சிறப்புக் களம்

ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை

ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை

jagadeesh

நாம் வாழும் இவ்வுலகில்தான் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் மிகப் பழமையான ஓர் உயிரினம்தான் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள். அதுவும் ஒவ்வொரு ஆண்டும் நம் அருகே இருக்கும் கடற்கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிட்டு செல்கிறது. இவற்றை பாதுகாத்து சேகரிக்கும் பணியில் வனத் துறையும், சில தன்னார்வலர்களும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு உள்ளிட்ட இடங்களில் வனத் துறை சார்பில் ஆமைக் குஞ்சு பொறிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடலோரங்களில் இருந்து சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் இங்கு பாதுகாக்கப்படும். அவை இயற்கையான முறையில் 45 நாள்களுக்கு பிறகு முட்டையில் இருந்து வெளியேறும். பொதுவாக, காலை அல்லது மாலை நேரங்களிலேயே முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியேறும்.

அப்போது அவை சேகரிக்கப்பட்டு கடலுக்குள் விடப்படும். இந்த முட்டைகளைச் சேகரிக்கும் பணி இரவு 11 மணியளவில் தொடங்கி, அதிகாலை 5 மணி வரை நடைபெறும். கடற்கரை மணல் பரப்பில் குழிதோண்டி இடப்படும் முட்டைகள் சுமார் 45 நாள்களுக்குப் பிறகு இயற்கையாகப் பொறிந்து குஞ்சுகள் வெளியேறி கடலுக்குள் சென்றுவிடும். இந்த ஆண்டு மட்டும் சென்னை கடற்கரைகளில் மொத்தம் 304 கூடுகளில் இருந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வரை 33,017 ஆலிவ் ரிட்லி முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட அதிகம் என வனத்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. அதாவது 2019 - 2020 மார்ச் மாதம் முடிய 301 கூடுகளில் இருந்து 32,244 முட்டைகள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூக விரோதிகளாலும் முட்டைகள் சேதமாக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு, வனத் துறை முட்டைகளைப் பாதுகாத்து குஞ்சுகளைப் பொறிக்கச் செய்கிறது. இதனால், கடல் ஆமை இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஆமைகள் நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 குஞ்சுகளைப் பொறிக்கும். இங்கு சேகரிக்கப்படும் முட்டைகளில் இருந்து 95 சதவீத குஞ்சுகள் பாதுகாப்பாக பொறிக்கப்படுகின்றன.

ஆலிவ் ரிட்லி - ஒரு பார்வை

கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே இப்போது அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றன. அதில் இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 120 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ, அங்கேதான் முட்டைகளை இடும். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் மற்றும் ஓடிசா மாநிலக் கரையோரங்களில் அதிகளவில் முட்டையிட்டு வருகின்றன. நமது கடற்கரைகளில் இவை முட்டையிட்டு வருகின்றன. ஆலிவ் ரிட்லி ஆமைகள் மீனவர்களின் நண்பனாகப் பார்க்கப்படுகின்றன.

இவை அழிந்தால் நிச்சயம் மீனவர்களுக்கே இழப்புதான். இவைதான் கடலில் இருக்கும் சொறி மீன்களை உண்ணும். எனவே இவை இருந்தால், கடலின் ஆரோக்கியமான சூழல் கெடாமல் இருக்கும். ஆலிவ் ரிட்லி ஆமைகள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில்தான் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். அப்போதுதான் அதிகமாக இவ்வகை ஆமைகள் இறந்து கரை ஒதுங்கும். இதற்கு காரணம் இழுவை மீன்பிடி கப்பல்களின் வலைகளில் இவை சிக்குவதுதான். ஒவ்வொரு ஆமையும் சுமார் 30 நிமிஷங்களுக்கு ஒருமுறை, சுவாசிப்பதற்காக கடலின் மேற்பரப்பிற்கு வரும். அப்படி வந்து சுவாசிக்க முடியாத சமயங்களில்தான் அவை உயிரிழக்கின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.