சிறப்புக் களம்

ஒரே ஒரு சதம் தான்! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சாதனைகளைப் படைத்த விராட் கோலி!

ஒரே ஒரு சதம் தான்! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சாதனைகளைப் படைத்த விராட் கோலி!

webteam

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்றுவரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், 3வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கண்டது. தொடரில் முன்னிலை வகித்தாலும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற 4வது போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது.

நங்கூரமாய் நின்று சதமடித்த விராட் கோலி

அதன்படி, 4வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களையும், இந்திய அணி 571 ரன்களையும் எடுத்தன. இதில் தொடக்க பேட்டராய்க் களமிறங்கிய சுப்மன் கில் 128 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், மறு முனையில் நங்கூரமாய் நின்ற விராட் கோலி, 186 ரன்கள் எடுத்து இந்திய அணி 500 ரன்களுக்கு மேல் தாண்ட வழிவகுத்து கொடுத்தார். மேலும் இந்தப் போட்டியில் சதம் கண்டதன் மூலம் பல சாதனைகளை முறியடித்துள்ளார், கோலி.

விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்த ரிக்கி பாண்டிங்

இந்த தொடரில் விராட் கோலி, ஜொலிக்கவில்லை எனப் பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மட்டும் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இந்த தொடரைப் பொறுத்தவரை அவர், முதல் போட்டியில் 12 ரன்களும், 2வது போட்டியில் 44 மற்றும் 20 ரன்களையும், 3வது போட்டியில் 22 மற்றும் 13 ரன்களையும் எடுத்திருந்தார். 3 போட்டிகளிலும் அவர் ஒரு அரைசதத்தைக்கூட அடிக்கவில்லை. இதனால் அவர்மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. அவருக்குப் பதில் சிறப்பாக விளையாடும் ஜூனியர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் எனக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டுகளிலும் விராட் கோலி மீது விமர்சனம்

ஏற்கெனவே, கடந்த ஆண்டுகளில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் அவர் மீது காட்டமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான், ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்தினார். அதுபோல் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்து புதிய சாதனை படைத்ததுடன், விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதற்குப் பிறகு ஓய்வில் இருந்த விராட் கோலி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். இந்த நிலையில்தான் மீண்டும் அவர்மீது விமர்சனம் தொற்றிக் கொண்டது. இதற்குத்தான் இன்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் சதம் கண்டதன்மூலம் பல்வேறு புதிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

ஒரு சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்த கோலி

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்திருக்கும் விராட் கோலிக்கு, இது டெஸ்ட்டில் 28வது சதமாகும். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75வது சதத்தை விளாசியிருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 16 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கருக்கு (20 சதங்கள்) அடுத்து 2ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி. ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் விராட் கோலி 4வது இடத்தில் உள்ளார்.

விராட் கோலியின் சாதனை பட்டியல்

இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 20 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், இங்கிலாந்துக்கு எதிராக 19 சதங்கள் அடித்த டான் பிராட்மேன் 2வது இடத்திலும், இலங்கைக்கு எதிராக 17 சதங்கள் அடித்து சச்சின் மீண்டும் இந்த பட்டியலில் 3வது இடத்திலும் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக தலா 16 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளார்.

மேலும் சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (42) மற்றும் ரிக்கி பாண்டிங் (36) ஆகிய இருவருக்கு அடுத்து 35 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். தவிர 2022ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (276 ரன்கள்) குவித்த வீரர்கள் பட்டியலிலும், 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் (296 ரன்கள்) குவித்த வீரர்கள் பட்டியலிலும், 2023ஆம் ஆண்டு பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (297) குவித்த வீரர்கள் பட்டியலிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு எதிரான போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (1803 ரன்கள்) குவித்த வீரர்கள் பட்டியலிலும் விராட் கோலியே முதலிடத்தில் உள்ளார்.

இரு வீரர்களை சமன் செய்த விராட் கோலி

மேலும், டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 17வது இடத்தில் இருக்கும் விராட் கோலி, இன்று அடித்திருக்கும் 28வது சதம் மூலம், மைக்கேல் கிளார்க் (ஆஸ்தி), அம்லா (தென்னாப்பிரிக்கா) ஆகிய வீரர்கள் செய்திருந்த சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் விராட் கோலி, 8416 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 28 சதங்களையும், 28 அரைசதங்களையும் எடுத்துள்ளார். 7 முறை இரட்டைச் சதம் அடித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்