சிறப்புக் களம்

எளிய விஷயங்களின் காதலர் நித்யன்... செல்போன் படங்களில் ஒளிரும் இயற்கை

webteam

வேலூர் மாவட்டம், ஆற்காடு நகரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம் அருங்குன்றம். இங்கு வசிக்கும் பழனி நித்யன், சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பு பட்டப்படிப்பாக மாற்றப்பட்டபோது முதல் பேட்சில் படித்த முன்னாள் மாணவர். சென்னையில் சில காலம் கலை ஊடகங்களில் பணியாற்றிவிட்டு, இயற்கையின் மீது கொண்ட காதலால் ஒருகட்டத்தில் சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.

கிராமிய வாழ்க்கையை ரசிக்கும் நித்யன், அங்கு காணக் கிடைக்கும் சிறு செடிகொடிகள், காய் கனிகளின் நுட்பமான அழகிய தோற்றங்களை செல்போன் கேமராவுக்குள் சேகரித்து வருகிறார். பெயர் தெரியாத எத்தனையோ பூக்களும் அவருடைய ஆல்பத்தை அலங்கரிக்கின்றன. தினமும் ஃபேஸ்புக் பக்கத்தில் அவற்றை உற்சாகமாக பதிவிட்டு வருகிறார். நித்யன் எடுக்கும் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், நம்மைச் சுற்றியுள்ள சிறு செடிகளில் இத்தனை அழகா என்று ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது.

நாம் அவரிடமே பேசுவோம்.

“எப்போதுமே எளிமை மீது எனக்கு ஆர்வம் உண்டு. என்னைச் சுற்றியுள்ள எளிமையான விஷயங்களைக் கவனிப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது. கிராமத்து மனிதர்கள், செடிகள், பூக்கள், பழங்கள், சிறு வீடுகள் மீது ஆர்வம். மொபைல் கேமரா கையில் கிடைத்ததை ஒரு மாற்றமாக பார்க்கிறேன்.

ஒரு மேக்ரோ லென்ஸ் கிடைத்தது. ரொம்ப கம்மி விலைதான். சின்னக் குழந்தைகளுக்கு விருப்பமான சின்ன பொம்மை கிடைச்சா எப்படி இருக்கும். அப்படித்தான் ஒரு மனநிலை எனக்கும்.

ஆறாம் வகுப்புப் படிக்கும்போதிருந்தே கேமரா மீது ஆசை. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது சின்ன கேமரா வாங்கிக் கொடுத்தார்கள். 35 ஆண்டுகளாக கேமராவுடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

என் படங்களை மொபைல் கேமராவில்தான் எடுக்கிறேன். சிறு பூக்களின் மகரந்தங்களைக்கூட அதை வைத்துக்கொண்டு எடுக்க முடிகிறது. ஒரு பூவையோ, பழத்தையோ எடுத்தால்கூட நூறு படங்கள் எடுப்பேன். எண்ணிக்கையில் கணக்கு வழக்கில்லை.

மிக அழகான, சிறப்பான படங்களை மட்டுமே ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறேன். நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இதுபோன்ற மேக்ரோ விஷயங்களுக்கு மனந்திறந்த பாராட்டுகளையும் தெரிவித்து கருத்துகளைப் பதிவிடுகிறார்கள். சில அரிதான செடிகளையும் காய்களையும் படம்பிடிக்கும்போது, என் மனசு காற்றில் பறக்கிறது.

முசுமுசுக்கை செடியில் காயும் பழமுமாக இருக்கும். ஒரே கொத்தில் காயும் பழமும் இருப்பது எப்படி என்பது எனக்கு ஆச்சரியம். மொடக்கத்தான் இலைகள் இதயவடிவில் அழகாக காணப்படும். அதை நிறையவே பதிவு செய்திருக்கிறேன்.

என் ஆர்வத்தை குழந்தைகளுடன்தான் ஒப்பிடவேண்டும். அவர்களுக்குப் பிடித்த பொம்மைகள் கிடைத்தால் என்ன செய்வார்களோ, அப்படித்தான் மேக்ரோ லைன்ஸை வைத்துக்கொண்டு விளையாடிப் பார்க்கிறேன்.

நான் எடுக்கும் படங்களின் மூலம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு பெயர் தெரியாத எத்தனையோ செடிகொடிகளின் அறிமுகம் கிடைப்பதை மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.

சின்ன எளிய இயற்கையின் விநோதங்களை நான்கு ஆண்டுகளாக படங்களாகப் பதிவு செய்துவருகிறேன்.

நாம் தினமும் பார்க்கிற சாதாரண செடிகளில், பூக்களில், பழங்களில் இத்தனை அழகு இருக்கிறதா என்ற ஆச்சரியம்தான் என்னைப் படமெடுக்குத் தூண்டுகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் ஆசை என்று சொல்லலாம்” என்று உற்சாகம் குறையாமல் பேசிமுடிக்கிறார் பழனி நித்யன்.