சிறப்புக் களம்

மேடையில் நாங்கள் எம்ஜிஆர்: வேலையின்றி வறுமையில் வாடும் மேடை கலைஞர்கள்

மேடையில் நாங்கள் எம்ஜிஆர்: வேலையின்றி வறுமையில் வாடும் மேடை கலைஞர்கள்

kaleelrahman

தேர்தல் திருவிழா களைகட்டும் நிலையில் எம்ஜிஆராக வலம் வந்து மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் சோகக்கதையை இங்கு பார்க்கலாம்.

தேர்தல் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. பிரச்சாரத்தின் மூலம் மக்களை ஈர்க்க அரசியல் கட்சிகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுமையான பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தாலும் கூட இன்றளவும் எம்ஜிஆர் வேடமணிந்து நடனமாடும் நிகழ்ச்சி பொதுமக்களை ஈர்த்து வருவதில் எந்த சந்தேகமும் இல்லை.

கிராம புறங்களில் எம்ஜிஆர் வேடமிட்டு நடனமாடும் கலைஞர்களை உண்மையான எம்ஜிஆர் என்ற உணர்வோடு கண் இமைக்காமல் ரசிக்கும் கிராம மக்கள் மத்தியில் தாங்களை நிஜ எம்ஜிஆர் என்று நினைத்து கெத்தாக வலம் வருவதாககூறுகின்றனர் எம்ஜிஆர் கலைஞர்கள். சிறு வயது முதல் எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்து வரும் தாங்கள் அவரது கொள்கை, நடிப்பின் மீதான ஈர்ப்பு காரணமாகவே அவரை போன்று வேடமணிந்து நடித்து வருகிறோம். அவர் மீது கொண்ட தீரா பற்றினால் ஒருபோதும் எம்ஜிஆரை தவிர வேறு நடிகர்களின் வேடமணிந்தது இல்லை எனவும் கூறுகின்றனர்.

எம்ஜிஆர் வேடமணிந்து எம்ஜிஆரின் ரசிகர்களை மட்டுமல்லாமல் மக்களையும் உற்சாகபடுத்தி வந்தாலும் தங்களின் வாழ்க்கையில் உற்சாகம் இல்லை என வேதனையோடு கூறுகின்றனர். கடந்த ஒரு வருட காலமாக கொரோனோ பாதிப்பிற்கு பிறகு வரும் இந்த தேர்தல் சற்று ஆறுதலை கொடுத்தாலும், வேலை வாய்ப்பு என்பது மிக மிக குறைவு என வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு பிரச்சாரத்திற்கான நாட்கள் குறைவு, வேட்பாளர்களின் செலவீனம் போன்ற பல்வேறு காரணங்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள கலைஞர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோருக்கே வேலை கிடைத்துள்ளது. தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்த பெரும்பாலான கலைஞர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எம்ஜிஆர் நடனத்தை மட்டுமே நம்பியுள்ள தங்களுக்கு இந்த தேர்தல் முழுமையாக கை கொடுக்க வில்லை என்பது இவர்களது வேதனையாக உள்ளது.

கலை தொழிலை மட்டுமே நம்பியுள்ள தங்களுக்கு வேறு வேலைக்கு சென்றாலும் தங்களை யாரும் ஏற்று கொள்வதில்லை. முழுமையாக வேலை கிடைக்காததால் தங்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்து வருவதாகவும் கண்ணீர் மல்க கவலை தெரிவிக்கின்றனர். மேடையில் எம்ஜிஆராக வலம் வந்து மக்களை உற்சாகப்படுத்தும் இவர்களது வாழ்வு நிஜத்தில் சோகத்தை மட்டுமே எதிர்கொள்ளும் நிலை மாறுமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

-  கணேஷ்குமார்