சிறப்புக் களம்

“சாதிவாரி கணக்கெடுப்புக்காக ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்” - நெருக்கடியில் மத்திய அரசு

“சாதிவாரி கணக்கெடுப்புக்காக ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்” - நெருக்கடியில் மத்திய அரசு

Veeramani

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து  “சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்”  என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதால், மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் - ஓரணியில் நிற்கும் எதிர்க்கட்சிகள்:

தமிழ்நாடு சட்டசபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து பேணிக்காக்க அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று பல கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தன. இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் கணக்கெடுப்பைத் தவிர, இதர சாதி கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது” என தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், பீகாரைச் சேர்ந்த 11 அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமர் மோடியைச் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இந்த சந்திப்பில் பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிக்கட்டுப்படையும் மீறி பீகாரை சேர்ந்த சில பாஜக அமைச்சர்களும் நிதிஷ் குமாரின் கோரிக்கைக்கு ஆதரவை தெரிவித்தனர். நிதீஷ்குமாரின் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு முன்னெடுப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சியும் ஆதரவு தெரிவித்தன. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகிறார்.

தொடக்கம் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மவுனம் காத்துவந்த காங்கிரஸும் இந்த மழைக்காலக்கூட்டத்தொடரில் இக்கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுத்தது. மேலும் வீரப்ப மொய்லி தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவகாரங்களை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்தார். அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவளிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அரசாங்கமே சாதிவாரியான கணக்கெடுப்பினை நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்கவேண்டும் என்ற குரல் இந்திய அளவில் மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் வலுத்து வருகிறது. தமிழகத்திலும் திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் இந்த கோரிக்கைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவும், எதிர்ப்பும் ஏன்?

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அந்தந்த சமூகங்களின் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ற சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படும் வாய்ப்பு உருவாகும். இதன் காரணமாக காலம் காலமாக சாதிய அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகங்களுக்கு, அதன் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது இட ஒதுக்கீட்டு முறையில் நடக்கும் பல தவறுகளும், சுரண்டல்களும் தடுக்கப்படும் என்று சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக உள்ள தரப்பு குரல் எழுப்புகிறது.

சாதிவாரியான கணக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் சாதிரீதியான கட்டமைப்பு மேலும் கூர்மைபெறும் வாய்ப்பு உருவாகும். சாதிவாரி கணக்கெடுப்பை கையில் வைத்துக்கொண்டு அரசியல் ரீதியான பேரம் பேசும் வாய்ப்புகளும் ஏற்படும். இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமற்றது என்று இதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கின்றன.

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாமா?

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாத பட்சத்தில், மாநில அரசே இதனை நடத்தும் சட்ட உரிமை உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இந்த பணியையும் சேர்த்து செய்வது மிக எளிதானது. ஆனால், மாநில அரசு தனியாக சாதிவாரியான கணக்கெடுப்பை செய்வது மிகப்பெரிய பணியாகும். இதற்கு பின்னால் பல சவால்களும் உள்ளன என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   

இட ஒதுக்கீடு என்பது என்ன? – தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு எவ்வளவு?

எதன் பெயரை சொல்லி மக்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டதோ அதன் பெயரிலேயே அந்த மக்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்பும் வழங்குவதே சமூக நீதி. இந்தியாவில் சாதியின் பெயராலேயே இவை பறிக்கப்பட்டன. அதனால்தான் இங்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விகிதாச்சாரங்களில் இட ஒதுக்கீட்டினை வழங்குகின்றன.  இவை பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள இடங்களில் 31 சதவீத இடங்கள் பொது பட்டியலில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத உள் ஒதுக்கீடு போக, 26.5 சதவீத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கிடைக்கிறது. அதுபோல மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது, இதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் , சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கான 19 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு போக 15 சதவீத இட ஒதுக்கீடு பட்டியலின மக்களுக்கு கிடைக்கிறது. தமிழகத்தில் மொத்த இட ஒதுக்கீடு 69 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும் பேராசிரியர் ராமு.மணிவண்ணன், “ தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையில் நமக்கு சரியான அளவில் ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் பல்வேறு சாதியினருக்கும் உள்ளது. இந்த ஆதங்கம் பெரும்பான்மை சாதிகளுக்கும் உள்ளது. சிறுபான்மை சாதிகளுக்கும் உள்ளது. இதனை நிவர்த்தி செய்யவேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்தான். இது ஒரு அரசியல் மற்றும் அதிகார பரிசோதனைதான். இடஒதுக்கீடு சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? சேரவேண்டியவர்களுக்கு சரியாக போய் சேருகிறதா? என்று பார்க்கவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு தங்களுக்கு வேண்டும் என்று பெரும்பாலும் ஓபிசி வகுப்பினரே கேட்கின்றனர். ஏனென்றால் பிசி, எம்பிசி வகுப்பில் இருந்தும் தங்களுக்கு முழுமையான பயன் கிடைக்கவில்லை என்று அதிலுள்ள பல சாதிகள் கருதுகின்றன.

இடஒதுக்கீட்டிலும் பல ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்பது மறுக்கமுடியாது. குறிப்பாக பட்டியலினத்தில் இதுவரை இடஒதுக்கீட்டின் எந்த பயனையும் அனுபவிக்காத உட்பிரிவுகள் பல உள்ளன. இதுபோல ஓபிசி உட்பிரிவுகளிலும் பல உள்ளன. இடஒதுக்கீடு என்பது தற்போது இருக்கும் இடத்திலேயே நிற்க முடியாது. இதன் அடுத்த கட்டமாக உட்பிரிவுகளுக்கான ஒதுக்கீடு என்ற கட்டத்தை நோக்கியும் செல்ல வேண்டும். சாதிகளின் உட்பிரிவுகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படுவதுதான் முழுமையான சமூக நீதியாகும்.

மத்திய பாஜக அரசு மத அடிப்படையில் மக்களை ஒன்றிணைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறது. ஒற்றை கலாச்சாரம் கொண்ட இந்துத்துவா அரசியலுக்கு நேர் எதிரானது சாதிவாரி கணக்கெடுப்பு. அதனால்தான் மத்திய அரசு இதனை செய்ய மனமில்லாமல் எதிர்க்கிறது. இப்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் இக்கோரிக்கையை ஆதரித்தாலும் காங்கிரஸ் கட்சியும் கூட இதனை முழுமையாக ஏற்று கொள்ளாது.  தேசிய அளவில் மக்களை ஒருங்கிணைக்கவே பாஜக, காங்கிரஸ் விரும்பும். அதனால் இருகட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்காது. பாஜக முழுக்கவும் சாதியை ஆதரிக்கும் கட்சியாக இருந்தாலும், அந்த சாதிகளை இந்துத்துவா கொள்கைக்காகவே அது பயன்படுத்தும். மற்றபடி ஒரு சாதியில் இருந்து தனித்துவமான குரலோ, தலைவரோ உருவாவதை அக்கட்சி விரும்பாது. தேசிய கட்சிகளைப்போலவே மாநில கட்சிகளுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் சாதிக்கட்சிகளால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உண்மையிலேயே சவாலான விஷயம்தான்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் எல்லா மட்டத்திலும் ஒரு எண்ணிக்கை அடிப்படையில் வாய்ப்புகளை வழங்கும் சூழல் உருவாகும். இது நமது ஜனநாயகத்தை மேலும் ஒரு புதிய தளத்துக்கு கொண்டு செல்லும். தற்போது ஒவ்வொரு தொகுதி வாரியாக யூகங்களின் அடிப்படையில் சாதிக்கணக்குகள் உள்ளன. அதனை துல்லியமாக எடுக்கும்போது இது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தும். ஆங்கிலேயர் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சிகள் தொடங்கப்பட்டு பிறகு கைவிடப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்தும்போது, சாதியை உறுதி செய்வதற்கான சான்றுகள் குறித்த பல்வேறு குழப்பங்களும், சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எவ்வளவு தடைகள் இருந்தாலும் சமத்துவத்தை நோக்கிய சமூகநீதிக்கான இடஒதுக்கீடு பயணத்தின் அடுத்தகட்ட நகர்வாக சாதிவாரிக்கணக்கெடுப்பு இருக்கும். தேசிய அளவில் சாதிவாரிக்கணக்கெடுப்பு கோரிக்கைகள் வலுப்பெற்று தீவிரமடைந்துவரும் இந்த சூழலில், இக்கோரிக்கையை நீண்ட காலத்துக்கு மத்திய அரசால் தள்ளிப்போடவும் முடியாது” என்கிறார் அழுத்தமாக.