சிறப்புக் களம்

"பணிபுரியும் பள்ளிகளிலேயே சொந்தக் குழந்தைகள்"- அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனமாற்றம்

"பணிபுரியும் பள்ளிகளிலேயே சொந்தக் குழந்தைகள்"- அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனமாற்றம்

webteam

(தருமபுரி மாவட்டம் சின்னம்பள்ளி அரசுப்பள்ளி)

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. முதல் பத்து நாட்களிலேயே தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஆறு லட்சத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் அந்த எண்ணிக்கை இன்னும் 50 ஆயிரத்தை தாண்டவும் வாய்ப்புண்டு. தற்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருவதாகக் கூறுகிறார் புதிய தலைமுறை இணையதளத்திடம் பேசிய சென்னையைச் சேர்ந்த கல்வியாளர் உமா.

(கல்வியாளர் உமா)

“பல இன்னல்களுக்கு மத்தியில் மக்களின் நம்பிக்கை தங்கள் ஊர் அரசுப் பள்ளிகளின்மீது திரும்பியுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொருளாதாரக் காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும் சமீப காலங்களில் அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது உற்சாகம் தருகிறது.

கூடுதலாக பல பெற்றோர்கள் தங்கள் ஊர் அரசுப் பள்ளியை மூடிவிடும் சூழலுக்கு அனுமதிக்கக்கூடாது என்ற சமூக அக்கறையும் கொண்டுள்ளனர். இவற்றைக் காண்கையில் மாற்றங்களை நோக்கி நமது சமூகம் நகர்கிறது என்ற எண்ணம் உருவாகிறது. இந்தக் கல்வியாண்டில் பெரும்பாலான அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துவருகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களும் அதில் அடங்குவர்.

திருச்சி மாவட்டத்தில் எம். களத்தூர் பகுதியில் பணியாற்றிவரும் அரசுப் பள்ளி ஆசிரியர் குருமூர்த்தி, இந்த ஆண்டு தனது மகனை அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார். ஏற்கெனவே அவரது மகள், தான் பணிபுரியும் அரசுப் பள்ளியிலேயே மூன்றாம் வகுப்பில் படித்துவருவதாகச் சொல்கிறார்.

(ராமநாதபுரம் மாவட்டம், இளமணூர் அரசுப் பள்ளி) 

என்னுடைய பிள்ளைகள் மூவரையும் அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் சேர்த்துள்ளேன் என்கிறார் திருப்பத்தூர் மாவட்ட ஆண்டியப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர். போளூரைச் சேர்ந்த ஆசிரியர் ஜெகநாதன், தனது மகளை முதல் வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார். சாம் அபிஷேக், ஆராதனா என்ற தன் இரு குழந்தைகளையும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மானியாத அள்ளி அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார் பட்டதாரி ஆசிரியர் பெரியசாமி.

(பாபநாசம் அரசுப் பள்ளி)

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பள்ளி ஆசிரியர் காந்தி தனது இரு குழந்தைகளையும் உற்சாகத்துடன் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார். கோவை மாவட்டத்தின் செம்மாண்டம்பாளையம் அரசு பள்ளி ஆசிரியர் ஜாஸ்மின் விக்டோரியா, தனது மகனை தனியார் பள்ளியிலிருந்து மாற்றி சூலூர் பகுதி அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்த்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

கோவை மாவட்டம், ஆலத்திவச்சினம் பாளையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் கனகராஜ், தனது குழந்தையை அன்னூர் அருகே புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியராக இருப்பதால் இங்குதான் குழந்தைகள் ஆடிப் பாடி மகிழ்ச்சியாகக் கற்கமுடியும் என்பதை உணர்ந்து அரசுப் பள்ளியில் சேர்த்ததாகக் குறிப்பிடுகிறார்.

(ஆசிரியர் கனகராஜ்)

இராமநாதபுரம் மாவட்டம், இளமணூரில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் சுமதி, தனது மகனை அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் நல்லூர் கிராம தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நித்தியானந்தமும் அவரது மனைவியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். இவர்கள் தங்கள் மகளை கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர்.

(ஆசிரியர் குருமூர்த்தி)

கரூர் மாவட்டப் பகுதி பொய்யாமணி அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பூபதி, தனது மகனை தான் பணிபுரியும் பள்ளியிலேயே முதல் வகுப்பில் சேர்த்துள்ளதுடன், தனது மற்றொரு குழந்தையும் அரசுப் பள்ளியில் படிப்பதை உறுதிசெய்கிறார். தருமபுரி மாவட்ட தாமரைக்கோழியப்பட்டி பள்ளி ஆசிரியர் இளவரசன், தனது பள்ளியிலேயே மகளை முதல் வகுப்பில் சேர்த்துள்ளார். வேதாரண்யம் அருகிலுள்ள அண்டகத்துறை தொடக்கப்பள்ளி ஆசிரியர் மா.தமிழரசன், ஆசிரியை த.சுபா ஆகியோரின் மகள் காவிகாவை கருப்பம்புலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துள்ளார்கள்.

(ஆண்டியப்பனூர் அரசுப் பள்ளி)

இப்படி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்தக் கல்வியாண்டில் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியிலிருந்து மாற்றி அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதும், அரசுப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதும் தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்ந்துவருவது பாராட்டுக்குரியது . இப்படி தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நல்ல மாற்றத்தை நிகழ்த்திவருகிறது” என்கிறார் கல்வியாளர் உமா.