திருச்சியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் பாதியாக குறைந்துள்ளன. இதனால் அந்நிறுவனத்தை சார்ந்து இயங்கக்கூடிய சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. 1956 ஆம் ஆண்டு நிறுவனம் துவங்கப்பட்டு 60 ஆண்டுகளை கடந்த நிலையில், முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்து அதிர்ச்சி அளித்திருக்கிறது பெல் நிறுவனம். அதற்கு என்ன காரணம் என்றும் நஷ்டத்தில் இருந்து நிறுவனத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே விரிவாக காண்போம்.
நஷ்டத்தில் இயங்கும் புகழ்பெற்ற பெல் நிறுவனம்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான “பெல் நிறுவனம்” பவர் பிளான்ட் என்று சொல்லக்கூடிய மின் உற்பத்தி நிலையங்களுக்கான பாய்லர் உள்ளிட்ட இதர பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு 30,000 கோடி ரூபாய் வரை ஆர்டர்களை பெற்று இயங்கி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் பெறப்படும் ஆர்டர்கள் பாதியாக குறைந்துள்ளன. இதனால் பெல் நிறுவனத்தை சார்ந்து இயங்கக்கூடிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், சில நிறுவனங்கள் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
“வரலாற்றிலேயே முதல்முறையாக நஷ்டத்தை சந்திக்கும் பெல்”
இதுகுறித்து பேசிய பெல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியரும் சிஐடியு தொழிற்சங்கத்தின் செயலாளருமான அன்வர், “ஒரு காலத்தில் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிகர வருவாய் (turn over) ஈட்டிய நிலையில், நவரத்தினா, மகாரத்னா என்ற நிலைகள் பெல் நிறுவனத்திற்கு கிடைத்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 23 ஆயிரம் கோடி, 25 ஆயிரம் கோடி மட்டுமே நிகர லாபமாக (டர்ன் ஓவராக) உள்ளது. முப்பதாயிரம் கோடி ரூபாயை கூட கடக்கவில்லை. லாபமும் வெகுவாக குறைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட முதல் முறையாக பெல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. ஆரம்பித்த காலம் தொட்டு நஷ்டம் என்பதே வந்ததில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டத்தை சந்தித்தது. 2022-23 க்கான முதல் காலாண்டு அறிக்கையில் 192 கோடி நஷ்டம் என காட்டப்பட்டுள்ளது. ஆனால் நிதியாண்டு முடிவதற்குள் சரி செய்து விடுவதாக தெரிவித்துள்ள நிலையில், காலாண்டு கணக்கில் கூட பெல் நிறுவனம் இதுவரை நஷ்டத்தை சந்தித்தது இல்லை என்பதே உண்மை.” என்று கூறினார்.
“மின்சாரத் துறையில் அனுமதித்தே காரணம்”
மேலும் பேசிய அன்வர், “இதற்கு மின்சாரத் துறையில் தனியாரை அனுமதித்ததே அடிப்படை காரணம் ஆகும். இவ்வாறு தனியாரை அனுமதிப்பது காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே தொடங்கி, தொடர்ந்த நிலையில் தற்போதுள்ள அரசாங்கம் கூடுதலாக அதிகரித்துள்ளது. இதன் முக்கிய காரணிகள் மின் நிறுவனங்களை மின்சார வாரியம் அல்லது மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் அமைத்து வந்த நிலையில், இப்பொழுது தனியாருக்கு அனுமதித்துள்ளதன் காரணமாக ரிலையன்ஸ், அதானி, டாட்டா, பிஎம்ஆர், பிஜிஆர் உள்ளிட பல தனியார் நிறுவனங்களும் பங்கு கொள்கின்றது. இதனால் பெல் நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்கள் குறைகிறது. இது மட்டுமல்லாது வெளிநாட்டு நிறுவனங்களான சீனா, கொரியா நிறுவனங்களுக்கும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகிறது. சீன நிறுவனங்கள் ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்வதுடன், மெட்டீரியல்ஸ் வாங்குவதற்கு நிதியும் கொடுப்பதும், பெல் நிறுவன ஆர்டர்கள் கிடைக்காமல் போவதற்கு ஒரு காரணம்.
“அதிக தனியார் நிறுவனங்களும் முக்கிய காரணம்”
மிக முக்கியமாக பெல் நிறுவனத்திற்கு போட்டியாக உள்நாட்டிலேயே பல நிறுவனங்கள் தற்போது உருவெடுத்துள்ளன. ஜப்பான், கொரியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் BHEL செய்யும் அதே உற்பத்தியை செய்கின்றனர். ஆரம்பத்தில் இவர்கள் பெல் நிறுவனத்திற்கு பெரிய அளவில் போட்டியாளர் இல்லை. காரணம் என்னவென்றால் ஒரு மின் நிலையம் அமைக்க என்னவெல்லாம் தேவையோ பாய்லர், டர்பன், நட், போல்ட் உள்ளிட்ட அனைத்தையும் பெல் நிறுவனம் தயாரித்து வழங்கியது. எனவே பெல் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுப்பவர்கள் கவலையின்றி இருக்கலாம். அனைத்தும் பெல் நிறுவனத்திடம் இருந்து சென்று சேரும்.
ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதேனும் ஒரு உதிரி பாகத்தை மட்டும் செய்து தருபவையாக இருந்த நிலையில், தற்போது அனைத்தையும் உற்பத்தி செய்ய தொடங்கி விட்டதால் பெல் நிறுவனத்திற்கு ஆர்டர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இத்தனியார் நிறுவனங்கள் 10, 15 மெகாவாட் அளவிற்கு அதிக அளவிலான டெண்டர்களைப் பெற்றதும் ஒரு காரணம். பெல் நிறுவனம் அனைத்து டெண்டர்களிலும் பங்கேற்ற அனுமதி வழங்க வேண்டும், கூடுதலாக டெண்டர் தொகை கோரப்பட்டிருந்தாலும் பொதுத்துறை நிறுவனமான வெல் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
“அரசு ஆர்டர்களை பெல் நிறுவனத்திற்கு தரவேண்டும்”
அரசு சார்ந்த ஆர்டர்களை பெல் நிறுவனத்திற்கு ஒதுக்குவதன் மூலம் தற்போது உள்ள லாப போக்கின் தொய்வு மற்றும் நஷ்டம் அடையாமல் பெல் நிறுவனத்தை எப்பொழுதும்போல இயக்க முடியும். பெரும்பாலும் தமிழக அரசு பெல் நிறுவனத்திற்கே மின்வாரியம் சார்ந்த ஆர்டர்களை கொடுக்கிறது. இருப்பினும் கடந்த ஆட்சியில் ஒரு ஆர்டர் தனியார் நிறுவனத்திற்கு சென்ற நிலையில் இனி வரும் காலங்களில் அது போன்ற நிலை ஏற்படாது என நம்புகிறேன். 1990 களில் பெல் நிறுவனத்திற்கு ஒரு மெகாவாட் ஆர்டர் கூட இல்லாத பொழுது அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறியவுடன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து ஆர்டர்கள் பெற்று தரப்பட்டன.
“மாற்றுப் பொருள் உற்பத்தியில் களமிறங்கும் பெல்”
மத்திய அரசின் கொள்கை எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தருவதுதான். அவ்வாறு பெல் நிறுவனத்தையும் தரவேண்டும் என நினைக்கிறார்கள். இப்படியே லாபம் குறைந்து கொண்டே வந்து நஷ்டத்தை சந்திக்கும்போது தனியாருக்கு கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கு அனுமதிக்கக் கூடாது. இது போன்ற லாப போக்கில் தொய்வு ஏற்படுவதையொட்டி பெல் நிறுவனம் மாற்றுப் பொருட்களையும் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது. அவ்வாறு உற்பத்தி செய்யும் பொருட்களில் திருச்சி யூனிட்டுக்கு எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கண்டெய்னர் தயாரிப்பு என சொல்லப்பட்டாலும் இன்னும் அக்ரீமெண்ட் அவ்வாறு வரவில்லை. ஜான்சி, கோபால், பெங்களூரு, ஹைதராபாத் நிறுவனங்கள் மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன.
பெல் நிறுவனத்தின் 30 சதவீத லாபம் திருச்சியில் இருந்து ஈட்டப்பட்ட நிலையில் மாற்றுப் பொருட்கள் உற்பத்தியில் திருச்சியின் நிறுவனத்திற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற ஆர்டர் குறைந்தால் பெல் நிறுவனம் பாதிக்கப்படுவதோடு, சிக்கலை சந்திக்கும் . ஆனால் பெல் நிறுவனம் மூடப்படும் நிலைக்கு செல்லாது. ஆனால் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். இதனால் இந்நிறுவனத்தில் பணிபுரிய ஊழியர்கள் சலுகைகள் கிடைக்கா நிலைக்குத் தள்ளப்படுவர்” என்றார்.
“சிறு,குறு நிறுவனங்கள் பெல் ஆர்டர்களை பெறுவதில் சிக்கல்”
திருச்சி மாவட்டத்தில் மட்டும் துவாக்குடி, அரியமங்கலம், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெல் நிறுவனத்தை சார்ந்து 300க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தநிலையில், தற்போது 100 கம்பெனிகள் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கின்றனர் பெல் நிறுவனத்தை சார்ந்து இயங்கக்கூடிய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர். இதுகுறித்து பேசிய சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பன்னீர்செல்வம், “பெல் நிறுவனங்களில் இருந்து 200 டன் வரை ஆர்டர்கள் வரை சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆர்டர்கள் கொடுக்கப்படுவதில்லை. RIVERS ACTION METHOD கொண்டுவரப்பட்ட பிறகு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆர்டர்களை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
மேலும் வருடாந்திர கணக்கின் அடிப்படையில் ஆர்டர்கள் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் செய்யப்பட்டுள்ள மாற்றமும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை நலிவடைய செய்துள்ளது. சரிவர ஆர்டர் கிடைக்காததால் இதை நம்பி இயங்கிய தொழில் நிறுவனங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை தற்போது இயங்காமல் உள்ள நிலையில், இதே நிலை நீடித்தால் பெல் நிறுவனத்தை நம்பி இயங்கும் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்” என தெரிவித்தார்.
நஷ்டத்தில் இருந்து மீள “பெல்” என்ன செய்ய வேண்டும்?
மின்சார வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசின் ஆர்டர்கள் பெல் நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும், அனைத்து டெண்டர்களிலும் பெல் நிறுவனம் பங்கேற்க அனுமதி வழங்கினாலே பெல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கூடுதலாக கிடைக்கும். குறிப்பாக வெளிநாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். முன் இருந்ததைப் போல் பத்து சதவீதம் கூடுதலாக டெண்டர் தொகை கேட்கப்பட்டாலும் பொதுத்துறை நிறுவனமான வெல் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பெல் நிறுவனத்தின் தற்போதைய தொய்வையும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடையும் நிலையையும் மீட்க முடியும் என்கின்றனர் இதனைச் சார்ந்தவர்கள்.
லாப நோக்கின்றி இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் சரிவர கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், அதை சார்ந்து இயங்கக்கூடிய சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு முறையாக ஆர்டர்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுமே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
- பிருந்தா, ச.முத்துகிருஷ்ணன்