தோனி என்ற சகாப்தம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டது. நிச்சயமாக இந்த முடிவை இவ்வளவு எளிமையாக சொல்ல அவரால் மட்டுமே முடியும். அதுதான் தோனி. சரி மற்ற கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறும்போது இல்லாத பரபரப்பு இந்த மனிதனுக்கு இருக்கிறதே என்று நீங்கள் எண்ணலாம். அதற்கான காரணம் போட்டிகளில் அவர் விளாசிய சதங்கள் மட்டுமல்ல, அதன் வழியாக அவர் நமக்கு கடத்திய வாழ்க்கை பாடங்கள். அதை இன்னும் நெருக்கமாக தெரிந்து கொள்ள தோனியுடன் பழகியவர்களிடம் பேசினோம்.
பாவனா - பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர்
1 . தோனியை நீங்கள் மைதானத்தில் எப்படி பார்க்கிறீர்களோ, அப்படித்தான் அவர் நிஜத்திலும். அதே புன்னகையுடன் தான் இருப்பார்.
2. அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். விளையாட்டு அல்லாத பிற நேரங்களில், மற்ற கிரிக்கெட் வீரர்களை கலாய்த்து தள்ளி விடுவார்.
3. அவருக்கு நாய்கள் என்றால் உயிர். பயிற்சி நேரங்களில் சேப்பாக்கத்தில் ஏதேனும் நாய்கள் நுழைந்தால் அதனுடன் கொஞ்சி விளையாடுவார். அதே போல நாடு அவரது மகளும் அவருக்கு மற்றொரு உயிர்கள்.
4. ஒரு பெண் தொகுப்பாளினியாக சொல்கிறேன். அவர் அனைவரையும் மிக மரியாதையாக நடத்துபவர். குறிப்பாக பெண்களை. நான் ஒவ்வொரு முறை அவரை பேட்டி காணும் போதெல்லாம் எனது கண்களை பார்த்தே அவர் பதிலளித்திருக்கிறார். அருகில் ரசிகர்கள் இருந்தால் அவர்களுக்கான மரியாதையை அவரது கண்கள் கடத்த மறவாது.
5. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு அன்புள்ள தந்தை. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் அவருடனான பேட்டிகளின் போது அவரது மகள் அவரை வந்து கட்டிப்பிடிப்பார் அல்லது ஏதாவது செய்வார். அந்த சமயங்களில் அதை அவர் தடுக்கமாட்டார். அதை அனுமதித்துக்கொண்டே பேட்டியை தொடருங்கள் என்பார்.
தோனி ரெய்னா உறவை எப்படி பார்க்கிறீர்கள்? ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்து விட்டாரே?
ரெய்னா தோனியை மைதானத்தில் மட்டும் கேப்டனாக பார்க்கவில்லை. வாழ்க்கையிலும் கேப்டனாக பார்க்கிறார். ஒரு முறை அவரை நாங்கள் தோனி பார்த்து தல என்று அழைக்கச் சொன்னோம். ஆனால் அவரை அவர் கேப்டன் என்றே அழைத்தார். தோனியுடன் அவர் ஓய்வு முடிவை அறிவித்தது தோனி மீதான அவரது நேர்மையைக் காட்டுகிறது” என்றார்.
முன்னாள் சிஎஸ்கே வீரர் - வித்யூத் சிவராமகிருஷ்ணன்
1. எனக்கு அவருடைய எளிமையான குணம் மிகவும் பிடிக்கும்.
2. இந்திய நாடு மீதான அவரது பற்று என்னை பல முறை நெகிழச் செய்திருக்கிறது. குறிப்பாக இந்திய ராணுவத்திற்காக அவர் செய்த விஷயங்கள்.
3. அவர் அனைவருக்கும் உதவும் தன்மை கொண்டவர். குறிப்பாக போட்டிகளில் இளைஞர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து விளையாட அனுமதிப்பார்.
4. நீங்கள் சிறிய விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, இல்லை பெரிய விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி அவரது அறைக் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்.
5. சென்னை அணியுடனான பிணைப்பை, நமக்குள் உணர்வாக கடத்தியதில் தோனிக்கு பெரும் பங்கு உண்டு. அதற்கு காரணம் அவரின் எளிமையான குணம் என்று நான் நினைக்கிறேன்.
சுமந்த் ஸ்ரீ ராமன் - கிரிக்கெட் விமர்சகர்‘
1. அவரது வெற்றிக்கு அவர், எதற்கும் சலனப்படாத அமைதியான குணமே காரணம் என்று நான் நினைக்கிறேன்.
2. தோனி உண்மையில் ஒரு எண்டர்டெய்னர். ஆம் முன்பெல்லாம் சச்சின் அவுட் ஆகி விட்டால் ரசிகர்கள் ஸ்டேடியத்தை விட்டு கிளம்பி விடுவார்கள். அதன் பின்னர் அந்த இடம் தோனிக்குச் சென்றது. தோனி இருக்கும் வரை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என ரசிகர்கள் நம்பி ஸ்டேடியத்தில் அமர்வர். அதற்கு ஏற்றார்போல் தோனியும் தனது பல இக்கட்டான சூழ்நுலையில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
தோனியுடன் ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்ததை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இந்திய அணியில் ரெய்னாவுக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்று அவருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. ஏனெனில் இந்திய அணி புது புது வீரர்களை களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதனால் கூட அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கலாம். என்றார்.