சிறப்புக் களம்

ஆதித்த கரிகாலன் மட்டுமல்ல! தமிழக வரலாற்றையே மாற்றி எழுதிய அதிராஜேந்திர சோழனின் மர்ம மரணம்!

ஆதித்த கரிகாலன் மட்டுமல்ல! தமிழக வரலாற்றையே மாற்றி எழுதிய அதிராஜேந்திர சோழனின் மர்ம மரணம்!

ச. முத்துகிருஷ்ணன்

தஞ்சையை தலைநகராக கொண்டு தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்த பிற்காலச் சோழப் பேரரசு கி.பி 850 ஆம் ஆண்டு விஜயாலய சோழனால் நிறுவப்பட்டது. அடுத்து ஆதித்த சோழன், பராந்தக சோழன், அரிஞ்சய சோழன் என பல சோழ மன்னர்களால் வழிவழியாக ஆளப்பட்ட சோழப்பேரரசு, சுந்தரச் சோழர் காலத்தில் ஒரு மிகப் பெரிய சிக்கலை சந்தித்தது.

அடுத்து அரசனாக பொறுப்பேற்பதற்காக இளவரசனாக முடிசூடப்பட்டிருந்த ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது சோழப் பேரரசையே உலுக்கிப் போட்டது. அடுத்து அரசன் பொறுப்பேற்பதில் கடும் சிக்கல் எழுந்த நிலையில், பின்னர் அது காலப்போக்கில் சரியாகி ராஜராஜன், ராஜேந்திரன் காலத்தில் தனது பொற்காலத்தை நோக்கி சோழப்பேரரசு வீறுநடை போட்டது.

இந்நிலையில், கி.பி 1070 ஆம் ஆண்டு வீரராஜேந்திர சோழனுக்குபின் அரசனாக பொறுப்பேற்ற அதிராஜேந்திர சோழன் பதவியேற்ற ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் சோழப் பேரரசு நேரடி ஆண் வாரிசுகளற்ற பேரரசாக மாறியது. அரசன் அதிராஜேந்திர சோழன் எவ்வாறு உயிரிழந்தான்? வரலாற்று ஆசிரியர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மைகள் என்னென்ன? அடுத்த சோழ அரசனாக பதவியேற்றது யார்? என்பது உள்ளிட்ட பல வரலாற்று உண்மைகளை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

உள்நாட்டு கலகத்தால் நேரிட்ட கொலை?

மேலைச் சாளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாத்தன் வரலாறை எழுதிய வடமொழிப் புலவர் பில்ஹணர், சோழ மன்னன் அதிராஜேந்திரனின் மரணம் உள்நாட்டு கலகத்தால் நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். “சோணாட்டில் நிகழ்ந்த உண்ணாட்டு கலகத்தில் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான்” என்று தனது பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ள அவர் அதிராசேந்திரனின் முடிசூட்டு விழா நிகழ்ந்த முயன்றபோது சோழ நாட்டில் எழுந்த பல உள்நாட்டு கலகங்களை அவரது மைத்துனர் ஆறாம் விக்கிரமாதித்தன் தன் ஆற்றலால் நீக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் தொன்ம வரலாற்றை பதிவு செய்தவர்களில் முக்கியமானவராக கருதப்படும் கே.கே.பிள்ளை தனது “தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்” நூலில் அரிராசேந்திரன் மரணத்தை கொலை என்றே பதிவு செய்திருக்கிறார். (ஆதாரம் கீழே)

ஆனால் தமிழில் அதிராசேந்திரனுக்கு எதிராக உள்நாட்டு கலகங்கள் நிகழ்ந்ததற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. வீரராஜேந்திரன் காலத்திலேயே அதிராஜேந்திர சோழனுக்கு கி.பி 1067 ஆம் ஆண்டு இளவரசப் பட்டம் சூட்டப்பட்டு தொண்டை மண்டலத்தையும், பாண்டிய மண்டலத்தையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. “வீரமுந் தியாகமும் ஆரமென புனைந்து மாபுகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ அதிராசேந்திர தேவர்”, “திருமடந்தையும் சயமடந்தையும் திருப்புயங்களில் இனிதிருப்ப” என அவரை பெரிதும் போற்றி எழுதப்பட்ட மெய்கீர்த்திகளே கிடைத்து இருப்பதால், உள்நாட்டு கலகத்தால் அதிராஜேந்திரன் கொலை செய்யப்பட்டதை பல வரலாற்று ஆசிரியர்கள் நிராகரிக்கின்றனர்.

நோய் வந்து உயிரை காவு வாங்கியதா?

தஞ்சை மாவட்டத்தில் கூகூரில் காணப்படும் கல்வெட்டில் அதிராஜேந்திரன் நோய்வாய்ப்பட்டு துன்புற்றதாகவும் அவர் உடல் நலம் பொருட்டு அந்த ஊரில் உள்ள கோவிலில் இறைவன் திருமுன்னர் நாள்தோறும் தேவாரப் பதிகங்கள் இருமுறை ஓதப்பெற்று வந்ததாகவும் தகவல் இடம்பெற்றுள்ளது. வைணவ நூலொன்றும் இத்தகவலை குறிப்பிடும் நிலையில், பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் அதிராசேந்திரன் நோய்வாய்ப் பட்டு தான் உயிரிழந்து இருப்பான் என்பதை ஏற்றுக்கொண்டு வழிமொழிகின்றனர்.

(ஆதாரம் - பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார்)

சைவ - வைணவ மோதல் காரணமா?

அதிராசேந்திரன் வாழ்ந்த அந்த கால கட்டத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் மோதல் நிலவி வந்தது. அதிராஜேந்திரன் பதவியேற்ற போது வைணவர்கள் தொல்லைக்கு ஆளானதாகவும் அதன் காரணமாக உள்நாட்டில் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிடும் சில வரலாற்று அறிஞர்கள் அந்தக் கலகங்கள்தான் அரசனின் கொலைக்கு காரணமாக ஆகியிருக்கும் என அனுமானிக்கின்றனர். ஆனால் இந்தக் கருத்தை தென் ஆற்காடு பகுதியில் திருவக்கரை சந்திரமௌலி சுவரர் சிவாலயத்திற்குள் இருந்த வரதராசப் பெருமாள் கோவில் அதிராசேந்திரன் காலத்தில் கருங்கற் கோவிலாக கட்டப்பட்டதை சுட்டிக் காட்டி பல வரலாற்று ஆய்வாளர்கள் அரசனின் கொலைக்கு வைணவ- சைவ மோதல் காரணமல்ல என தெரிவிக்கின்றனர்.

ஆண் வாரிசுகளற்ற அவல நிலைக்கு தள்ளப்பட்ட சோழப் பேரரசு:

அதிராசேந்திரன் இறந்த வேளையில் அவனுக்கு உடன்பிறந்த சகோதரர்களோ அல்லது மகன்களோ இல்லாமல் போனதால், சோழப் பேரரசு நேரடி ஆண் வாரிசுகளற்ற பேரரசாக மாறியது. இந்த திடீர் சிக்கல் விஜயாலய சோழனால் நிறுவப்பட்ட சோழ அரசின் மரபில் பெரும் மாற்றத்தை நிகழ வைத்தது.

உருவானது சாளுக்கிய - சோழ மரபிலான பேரரசு:

சோழப் பேரரசின் அடுத்த அரசனாக முதலாம் ராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் கீழைச் சாளுக்கிய அரசன் ராஜராஜ நரேந்திரனுக்கும் பிறந்த இளவரசனாக அநபாயச் சாளுக்கியன் பொறுப்பேற்றார். இவரது தந்தையான ராஜராஜ நரேந்திரன் ராஜராஜ சோழனின் மகளான குந்தவைக்கும் கீழை சாளுக்கிய அரசன் விமலாதித்தனுக்கும் பிறந்தவர். இவ்வாறு தாய்- தந்தை இருவர் வழியிலும் சோழக் குருதி ஓடிய இந்த இந்த சாளுக்கிய வழித்தோன்றல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சோழப் பேரரசை திறம்பட ஆட்சி செய்தான். நிலவரி தவிர்த்த ஏனைய வரிகளை நீக்கி மக்கள் துயர் துடைத்த சுங்கம் தவிர்த்த சோழனாக வரலாற்றில் கொண்டாப்படும் முதலாம் குலோத்துங்கச் சோழன் வேறு யாருமல்ல. இந்த அநாபயச் சாளுக்கியன்தான்..!