சிறப்புக் களம்

மோடியின் நம்பிக்கை நட்சத்திரம் நிர்மலா சீதாராமனும் ரஃபேல் விவகாரமும்

மோடியின் நம்பிக்கை நட்சத்திரம் நிர்மலா சீதாராமனும் ரஃபேல் விவகாரமும்

webteam

ரஃபேல் தொடர்பாக மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் நேற்று அனல் பறக்க பேசினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரின் பேச்சை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உள்ளிட்ட பல பாஜக பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். அதே சமயத்தில் ''நீங்கள் நிறைய பேசினீர்கள். ஆனால் எதற்கும் பதில் சொல்லவில்லை'' என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். மக்களவையில் பேசிய அவர் விவாதத்தின் நடுவே ''நான் ஒன்றும் ராஜ குடும்பத்தில் இருந்து வந்தவள் அல்ல. நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள்'' என்று கூறி  தன்னுடைய அரசியல் வருகை குறித்தும் பதிவு செய்தார். அந்த வாதமும் அதிகமானோரால் கவனிக்கப்பட்டது. மதுரையில் பிறந்து இன்று நாட்டின் முக்கிய பதவியான பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் நிர்மலா சீதாராமன் யார்? அவர் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி?

1959ம் ஆண்டு ஆகஸ்ட் 19ல் மதுரையில் பிறந்தார் நிர்மலா சீதாராமன். தந்தை ரயில்வே ஊழியர் என்பதால் சிறு வயதிலேயே பல ஊர்களுக்கும் சென்று பழக்கமானவர். அடிக்கடி தந்தை பணிமாறுதல் ஆனதால் விழுப்புரம், சென்னை, திருச்சி எனப் பல இடங்களில் தன்னுடைய பள்ளிப்படிப்பை படித்துள்ளார் நிர்மலா. தனது பட்டப்படிப்பை  திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் முடித்த அவர் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப்பட்டத்தை முடித்தார்.

இவர் பரகலா பிரபாகரை ஜேஎன்யூவில்தான் முதன்முதலாக சந்தித்தார். பரகலா பிராபகர் ஆந்திராவைச் சேர்ந்தவர். பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார் நிர்மலா. அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. நிர்மலா சீதாராமன் பாஜகவின் முக்கிய பிரமுகராக இருந்தாலும், அவர் கணவரின் குடும்பம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தது. அவரின் மாமனார் பரகலா சேஷாவதரம் காங்கிரஸின் அமைச்சராக இருந்தவர். அவரின் மாமியார் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். குடும்பமே காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தி இயங்கிய போது நிர்மலா சீதாராமன் பாஜகவுக்குள் நுழைந்தது எப்படி? அதற்கு காரணமானவர் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ்தான்.

தனது திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் லண்டனில் தங்கிய நிர்மலா மீண்டும் 1991ல் இந்தியா திரும்பினார். 2003-2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் பணியாற்றினார். அப்போது 1999-2004 வரையிலான பாஜக ஆட்சி. பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் பணியாற்றியதால் சுஷ்மா சுவராஜூடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாகவே 2006ம் ஆண்டு பாஜகவின் இவர் இணைந்தார்.

இது குறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “நான் அரசியலில் நுழைய எனது மாமியார்தான் காரணம். குடும்பம் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், நான் பாஜகவினால் கவரப்பட்டேன். பாஜகவின் இணையலாமா என்ற கேள்வி எழுந்தபோது எனக்கு ஊக்கம் கொடுத்தவர் எனது மாமியார். ‘நல்லது செய்ய எந்தக் கட்சியில் இருந்தால் என்ன? கொள்கை பிடித்திருந்தால், பா.ஜ.க.வில் இணைந்து செயல்படு’என்று என்னிடம் கூறினார்”என்று தெரிவித்தார்.

4 ஆண்டுகள் பாஜகவில் பணியாற்றிய அவருக்கு 2010ம் ஆண்டு முதல் பதவியை கொடுத்தது பாஜக. அதன்படி பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் நாட்டின் பல பகுதிகளுக்கும் பறந்த நிர்மலா குஜராத்தில் அதிக கவனம் செலுத்தினார். 

பிரதமர் மோடிக்கு அதிக ஆதரவாக பேசி பம்பரமாய் சுழன்றார். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியா? மோடியா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது மோடிக்காக அழுத்தமான குரலை பதிவு செய்தவர் நிர்மலா. பின்னர் மோடியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின் மோடிக்காக தீவிர பிரசாரத்தில் இவர் ஈடுபட்டார். அவரின் குரல் நாடு முழுவதும் பதிவாகியது. இதற்கிடையேதான் கட்சிக்குள் வர காரணமான சுஷ்மாவுடன் நிர்மலாவுக்கு கருத்து மோதல் கிளம்பியது. அதற்கு காரணம் தெலங்கானாவின் தனிமாநில கோரிக்கை. இந்தக் கருத்து மோதல்களை பாஜக சரியாக கையாண்டு அதனை நீர்த்துப்போகச் செய்தது. 

பிரதமர் வேட்பாளருக்கான ஆதரவு குரல், மோடிக்கு ஆதரவான தீவிர பிரசாரம் என நிர்மலாவின் பங்கு பிரதமர் மோடி விவகாரத்தில் அதிகம். பின்னர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. அப்போது எம்பியாக கூட இல்லாத நிர்மலா சீதாராமனை தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) நியமித்தது மோடி அரசு.

அந்த நேரத்தில் ஆந்திராவில் பாஜக எம்பியாக இருந்த நெடுறமல்லி ஜனார்த்தன் காலமானார். அந்தக் காலியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக சார்பாக நிறுத்தப்பட்டார் நிர்மலா. பின்னர் ஆந்திராவில் இருந்து அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து கர்நாடகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.பின்னர் 2017ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறையை வழங்கியது மோடி அரசு. முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு முழு நேர பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் பெண் என்ற பெருமைக்கு உரியவர் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்தான் தமிழகத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் என்றெல்லாம் தமிழகத்தோடு இணைந்து அவர் அடிக்கடி பேசப்படுவார். ஆனால் இந்திய அளவில் பாஜகவின் முக்கிய ஆளுமையாக இருந்த நிர்மலா மத்திய அமைச்சரவையின் முக்கிய பொறுப்பில் அமர்ந்தார். 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பலவீனமாக காங்கிரஸ் நினைப்பது ரஃபேல் விவகாரம். அந்த விவகாரத்தை கையில் எடுத்து பாஜகவை மக்களவையில் வீழ்த்திவிடலாம் என்று நினைத்த காங்கிரசுக்கு எதிராக நேற்று மக்களவையில் பேசி   அமர்ந்திருக்கிறார் நிர்மலா. 

ரஃபேல் விவகாரத்தை நாடாளுமன்ற தேர்தலுக்குள் நீர்த்துப்போக செய்ய வேண்டுமென்பதே இப்போதைக்கு பாஜகவின் தேவை. அதற்கான நடவடிக்கையில் நிர்மலா தற்போதே இறங்கிவிட்டார் என்பதே மத்தியில் பேச்சாக உள்ளது. நிர்மலா சீதாராமன் சமாளிக்க வேண்டிய ரஃபேல் குற்றச்சாட்டு வெறுமனே கடந்துவிடக்கூடியது அல்ல. அது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடியது. 2006ல் கட்சிக்குள் நுழைந்து 13 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ள நிர்மலா சீதாராமன் தனக்கு முன் உள்ள சவால்களை எப்படி சமாளிக்க போகிறார் என்பதில்தான் அவரின் சாமர்த்தியம் உள்ளது.