அதிகாலையில் கண் விழித்தது முதல், இரவு உறங்கும் வரை, சில சமயங்களில் நடுராத்திரியில் கூட 'டிங்.. டிங்..' 'டொய்ங்.., டொய்ங்..' என விதவிதமான குறுஞ்செய்திகளின் சத்தத்தைக் கேட்டு வருகிற நாம், கேட்டும் மறந்து போன சத்தம் என்றால் அது 'க்ளிங்... க்ளிங்' என்ற சத்தம் தான். 'க்ளிங்... க்ளிங்' என்ற சத்தத்தைக் கேட்டதும், அது தபால் காராராகத்தான் இருக்கும் என்று 80's, 90'sகளுக்கு நிச்சயமாகத் தெரியும்.
1990-களில் 30,000க்கும் குறைவான தபால் நிலையங்களே இருந்தாலும், 'க்ளிங்... க்ளிங்' என்ற சைக்கிள் ஓசையும், 'சார் போஸ்ட்' என்ற குரலும், ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கமும் ஒவ்வொருவரின் ஊரிலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் தபால் பெட்டியும், தபால் நிலையமும், தற்போது காணாமலேயே போய்விட்டது என்று சொல்லலாம்.
தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் இந்தியா முழுவதும் 1,59,251 தபால் நிலையங்களும், தமிழ்நாட்டில் 11,865 தபால் நிலையங்களும் இருக்கின்றன.Source: Lok Sabha
தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப கணினிமயமாக்கப்பட்ட தபால் நிலையங்களால், பலருக்கும் ஸ்டாம்ப் ஒட்டும் வாய்ப்பும், சிவப்பு நிற பெட்டிக்குள் கடிதத்தைப் போடும் வாய்ப்பும் இல்லாமலே போய்விட்டது.
இந்தியாவில் உள்ள மொத்த தபால் நிலையங்களில் 17,890 தபால் நிலையங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளன. அடுத்ததாக 13,688 தபால் நிலையங்களை மகாராஷ்டிரா மாநிலம் கொண்டுள்ளது. அதிக தபால் நிலையங்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 11,865 தபால் நிலையங்களுடன் நம் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சமீபத்தில் முகநூலில் படித்தது....
"கடிதம் எழுதுவதிலும் பெறுவதிலும் பொறுமை என்பதைத் தாண்டி, சமீபத்தில் நிறையக் கடிதங்கள் பத்திரமாகச் சென்றடைவதில்லை என்ற காரணத்தினால் எல்லாத்துலயும் ஒன்னு எழுதினேன். ஒன்றாவது பத்திரமாகச் சென்றடையும்"
கடிதம் எழுதுபவர்களுக்கு, அதுவும் கையெழுத்துக் கடிதம் எழுதுபவர்களுக்கு, அதில் எழுதக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் மனதிலிருந்தும், உணர்விலிருந்தும் வெளிப்படும். இதனால்தான் வாசலில் தபால் காரர் வருவது சில நொடிகள் என்றாலும், அவர் கொடுத்துச் சென்ற அந்த கடிதம் பலரின் மனதையும், அன்பையும், எதிர்பார்ப்பையும் எப்போதும் பெறுகிறது.
தபால் நிலையங்களில் கடிதங்களை அனுப்புவதற்கும், கடிதங்களைப் பெறுவதற்கும் சென்ற காலங்கள் மாறி, தற்போது வங்கியைப் போல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள அங்குச் செல்பவர்களே அதிகம். அதன்படி பார்த்தால்,
இந்தியாவில், 7.36 கோடி பேர் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 71 லட்சம் பேர் சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளனர்.Source: Lok Sabha
வங்கிகளைத் தாண்டி, தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகளைத் தொடங்குவதற்கு முக்கிய காரணம், அரசு சார்பாக வழங்கப்படும் உதவித்தொகைகள், இதர சலுகைகளே காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 7,36,93,324 தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் 79,75,174 கணக்குகளை மேற்கு வங்க மாநில மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் கர்நாடக மாநிலத்தில் 77,45,461 சேமிப்பு கணக்குகள் உள்ளன.
தபால் நிலையங்கள் மட்டுமல்ல, சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்களின் பட்டியலிலும் தமிழ்நாடு 3-வது இடத்தையே பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 71,45,629 பேர் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளனர். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடிதம் எழுதி, அதனை போஸ்ட் செய்துவிட்டு மகிழ்ச்சி கொள்கிற பழக்கம் உள்ளவர்கள் பலர் இருந்தாலும், கடிதம் எழுதிவிட்டு அதனைப் பலமுறை படித்தாலும், அனுப்ப நினைக்காதப் பழக்கம் உள்ளவர்களும் இங்கு இருக்கின்றனர்.
உங்களுக்குக் கடிதங்கள் எழுதிய அனுபவம் உண்டா?