சிறப்புக் களம்

நிவர் புயல்: கடலோர மாவட்டங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

நிவர் புயல்: கடலோர மாவட்டங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

kaleelrahman

நிவர் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன் முழு விவரம் இதோ...


திருவாரூர்: நிவர் புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து வருகிறனர். மேலும், பெயர் பலகைகள் மேல் ஓடுகள் போன்றவை அகற்றப்பட்டு வருகிறது. சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் கிளைகளும் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல், தொடுவாய், வாணகிரி மற்றும் தரங்கம்பாடி மீனவர்கள் மூன்றாவது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தொடர்ந்து தங்கள் படகுகளை கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்டா மாவட்டங்கள்: கஜா புயலின்போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்துள்ளது. நிரம்பிவரும் நீர் நிலைகளை கண்காணிப்பதோடு புயல் கரையை கடக்கும்போது ஏற்படக்கூடிய பேரிடர்களை மீட்டெடுக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. டெல்டா பகுதி விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி: புதுச்சேரி கடல் வழக்கத்துக்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அத்துடன் மீன்பிடிக்கச் சென்றவர்கள் எல்லாம் திரும்ப கரைக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர். இதனால் படகுகள், விசைப்படகுகள் அனைத்தும் கரையில் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் இன்று அதிகாலை முதலே புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தயார் நிலையில் மீட்புப் படையினர்: புயலை எதிர்கொள்ள மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், புயல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நீர்நிலைகளை மாவட்டம் நிர்வாகம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறி, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையோ அல்லது அதி கனமழையோ பெய்யும் எனவும், 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

அதேபோல, புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் புயல் கரையை கடக்கும் பகுதிகளில், புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் தமிழக மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மின் மாற்றிகள் மின் கம்பங்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புயல் சின்னம் காரணமாக கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு முதல் கோடியக்கரை வரை உள்ள 64 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. விசைப்படகுகளை ஐந்து, ஐந்து படகுகளாக கட்டி வைக்கவேண்டும் எனவும், நாட்டுப் படகுகளை கடலில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் கவிழ்த்து வைக்க வேண்டும் என்றும், நாட்டுப்படகில் உள்ள இன்ஜின் மற்றும் வலைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனிடையே, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் எங்கு கரையை கடந்தாலும் பெருமழை நமக்கு கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்று இரவு முதல் நாளை இரவு வரை வெளியில் வரமுடியாத சூழ்நிலை இருக்கும். எனவே, அரசின் வேண்டுகோளை ஏற்று முன் எச்சரிக்கையாக பாதுகாப்பாக அரசு அமைத்துள்ள முகாமிற்கு அனைவரும் வந்து விடுங்கள் என கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேண்டுகிறேன் என ஆடியோ வெளியிட்டு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.