சிலை என்ன ஆனது அது யாருக்கு ஆதாயத்தைக் கொடுத்தது என்பதே திரைக்கதை.

இப்படத்தின் முக்கிய வேடங்களில் விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், நிஷாந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கடத்தல் கதைக் களம் என்பதாலோ., குற்றப்பின்னனி கொண்ட கதாபாத்திரங்கள் என்பதாலோ ஒளிப்பதிவாளார் இதனை அதற்கு ஏற்ப செஃப்பியா கலர் டோனில் படம் பிடித்திருக்கிறார்.

முதலில் படத்தின் கதை அழுத்தமாக இல்லை. பிறகு சிலையினைத் தேடிச் செல்வதற்கான தர்கங்கள் முயற்சிகள் என எல்லா காட்சிகளுமே மேலோட்டமாக அணுகப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் எந்த இடத்திலும் கதைக்குள் உள்ளே நுழைய முடியவில்லை. மேலும் பாத்திரங்களின் நடிப்பில் இருக்கும் செயற்கைத்தனம். சின்னச் சின்ன காட்சிகளுக்குக் கூட குட்டி குட்டி ப்ளாஸ்பேக் வைத்திருப்பது. என எல்லாம் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. இதனால் திரைக்கதை பல ஹேர்பின் பெண்டுகளை கடக்க வேண்டியிருக்கிறது. அதுவே பார்வையாளர்களுக்கு தலை சுற்ற வைக்கிறது. சுரேன் விகாஷ் இசையில் பாடல்கள் சுமார்.

நகைச்சுவை ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மாத்திரைகள் மூலம் டம்மியாக குழப்பத்தை ஏற்படுத்த முயலும் ஐடியா நன்றாக உள்ளது. ஆனால் அந்த மாத்திரையும் வேலை செய்யவில்லை என்பதே சோகம். நல்ல வேலையாக படத்தின் நீளம் குறைவாக உள்ளது.

தற்போது நேரடியாக சோனி லைவில் வெளியாகியிக்கும் இந்த சினிமா நிச்சயம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் திருப்திப்படுத்தும்.