'பத்மாவத்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்ணி சேனா அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் வட மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடைகளை மீறி தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவத்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆனால் திரைப்படம் முழுவதுமாக எல்லா இடங்களிலும் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜாரத் மாநிலங்களில் படத்தை வெளியிடவில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துவிட்டனர். பீகாரிலும் வன்முறை சம்பங்கள் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. கொல்கத்தாவில் 129 தியேட்டர்களில் படம் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் படம் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் 300 திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் படம் வெளியிடப்பட்டது. ஹரியானாவின் சோனிபுட், யமுனா நகர், பஞ்ச்குலா, சிர்ஸா, கர்னல், குருஷேத்ரா உள்ளிட்ட இடங்களில் உள்ள திரையரங்களில் படத்தை வெளியிட உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். படம் வெளியான திரையரங்குகளிலும் குறைவான மக்களே வந்தனர். டெல்லியிலுள்ள திரையரங்குகளில் 60 சதவீதம் இருக்கைகள்தான் நிரம்பின. மும்பையில் மிகவும் குறைவாக 40-50 சதவீதம் இருக்கைகள்தான் நிரம்பியது.
கடந்த சில தினங்களாகவே பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களுக்குத் தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தன. ரிலீஸ் நாளான இன்று கர்ணி சேனா அமைப்பினர் முழு வீச்சில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளிலும், திரையரங்குகள் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குர்கான் நகரில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி வாகனம் மீது நேற்று கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கர்ணி சேனா இந்தச் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள், தலித்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள்தான் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று அவர் கடுமையாக சாடினார்.
பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களிலும், பஞ்சாப், டெல்லி மாநிலங்களிலும் போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கர்ணி சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் பல வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் உருவ பொம்மை பல்வேறு இடங்களில் எரிக்கப்பட்டது. சாலையோர கடைகளில் உள்ளவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
முஸாபர்பூர் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைகளில் வாள்களை ஏந்தியவாறு இருசக்கர வாகனங்களில் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் சாலையில் டயர்களை தீயிட்டு கொளுத்தினர். உத்தரபிரதேசத்தின் டியோபந்த் பகுதியில் பெண்கள் சிலரும் வாள்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சினிமா திரையரங்கு முன்பு பஜ்ரங் தள் மற்றும் போலிசார் இடையே மோதல் ஏற்பட்டது. வாரணாசியில் சினிமா ஹால் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். லக்னோவில் கர்ணி சேனா அமைப்பினர் விநோதமான முறையில் போராடினர். திரையரங்குக்கு வரும் மக்களுக்கு பூக்களை கொடுத்து படம் பார்க்கக்கூடாது என்று வலியுறுத்தினர். டிக்கெட்டிற்கான பணத்தையும் கொடுப்பதாகக் கூறினர்.
மாநில அரசுகள் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தத் தவறிவிட்டன. அதோடு, பாஜகவை சேர்ந்த சிலர் வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக வன்முறையை பாஜக அரசுகள் கட்டுப்படுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பாஜகவினரும் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.
'பத்மாவத்' வன்முறை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசுகளைக் கண்டித்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங், ‘மக்கள் மனங்களை புண்படுத்தும் திரைப்படங்களை எடுக்கக் கூடாது’ என்று மறைமுகமாக 'பத்மாவத்' படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்தக் கேள்வியை எழுப்பியது. அதேபோல், கர்ணி சேனாவின் வன்முறை சம்பவங்கள் குறித்து ராகுல் காந்தி ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்தக் கருத்து எடுக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், ராகுல் காந்தி வலிமையாக கண்டிக்கவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
வன்முறை சம்பவங்கள் ஒருபுறம் அரங்கேற மறுபுறம் வெளிப்படையாக சிலர் தலைகளை வெட்ட விலை அறிவித்தனர். சத்ரிய மகாசபா அமைப்பு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தலைக்கு 51 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்து மிரட்டல் விடுத்துள்ளது. அதேபோல், தீபிகா படுகோனே மூக்கை வெட்டினால் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்படும் எனவும் அறிவித்தனர்.
பெரும்பாலான வடமாநிலங்கள் வன்முறை சம்பவங்களால் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் தனது மவுனத்தை தொடர்ந்து காத்து வருகிறார். மாநில அரசுகள் ஒருபுறம் வன்முறையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல், மத்தியில் ஆளும் பாஜக அரசும் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. அதற்கு காரணமாக, “சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பிரச்னை, அதில் மத்திய அரசு தலையிட முடியாது” என்று தெரிவித்துவிட்டது. மத்திய பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பும் திட்டமும் இல்லை என்று உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறிவிட்டார்.