சிறப்புக் களம்

கிராமி முதல் ஆஸ்கர் வரை... அவ்வளவு எளிமையானதா வில் ஸ்மித்தின் பயணம்?

கிராமி முதல் ஆஸ்கர் வரை... அவ்வளவு எளிமையானதா வில் ஸ்மித்தின் பயணம்?

webteam

இசையமைப்பாளன் முதல் சிறந்த நடிகன் வரை... கிராமி விருது முதல் ஆஸ்கர் விருது வரை... வில் ஸ்மித் தொட்ட, இதுவரை யாரும் தொட முடியாத சாதனைகள்!

ஹாலிவுட்டின் கவர்ச்சிகரமான, நடிப்பாற்றல் மிக்க ஹீரோ வில்லார்ட் கரோல் ஸ்மித். சுருக்கமான வில் ஸ்மித். நடிப்பில் தன்னிகரற்ற கலைஞனாக விளங்கும் வில் ஸ்மித், தனது வாழ்க்கையை முதலில் துவக்கியது நடிப்பில் அல்ல! இசையில்..! ஆம், வில் ஸ்மித் மிகச் சிறந்த இசையமைப்பாளர். 1970 களில் அமெரிக்காவில் ஹிப் ஹாப் இசையை வாசித்து புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். தன் பள்ளித் தோழர்களுடன் இணைந்து டீஜே ஒன்றை உருவாக்கி ஆல்பம் வெளியிடத் துவங்கினார். “கேர்ல்ஸ் ஐன்ட் நத்திங் பட் ட்ரபிள்” என்ற முதல் ஆல்பத்தை வெளியிடும் போது ஸ்மித்திற்கு வயது 18. அடுத்த ஆல்பம் “பேரண்ட்ஸ் ஜஸ்ட் டோண்ட் அண்டர்ஸ்டாண்ட்” சிறந்த ராப் பாடலுக்கான மிக உயரிய இசை விருதான “கிராமி” விருதை வென்றது. அந்த கிராமி விருதை கையில் ஏந்தும்போது ஸ்மித்திற்கு வெறும் 20 வயதுதான்.

ஸ்மித்தின் பாடல் வரிகள், செறிந்த கருத்துக்கள் நிரம்பிய ஆல்பங்கள் அவரை தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கவனத்தை பெறச் செய்தது. பலர் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்த எண்ணி அணுகினர். 1990 ஆம் ஆண்டு "தி ஃப்ரெஷ் பிரின்ஸ் ஆஃப் பெல்-ஏர்" என்ற தொலைக்காட்சித் தொடரில் முதன்முதலாக நடித்தார் ஸ்மித். பெருவெற்றி பெற்ற அந்த சீரிஸ் 6 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி, ஸ்மித்திற்கு பல தரப்பிலும் பாராட்டை அள்ளித் தந்தது. ஆஸ்காருக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான விருது என்றால் அது கோல்டன் குளோப் விருதுகள் தான். தன் முதல் சீரிஸிலேயே கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அவ்வளவு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஸ்மித்!

அடுத்ததாக ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ஸ்மித் Bad Boys படத்தில் நடித்தார், விமர்சன ரீதியாக பெரும் கவனத்தை இந்த படம் பெறவில்லை என்றாலும் வசூலில் சரித்திர சாதனையை படைத்தது. 100 மில்லியன் டாலர் வசூலைக் குவித்து ஸ்மித்தின் தகுதியை கோபுர உச்சிக்கு கூட்டிச் சென்றது. ஸ்மித் வாழ்க்கையில் திருப்புமனை என்றால் அது “மென் இன் பிளாக்” தான். காமெடி கலந்த த்ரில்லராக வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அடுத்து “எனிமி ஆஃப் தி ஸ்டேட்” படத்தில் நடித்தார். நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமான இதில் தன் பன்முக நடிப்புத் திறன்களை காட்டி “அட” சொல்ல வைத்தார் ஸ்மித். 2001இல் முகமது அலி வாழ்க்கை வரலாற்று படமான “அலி” படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் ஸ்மித். இவரது அசாத்திய நடிப்பால் தனது 3வது படத்திலேயே ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் அந்த முறை விருது கைகூடவில்லை.

அடுத்ததாக அவர் நடித்த “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்” பலரது பாராட்டுகளை அவருக்கு அள்ளிக் குவித்தது. தாயில்லாத குழந்தையை தனியாளாக வளர்க்கும் தந்தையாக வாழ்ந்திருந்தார் ஸ்மித். 2வது முறையாக ஆஸ்கர் கதவை தட்டும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருந்தார். ஆனால் இம்முறையும் விருது கிடைக்கவில்லை. ஸ்மித் நடிப்பில் இதுவரை காட்டாத “குற்ற உணர்ச்சி”யை கொட்டித் தீர்க்க எடுக்கப்பட்ட படம் “செவன் பவுண்ட்ஸ்”. கார் விபத்தில் 7 பேரை ஸ்மித் கொன்று விட , அந்த குற்ற உணர்ச்சியில் அவர்களது குடும்பத்தினருக்கு ஸ்மித் செய்யும் உதவிகள் தான் கதை. சப்பென்று இருக்கும் இந்த ஒன்லைன் கதையை தன் நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பார் ஸ்மித். அழும் காட்சிகளில் கண்களில் இருந்து குடம் குடமாக கண்ணீர் சிந்த மாட்டார். ஆனால் சோகத்தை சட்டென நம்மிடம் கடத்தும் நேர்த்திமிக்க நடிப்பு இந்த படத்தில் வெளிப்பட்டிருக்கும். இதுவரை இந்த படத்தை பார்க்காதவர்கள் கட்டாயம் பார்க்கவும்! மிஸ் செய்ய வேண்டாம்!

அடுத்தடுத்து கொலையாளியாக, விஞ்ஞானியாக, உளவாளியாக என பல கதாபாத்திரங்கள் ஸ்மித்தை தேடி வந்தது. புகழ்பெற்ற அலாதீன் படத்தில் ஜீனியாக நடித்திருப்பார் ஸ்மித். கதாநாயகன் முகம் உங்களுக்கு நினைவிருக்குமோ என்னவோ, ஸ்மித் ஜீனியாக பேசிய வசனம் கூட நினைவில் நிற்கும். அலாதீன் கதையை ஜீனி கதாபாத்திரம் ஆக்கிரமிக்குமா என்ன என்ற கேள்விக்கு ஆம் என்று அழுத்தமாக பதில் சொல்லியிருப்பார் ஸ்மித்.

அடுத்து மீண்டும் தந்தை வேடம் ஏற்றார் ஸ்மித். டென்னிஸ் நட்சத்திரங்களான செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தையின் வாழ்க்கை வரலாறு படமான கிங் ரிச்சர்ட்டில் நடித்தார். அபாரமான நடிப்பால் மீண்டும் 3வது முறையாக ஆஸ்கர் கதவை தட்டினார். இம்முறை ஆஸ்கர் அவர் நடிப்புக்கு மனமிறங்கி கதவை திறந்தது. அவரது நடிப்பிற்கு தான் தகுதியானவன் தான் என்று ஆஸ்கர் தன் நெஞ்சை நிமிர்த்தி அவர் கரங்களில் தஞ்சம் புகுந்துவிட்டது.

தன் காதலி ஜடா பிங்கெட் மீது பெருங்காதலை கொண்டவர் ஸ்மித். தன் மனைவியை கேலி செய்ததற்காக ஆஸ்கர் மேடையில் ஏறி தொகுப்பாளர் கன்னத்தில் பளார் விட்டாரே! இதை வைத்து அவர் பெருங்காதல் கொண்டவர் என சொல்லவில்லை. இன்னொரு சம்பவம் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்தது. பலரது வாழ்க்கையில் எதிர்கொள்ள அஞ்சி ஓடும் விஷயம் அது. தன் மனைவியுடன் ஒரு நேர்காணலில் தோன்றியிருப்பார் ஸ்மித்.

அந்த நேர்காணலில் ஜடா பிங்கெட் தான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகச் சொல்லுவார். மிக அமைதியாக முழுமையாக மனைவி பேசுவதைக் கேட்டு உள்ளுக்குள் ஓவென்று கத்தி அழுதுவிட்டு, வெளியில் ஒரு புன்சிரிப்பை உதிர்ப்பார் ஸ்மித். உலகில் பலர் உதிர்க்க முடியாத சிரிப்பு அது. அழுகையை, கோபத்தை எதிர்பார்த்த மனைவி, இந்த சிரிப்பால் நிலைகுலைந்து போவார். நேர்காணல் முடிந்ததும் சண்டை போட்டிருப்பார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் மறுநாள் இருவரும் ஊர்சுற்ற கிளம்பிவிட்டனர். ஜடாவை அந்த அளவிற்கு காதலிக்கிறார் ஸ்மித். அந்த காதல் தான் ஆஸ்கர் மேடையில் கன்னத்தில் அறையவும் வைத்திருக்கிறது. சிறந்த கதாபாத்திர மெட்டீரியல் மட்டுமல்ல அவர்! கணவர் மெட்டீரியலும் கூட!

வாழ்த்துகள் ஆஸ்கர்! வாழ்த்துகள் ஜடா பிங்கெட்... சரியானவர் கரங்களைப் பிடித்திருக்கிறீர்கள்.

- ச.முத்துகிருஷ்ணன்.