சிறப்புக் களம்

"பரபரப்பு இல்லாம, ஃப்ரீயா இருக்கோம்!" - சிவகாசி பட்டாசு கடைகள்... ஒரு ஸ்பாட் விசிட்

"பரபரப்பு இல்லாம, ஃப்ரீயா இருக்கோம்!" - சிவகாசி பட்டாசு கடைகள்... ஒரு ஸ்பாட் விசிட்

kaleelrahman

"கொரோனா பொது முடக்கத்தால் பட்டாசு தொழிலில் தயாரிப்பும் விற்பனையும் வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக வரக்கூடிய வாடிக்கையாளர்கள் வரவில்லை. அப்படியே வந்தாலும் ரூ1 லட்சத்துக்கு பட்டாசு வாங்குபவர்கள், ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்துக்கு மட்டுமே வாங்குகிறார்கள். இதனால் வியாபாரம் குறைந்துள்ளது. அதேபோல, பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்ததால் தயாரிப்புத் தொழிலும் பதிப்படைந்துள்ளது" என்று சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். 

இந்த ஆண்டு பட்டாசுத் தயாரிப்பு, விற்பனை நிலவரம் குறித்த கள நிலவரம் அறிய சிவகாசிக்குச் சென்றோம். பட்டாசு விற்பனையாளரிடம் பேசினோம்.

"இந்த வருஷம் வியாபாரம் சுமார்தாங்க" என்று உற்சாகமின்றி பேச ஆரம்பித்த மகேஸ்வரன், "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் பார்த்தீங்கன்னா, தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே ரொம்ப பரபரப்பா இருக்கும். ஊருக்குள்ள வரமுடியாது; போகமுடியாது... ரொம்ப டிராஃபிக்கா இருக்கும். வெளி மாநிலத்துல இருந்தும், வெளி மாவட்டத்துல இருந்தும் நெறையபேர் கூட்டம் கூட்டமா வந்து பட்டாசு வாங்கிட்டு போவாங்க.

 ஆனா, இப்ப பார்த்தீங்களா..? தீபாவளிக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. எவ்வளவு ஃப்ரீயா உட்கார்ந்து இருக்கோம். இதுக்கு இடையில கொரோனா பிரச்னை; அப்புறம், பசுமைத் தீர்ப்பாய அறிவிப்பு... இதனால பட்டாசு வியாபாரம் சொல்லக்கூடிய அளவுக்கு இல்லை.

 ரெகுலரா நம்மகிட்ட ஒரு லட்சம், ஐம்பதாயிரத்துக்கு பட்டாசு வாங்குனவுங்க, இப்போ, சரி... 'தீபாவளியைக் கொண்டாடணுமே; பசங்க ஏமாந்துருவாங்களே'-ன்னு இருபதாயிரம் முப்பதாயிரத்துக்குதான் வாங்கிட்டுப் போறாங்க. இப்ப பெரிய கம்பெனிகள்ல மட்டும்தான் பட்டாசு இருப்பு இருக்கு. ஆனா, சின்ன கம்பெனிகள்ல சரக்கு இல்ல. அடுத்த ரெண்டு நாளுக்கு கொஞ்சம் வியாபாரம் அதிகமாக இருக்கும்னு நினைக்கிறோம். இந்தப் பட்டாசுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தமிழக மக்களை நம்பியே இருக்கிறது" என்றார்.

ஆம், அவர் சொன்னது முழுக்க முழுக்க நிஜம்தான். சிவகாசியில் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. இதில் ஒருசில கடைகளை தவிர மற்ற கடைகள் எல்லாம் காற்றுவாங்கிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்தோம். இன்னொரு பட்டாசு வியாபாரி ஸ்ரீராமும் நம்மிடம் விரக்தியுடன் பேசினார்.

 "போன வருஷம் அளவுக்கு, இந்த வருஷம் பிசினஸ் ஒண்ணும் செட்டாகலை. கொரேனாவால இந்த வருஷம் பட்டாசு தயாரிப்பும் ரொம்ப கம்மியாதான் பண்ணியிருக்காங்க. கொரோனா பொதுமுடக்கத்தால் மக்கள் கையிலயும் காசு இல்லை. பட்டாசு வாங்கலாமா, வேணாமான்-னு யோசிக்கிறாங்க. பட்டுன்னு வந்து வாங்க மாட்டேங்கிறாங்க. வர்ற கஸ்டமரும் எப்பயும் வாங்குறதவிட குறைவாதான் வாங்குறாங்க.

அதேபோல, தமிழகத்துல ரெண்டு மணிநேரம்தான் பட்டாசு வெடிக்கணும்னு சொல்லியிருக்காங்க. காலைலயும் சாயங்காலத்துலேயும் வெடிக்கிற வெடி என்றெல்லாம் இல்லை... மதிய வேளையிலும் வெடிக்கக் கூடிய லட்சுமி வெடி, சரஸ்வதி வெடி, குருவி வெடி, அணுகுண்டு வெடி... இதையெல்லாம் எப்ப வெடிக்கிறதுன்னு தெரியலை. அதனலேயும் வியாபாரம் கொறஞ்சுருச்சு. ஒடிசா, ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலத்துல பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதுச்சிருக்காங்க. அதனாலேயும் விற்பனை கொறஞ்சிருக்கு. மொத்தத்துல தீபாவளி வியாபாரம் மாதிரியே இல்லை. தொழில் ரொம்ப படுத்துருச்சு" என்றார் சோகத்துடன்.

'மகிழ்ச்சியைக் கொண்டாட வெடிக்கப்படும் பட்டாசுகளால் நோயும் உயிரிழப்பும் ஏற்படக்கூடாது. வேலை, பொருளாதார இழப்பெல்லாம் வந்தாலும், அவற்றைக் கருத்தில்கொள்ள முடியாது. மாறாக, மக்களுடைய உடல்நலமும், சுற்றுச்சூழலும் மிகவும் முக்கியம். அனைவரும் சுத்தமான காற்றை சுவாசிக்க உரிமை உண்டு என பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கொரோனா நோய் பரவலை காரணம் காட்டி ஒடிசா, கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடையும், பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பட்டாசு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பட்டாசுக்கான தடையை நீக்க வேண்டும் என்று  ஒடிசா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், பல்வேறு தடைகள் - பொருளாதார மந்தப்போக்குகள் முதலான பின்னடைவுகள் நீடிக்கிறது. இதுபோதாதென இயற்கையும் பாதகமான நிலையை ஏற்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பட்டாசு விற்பனைக்கு மென்மேலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று விற்பனையாளர்கள் அஞ்சுகின்றனர்.