சிறப்புக் களம்

சருமத்துக்கான ஸ்டீராய்டு க்ரீம்களின் பக்கவிளைவுகள் மோசமானவை - ஒரு அலர்ட் பார்வை

சருமத்துக்கான ஸ்டீராய்டு க்ரீம்களின் பக்கவிளைவுகள் மோசமானவை - ஒரு அலர்ட் பார்வை

Sinekadhara

ஸ்டீராய்டுகள் பொதுவாக சில முக்கிய நோய்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஸ்டீராய்டுகளின் அளவை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். அதாவது, எந்த டோசேஜ் அளவில் எவ்வளவு நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்கள் கூறுவார்கள். ஸ்டீராய்டுகள் மாத்திரை, ஊசி மற்றும் க்ரீம் போன்ற பல வடிவங்களில் வெளிப்புறமாகவோ அல்லது உடலின் உள்ளேயோ எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

வெளிப்புறத்தில் பெரும்பாலும் க்ரீம் வடிவில்தான் ஸ்டீராய்டுகள் பயன்படுத்தப்படும். இவை தோல் தடிப்பு மற்றும் அழற்சி போன்ற பிரச்னைகளுக்காக குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். ஸ்டீராய்டுகள் சரும வீக்கம் மற்றும் தடிப்பை சரிசெய்யுமே தவிர பாக்டீரியாக்களை அழிக்காது. அதேசமயம் ஸ்டீராய்டுகள் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்கிறனர் நிபுணர்கள். எனவே இதை காயங்கள்மீது பயன்படுத்தக் கூடாது என தெளிவாக எச்சரிக்கின்றனர். 
இதுகுறித்து சரும நிபுணர் ரவீந்திரன் பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார். அதன் விவரம்:

ஃப்ளூசினோலோன், ஹைட்ரோகார்டிசோன் மற்றும் பீட்டாமெதாசோன் போன்ற பொதுவான ஸ்டீராய்டு மருந்துகள் க்ரீம், ஜெல் வடிவங்களில் மருத்துவர்களின் பரிந்துரை படிதான் கொடுக்கப்படும். ஆனால் சிலர் சரும நிறத்தைக் கூட்ட மருத்துவர் பரிந்துரையின்றி மெடிக்கல்களில் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் ஆரம்பத்தில் சருமம் பொலிவு பெற்றாலும் அதன் பக்கவிளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. ஸ்டீராய்டு மருந்துகளை குறிப்பிட்ட அளவிற்குமேல் அதிக நாட்களுக்கு பயன்படுத்தும்போது அவை மேற்புறத் தோலின் அடர்த்தியை குறைக்கின்றன. இதனால் சருமம் சிவந்து போவதுடன், வெயிலில் செல்லும்போதும், வீரியமிக்க சோப்புகளை பயன்படுத்தும்போதும் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. மேலும் க்ரீம் பயன்படுத்தப்பட்ட இடத்தில் சரும வறட்சி, அதீத முடிவளர்ச்சி மற்றும் அழற்சி போன்றவை ஏற்படுகிறது.

அளவுக்கதிகமாக ஸ்டீராய்டு பயன்பாட்டின் பக்கவிளைவுகளை நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்...

டச்சிபிலாக்ஸிஸ்(Tachyphylaxis): ஒரே வித ஸ்டீராய்டை தொடர்ந்து சருமத்தின்மேல் பயன்படுத்தும்போது அதன் வேலைசெய்யும் தன்மை குறைகிறது. அதாவது, ஸ்டீராய்டின் தன்மையை சருமம் ஏற்றுக்கொள்வதால் அது குறிப்பிட்ட நாட்களுக்குமேல் சருமத்தின்மீது பயன்தராமல் போகிறது.

ஸ்டீராய்டு ரோசாசியா (Steroid Rosacea): சரும நிறத்தைக் கூட்ட பயன்படுத்தப்படும் க்ரீம்களை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பயன்படுத்திக்கொண்டே இருக்கும்போது நன்கு பொலிவுபெற்ற சருமத்தின் நிறம் நாளுக்குநாள் குறையத் தொடங்கும். எரிச்சல், சிவந்து போதல் போன்ற பக்கவிளைவுகளால் க்ரீம் பயன்பாட்டை நிறுத்தும்போது சருமம் முன்பு இருந்ததைவிட அதிகமாக கருத்துப்போவதுடன், பருக்களையும், அதிக எண்ணெய்த்தன்மையையும் உண்டுபண்ணும்.

தோல் அட்ராபி (Skin Atrophy): தொடர்ந்து ஒரே ஸ்டீராய்டு மருந்தை சருமத்தின் குறிப்பிட்ட பரப்பின்மீது பயன்படுத்தும்போது அது சருமத்தின் மேற்புற அடுக்கான எபிடெர்மிஸை (epidermis) மெலிதாக்கி, நடுப்புற அடுக்கான டெர்மிஸுடன் இணையும் தன்மையை மாற்றுகிறது. இதனால் சருமம் அதிக சென்சிட்டிவ் ஆவதுடன், சுருங்க ஆரம்பித்துவிடும். மேலும் அது உடலின் மற்ற சருமத்திலிருந்து வித்தியாசமாகத் தெரியும். அதாவது உட்புற சிறுநரம்புகள் வெளியே தெரிவதுடன், சருமம் வெளிறிப்போகும். இதனால் ஸ்டீராய்டு பயன்பாட்டை நிறுத்தும்போது சருமம மீண்டும் பழைய நிலையை அடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு பல மாதங்கள் ஆகலாம்.

சருமக்கோடுகள் (Stretch Marks): தொடர்ந்து ஸ்டீராய்டு பயன்படுத்தப்படும்போது சருமம் ஒன்றையொன்று உராயும் இடங்களில் குறிப்பாக இடுப்பு மற்றும் அக்குள் போன்ற இடங்களில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் என்று சொல்லக்கூடிய கோடுகள் உருவாகின்றன. ஸ்டீராய்டுகளால் உருவாகும் இந்த கோடுகளை சரிச்செய்ய இயலாது. மேலும் அந்தப் பகுதியில் அரிப்பு ஏற்படுவதுடன், அதைக் குணப்படுத்த ஸ்டீராய்டு குறைவான மருந்துகளையே பயன்படுத்த நேரிடும்.

க்ளக்கோமா (Glaucoma): இது கண்களில் ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து பார்வை நரம்பை பாதிக்கக்கூடிய நோய். அதாவது கண்களைச் சுற்றி நீண்டநாட்கள் ஸ்டீராய்டு மருந்தை பயன்படுத்தும்போது அது க்ளக்கோமா பிரச்னைக்கு வழிவகுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவேதான் பெரும்பாலான க்ரீம்களை கண்கள்மீது பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

தொற்றுநோய்கள்: தொடர் ஸ்டீராய்டு பயன்பாடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மாற்றியமைக்கக்கூடியது. இதனால் ஸ்டீராய்டு பயன்படுத்தப்பட்ட பகுதிக்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களை எதிர்க்கும் ஆற்றல் குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு சாதாரண சருமத்தின்மீது ஏற்படும் பூஞ்சைத் தொற்றைவிட ஸ்டீராய்டு சருமத்தின்மீது தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதாவது அதிகமாக சிவத்தல், அரித்தல் மற்றும் வேகமாக பரவுதல் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.