சிறப்புக் களம்

மாற்றி மாற்றி பேசுகிறாரா ஓபிஎஸ்? - வாக்குமூலம் சொல்லும் செய்தியென்ன? - விரிவான அலசல்

மாற்றி மாற்றி பேசுகிறாரா ஓபிஎஸ்? - வாக்குமூலம் சொல்லும் செய்தியென்ன? - விரிவான அலசல்

Veeramani

ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துகள் தற்போது தமிழக அரசியலில் அனலை கிளப்பியுள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களை பார்ப்போம்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் 2வது நாளாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 நாட்களில் 9 மணி நேரம் விசாரணை  நடைபெற்றது. இதில் ஆணையம் தரப்பில் 120 கேள்விகளும், சசிகலா தரப்பில் 34 கேள்விகளும், அப்போலோ தரப்பில் 11 கேள்விகளும் அவரிடம் கேட்கப்பட்டன.



இந்த விசாரணையின்போது, ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை எனவும், ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்கவேண்டும் என்று கேட்டதாகவும், ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும். சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துகள் தற்போது தமிழக அரசியலில் அனலை கிளப்பியுள்ளது.

ஓபிஎஸ் முழுமையாக மாற்றி பேசுகிறார்:

இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எக்மோ சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளுக்கும் அப்போது மூத்த அமைச்சராக இருந்த ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரிடம் ஆலோசித்து, கையெழுத்து வாங்கியே 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை வழங்கியுள்ளதற்கான ஆவணங்கள் உள்ளது. பொதுவாக ஒரு மரணம் ஏற்பட்டால் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு வைப்பார்கள், அது வேறு விஷயம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கத்தில் அரசியல் காரணங்களை முன்வைத்தே குற்றம்சாட்டினார். 2011ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டபோது எப்போதும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று சசிகலா தரப்பில் கடிதம் வழங்கப்பட்டதாக ஓபிஎஸ் தொடர்ந்து குற்றம் சாட்டினார், இதுதான் அவரின் அப்போதைய நிலைப்பாடு.

ஆர்.கே.நகரில் முதலில் தேர்தல் நடைபெற்றபோது ஒரு சவப்பெட்டியிலே ஜெயலலிதா போன்ற உருவபொம்மையை செய்துவைத்து ஓபிஎஸ் அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றவாளி என அப்போது ஓபிஎஸ் கூறினார். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் ஓபிஎஸ்ஸைதான் முதலில் விசாரிக்க வேண்டும் என சி.வி.சண்முகம் கூறினார். இது எல்லாம் முதல்கட்டமாக நடந்தது.

ஆனால், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு மூன்று மாதங்கள் முதல்வராக இருந்தபோது ஒரு இடத்திலும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓபிஎஸ் கூறவில்லை. அவரின் முதல்வர் பதவி பறிபோனபின்பும்கூட பாஜகவின் ஆதரவு கிடைத்த பின்னரே இந்த குற்றச்சாட்டை முன்வைக்க தொடங்கினார். ஆனால், இப்போது ஓபிஎஸ் முழுமையாக மாற்றி பேசுகிறார்” என தெரிவித்தார்.

அரசியலில் இதெல்லாம் சகஜம்:

ஓபிஎஸ்ஸின் தற்போதைய நிலைப்பாடு குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை.கருணா, “கடந்த 50 ஆண்டுகால அரசியலில், அரசியல் நிலைப்பாடுகள் மாறுகிற போது அரசியல் தலைவர்களின் கருத்துகள், எதிரெதிர் கருத்துகள், மிகக்கடுமையான விமர்சனங்கள் இருக்கும். பின்னர் இணைகின்றபோது முன்பேசியதற்கு முற்றிலும் முரண்பட்டு நிற்பதை பல முறை பார்த்திருக்கிறோம். உதாரணமாக, அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மரணத்தின்போதுகூட அவரின் மரணத்துக்கு ஜானகி அம்மையாரே காரணம், அவர்தான் மோரில் விஷம் வைத்து கொன்றுவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி அரசியலில் நிலைப்பாடுகள் மாறும்போது, முன்பு தெரிவித்த கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளை தெரிவிப்பது சகஜமான ஒன்றுதான்.

அரசியலில் ஒரு சகோதர யுத்தத்தை தொடங்கும்போது, கடுமையான விமர்சனத்தை முன்வைப்பார்கள். பின்னர் இணைந்து ஒருவருக்கொருவர் உடன்படும்போது  முன்பு பேசிய கருத்துகளே அடிபடும் வகையில் பேசுவார்கள், அதனைப்போலவே இதுவும். ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் பேசும்போது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்வார். ஆனால், 72 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது என்ன நடந்தது என அவருக்கும் தெரியும்.

பிரபல திரைப்பட நடிகையாக இருந்து பின்னர் பல முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பொதுவெளியில் அவரின் நோயாளி என்ற பிம்பத்தை வெளிக்காட்டக்கூடாது என்ற உணர்வு அவருக்கு இருந்தது என்பதை 34 ஆண்டு காலம் அவருடன் இருந்த சசிகலாவுக்கு நன்கு தெரியும். உற்ற தோழியாக, சகோதரியாக, தாயாக இருந்து என்னை பராமரித்தவர் என ஜெயலலிதாவே சசிகலா குறித்து கூறியுள்ளார். அந்த அடிப்படையில்தான் ஜெயலலிதா சிகிச்சை குறித்து பொதுவெளியில் ரகசியம் காக்கப்பட்டது, இனிவரும் காலகட்டத்தில்  இந்த உண்மைகள் முழுமையாக வெளிவரும்” என தெரிவித்தார்.