சிறப்புக் களம்

கிராமப்புற மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி... சாத்தியப்படுத்திய ஈரோடு ஆசிரியர்!!

கிராமப்புற மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி... சாத்தியப்படுத்திய ஈரோடு ஆசிரியர்!!

webteam

ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், குருமந்தூர் நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், பள்ளிகள் திறக்கும் காலமான ஜூன் முதல் வாரத்திலேயே மாணவர்களுக்காக வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்து பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார். கூடுதலாக தனியாகவே காணொலிகளை உருவாக்கி யூடியூப்பில் பதிவேற்றமும் செய்துள்ளார். முதன்முறையாக ஜூம் மீட்டிங் ஆப்ஸ் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

(ஆன்லைன் பாடம் பற்றி பெற்றோர்களுக்கு அறிமுகம்)

“பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பாடங்களுடன் தொடர்பில்லாமல் இருப்பதால், எப்படியாவது ஒருவகையில் அவர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்த நினைத்தோம். அதற்காக முதலில் வாட்ஸ்ஆப் குரூப் உருவாக்கினேன். அதில் யூடியூப் பாடங்களின் இணைப்புகளை அனுப்பினோம். இப்போது செல்போன் இல்லாத மாணவர்களது குடும்பங்களில் பாடம் படிப்பதற்காகவே செல்போன் வாங்கி பயன்படுத்துகிறார்கள். முதலில் 5,6,7,8 வகுப்புகளுக்குப் பொதுவான வகுத்தல், பெருக்கல், சதுரம், செவ்வகம் என அடிப்படைப் பாடங்களை நடத்தி வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினோம்” என்கிறார் ஆசிரியர் சுரேஷ்.

(ஜூம் ஆன்லைன் வகுப்பு)

ஃபேஸ்புக் மூலம் போட்டிகளை அறிவித்து மாணவர்களின் சிறந்த கையெழுத்துகளுக்கு பரிசுகள் வழங்கிவரும் அவர், முதன்முறையாக கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு ஜூம் செயலி மூலம் ஒரு மணிநேரம் சமூக அறிவியல் பாடம் நடத்தியுள்ளார். அதில் மாணவர்கள் உரையாடுவதற்கும் வாய்ப்புகளை வழங்கினார். முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைத் தாண்டி, அதில் ஆர்வமாகிவிட்ட மாணவர்கள், “எப்ப சார் மீண்டும் ஜூம் மீட்டிங்” என்று கேட்கிறார்களாம்.

(வேப்ப மரநிழலில் மாணவர்களுடன் சந்திப்பு)

"மாணவர்களைச் சந்தித்து வெகுநாளாச்சு என்பதற்காக ஒரு நாள் சென்றேன். ஆசிரியரைப் பார்த்தா ஓடாமல், வாங்க இருக்கீங்களா என நலம் விசாரிப்புகள். ஒரு சுற்று மாணவர்களுடன் சுற்றிவந்து அனைவரையும் ஒன்றுசேர்த்து வேப்பமர நிழலில் அமர்ந்து பேசினேன். ஒருநாள் பள்ளியில் 'எங்கப்பாகிட்ட பட்டன்போன்தான் இருக்குங்க சார்' என்றான் ஒரு மாணவன். அவனை அழைத்து பக்கத்து வீட்டில் இருக்கிற அவன் நண்பனுடன் சேர்ந்து படிக்க ஆலோசனை வழங்கினேன். என்னதான் இருந்ததாலும், இயல்பான வகுப்புபோல ஆன்லைன் வகுப்புகள் வராது" என்ற கருத்தையும் முன்வைக்கிறார் சுரேஷ்.

(மாணவர்களுக்குப் பாட விளக்கம்)

முதலில் 12 மாணவர்கள் மட்டுமே வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திருந்தனர். கூடுதலாக ஐந்து பேர் சேர்ந்திருக்கிறார்கள். “ஊரடங்கு காலத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான தொடர்பில்லை. கல்வியுடன் உள்ள தொடர்பையும் புதுப்பிப்பதற்கு வாட்ஸ்ஆப், யூ டியூப் உதவியாக இருக்கிறது. பிள்ளைகள் படிப்பைப் பற்றி பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். சில மாணவர்கள் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு ஒரு நாள் பள்ளியில் என்னிடம் வந்து காட்டிவிட்டுச் செல்கிறார்கள். இதுவொரு காலமே நமக்குக் கொடுத்த ஒரு மாற்றமாகவே நான் பார்க்கிறேன்” என்கிறார் ஆசிரியர் சுரேஷ்.