இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்றைய தினத்தில்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
நவம்பர் 15,1989 இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைப்பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 41 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 16 வயது இளைஞன் ஒருவன் இந்திய அணிக்காக தனது இன்னிங்ஸை விளையாட களமிறங்குகிறான். இந்த இளைஞன் பின்னாளில் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளை குவிப்பான் என அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் போட்டி 24 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கிறான். அந்த இளைஞன்தான் சச்சின் டெண்டுல்கர்.
இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் சச்சின் பங்காற்றியது வரலாறு. வலது கை ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 18,466 ரன்கள் குவித்தது தனி சாதனை. கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர் சச்சின்தான். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 30,000 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் சச்சினையே சேரும். முதன் முதலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் குவித்ததும் சச்சின் டெண்டுல்கர்தான்.
சச்சின் தான் விளையாடிய காலகட்டத்தில் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தார். சச்சின் அவுட் ஆனால் டிவியை உடைக்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் அவருக்கு உண்டு. சச்சின் இல்லாத இந்திய அணியை அந்த காலக்கட்டத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கடவுளாக சச்சின் பார்க்கப்பட்டார். இந்தியாவை தாண்டி பல நாடுகளில் ரசிகர்கள் பட்டாளம் சச்சினுக்கு உண்டு. பல தலைமுறை ரசிகர்கள் அவருக்கு உண்டு. இது வேற எந்த கிரிக்கெட் வீரருக்கு கிடைக்காத பாக்கியம். 6 முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடியுள்ளார். சச்சினின் உலகக்கோப்பை கனவை தோனி தலைமையிலான இந்திய அணி சச்சினின் சொந்த ஊரான மும்பையில் ஏப்ரல் 2, 2011 ஆம் நாளில் நனவாக்கியது.
இந்திய அரசின் அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ, பத்மவிபூசண் விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் நவம்பர் 13, 2013-ல் ஓய்வு பெற்றார்.