சிறப்புக் களம்

’’இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர்’’ – NFHS அறிக்கை குறித்த உண்மை என்ன?

’’இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர்’’ – NFHS அறிக்கை குறித்த உண்மை என்ன?

Veeramani

இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட தேசிய குடும்பநல ஆய்வு (NFHS) தரவுகளின்படி, தற்போது நமது நாட்டில் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் உண்மையா? என்பது குறித்து வல்லுநர்களின் கருத்துகளைப் பார்க்கலாம். 

தேசிய குடும்பநல ஆய்வின் (NFHS) கணக்கெடுப்பானது, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்தமான 300 மில்லியன் குடும்பங்களில் சுமார் 6,30,000 குடும்பங்களில் மட்டுமே எடுக்கப்பட்டது என்றும், மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள் கிடைத்தவுடன்தான் இதுகுறித்த உண்மையான தகவல்கள் வெளிவரும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். "தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் கணக்கெடுக்கிறது. எனவே, ஒட்டுமொத்த பாலின விகிதத்தின் துல்லியமான கணக்கை அதுவே வழங்குகிறது" என்று இந்திய மக்கள்தொகை நிதியத்தின் இயக்குநர் பூனம் முத்ரேஜா தெரிவித்துள்ளார்.

பாராட்டுகளும் – விமர்சனங்களும்

ஆனால் தேசிய குடும்பநல ஆய்வு (NFHS) வெளியிட்டுள்ள இந்த எண்கள் தற்போது இந்தியாவில் தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ளது. வரலாற்று ரீதியாகவே ஆண்குழந்தைகளை விரும்பும் சமூகத்தில் தற்போது பெண்குழந்தைகளின் விகிதம் அதிகரித்திருப்பது நாட்டில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்களை சுட்டிக்காட்டுவதாக சிலர் கூறுகின்றனர். இந்தியாவில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இதுவே முதன்முறை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பெண்கள் அதிகாரம் பெற அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளே இதற்கு காரணம்எனத் தெரிவித்தார். ஊடக அறிக்கைகள் இதை ஒரு "மகத்தான சாதனை" மற்றும் "மக்கள்தொகை மாற்றம்" என்று பாராட்டுகின்றன. இந்தியா இப்போது வளர்ந்த நாடுகளின் லீக்கில் நுழைந்துள்ளது என்று ஒரு பத்திரிகையாளர் எழுதியுள்ளார். இதுபோல அரசுக்கு ஆதரவாக இந்த சர்வே முடிவுகள் குறித்து பல பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆனால் விமர்சகர்கள், தேசிய குடும்பநல ஆய்வு (NFHS) குறிப்பிட்டுள்ளபடி பெண்களின் எண்ணிக்கை கூடவில்லை என்றும், அரசாங்கத்தின் இந்த தரவுகள் "அபத்தமானது" மற்றும் "சாத்தியமற்றதுஎன்றும் விவரிக்கின்றனர். "100 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலமாக இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் என்று மீண்டும் மீண்டும் தெரியவந்துள்ளது" என்று மக்கள்தொகை ஆராய்ச்சியாளர் சாபு ஜார்ஜ் கூறுகிறார்.

"கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 940 பெண்கள் இருந்தனர் மற்றும் குழந்தை பாலின விகிதம் [இது குழந்தைகளில் இருந்து ஆறு வயது வரையிலான குழந்தைகளைக் கணக்கிடுகிறது] 1,000 ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. அப்படியென்றால் வெறும் 10 வருடத்தில் எப்படி இவ்வளவு பெரிய முன்னேற்றம் உருவாகும்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல்போன பெண்களின் நாடு

இந்தியா நீண்டகாலமாக "காணாமல் போன பெண்களின் நாடு" என்று அழைக்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் எழுதிய கட்டுரையில் 1990ஆம் ஆண்டில் பாலின விகிதம் ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 927 பெண்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தபோது இந்த வார்த்தை முதலில் பயன்படுத்தப்பட்டது. அப்போது காணாமல்போன பெண்களின் எண்ணிக்கை 37 மில்லியனாக இருந்தது.

ஆண் குழந்தைதான் குடும்பப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வர் மற்றும் பெற்றோர்களின் வயதான காலத்தில் அவர்களைக் கவனித்துக்கொள்வர். அதேசமயம் மகள்களுக்கு வரதட்சணை கொடுக்கவேண்டும், அவர்கள் திருமணத்திற்கு பிறகு மணமகனின் வீடுகளுக்கு சென்றுவிடுவார்கள் என்ற பரவலான கலாசார நம்பிக்கையில் ஆண் குழந்தைகளுக்கான விருப்பம் இந்தியாவில் வேரூன்றியுள்ளது. இதனால் பெண்களுக்கு எதிரான மனநிலை ஆழமாக பதிந்துள்ளது.

1970களில் இருந்து மகப்பேறுக்கு முன்பு கருவில் பாலினத்தை கண்டறியும் மருத்துவ சோதனை வாய்ப்பு எளிதாகக் கிடைத்ததால், பெண் கருக்கொலை என அழைக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலின கருக்கலைப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான பெண் கருக்கள் அழிக்கப்படுவதற்கு இந்த சோதனைகள் வழிவகுத்தது. இதனால் இந்தியாவில் பெண்களின் பாலின விகிதம் வெகுவாக குறைந்தது.

1994 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பிறப்புக்கு முந்தைய பாலின நிர்ணய சோதனை (PNDT) சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட பாலின கருக்கலைப்புகளை சட்டவிரோதமாக்கியது. 2002இல் கொண்டுவரப்பட்ட சட்டம் மூலமாக கருத்தரிப்பதற்கு முந்தைய கட்டத்தில்கூட பாலினத் தேர்வு செய்வது சட்டவிரோதமாக்கப்பட்டது. ஆனால் தற்போதும்கூட ரவலாக பாலினக் கருக்கலைப்புகள் சட்டவிரோதமாகச் செய்யப்படுவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பெண்களின் பாலின விகிதம் குறையாமல் இருந்தால் ஆச்சர்யம்

"30 முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளை ஒழித்துவிட்டோம் என்றால், 2021-ல் நமது நாட்டில் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகளவில் குறைந்துதான் இருக்கும். அப்படியானால் இந்த சர்வேயின் எண்ணிக்கை நம்பகத்தன்மை வாய்ந்தது என்று எப்படி நம்புவது?" என்று சாபு ஜார்ஜ் கேள்வியெழுப்புகிறார்.

மேலும், “தற்போதைய தரவுகளின்படி பெண் பாலின விகிதம் 952 ஆக இருக்கும் என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீபத்திய கணக்கெடுப்பின்படிது 929ஆக இருக்கிறது. அப்படியெனில் இது இரண்டுக்கும் இடையில் 2% வித்தியாசம் உள்ளது. அதன்படி ப்போதும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளைக் கொல்கிறோம் என்பதையே இது காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 26 மில்லியன் பிறப்புகள் என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் 130 மில்லியன் பிறப்புகள் நடந்துள்ளன. அப்படியானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.6 மில்லியன் பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டோம் என்பதையே இது காட்டுகிறது. இது நாட்டுக்கே அவமானம்; இதில் கொண்டாட எதுவும் இல்லை" என்று அவர் கூறுகிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள் இருந்தனர்.  எனவே கடந்த காலங்களில், பெண்சிசுக் கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் அரசு தனது உத்தி தோல்வியடைந்துவிட்டதாக ஒப்புக்கொண்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இது ஒரு "தேசிய அவமானம்" என்றும், இந்தியாவின் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற "சிலுவைப் போருக்கு" அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். 2014இல் பதவியேற்ற உடனேயே பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் தங்கள் மகள்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒரு வருடம் கழித்து, மக்கள் தங்கள் மகள்களைக் காப்பாற்றவும், அவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் ஒரு திட்டத்தையும் தொடங்கினார்.

ஆனாலும்கூட சமீபத்திய ஆண்டுகளில், தெருக்களில் கைவிடப்பட்ட, கல்லறைகளில் புதைக்கப்பட்ட, ஆறுகள் மற்றும் வடிகால்களில் வீசப்பட்ட புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளை பற்றிய செய்திகளை தினம் தினம் நாம் படிக்கிறோம். மேலும் இந்தியா முழுவதிலும் இருந்துவரும் தகவல்கள், சட்டவிரோத பாலின நிர்ணய கிளினிக்குகள் அதிகரித்து வருவதாக கூறுகின்றன.

ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற சில மாநிலங்கள் தங்கள் பாலின விகிதத்தை மேம்படுத்துவதற்கு உழைத்துள்ளன. ஆனால் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய மாநிலங்களில் பெரும்பாலானவை பெண்சிசுக் கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் முன்னேறவில்லை என்று ஜார்ஜ் கூறுகிறார். மேலும், " இந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகள் நம்பகத்தன்மையற்றவை என்று நான் நினைக்கிறேன். இப்ப்டி நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவு வெளிவரும்போது குழந்தை பாலின விகிதத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது என்றே நான் நினைக்கிறேன். அது இன்னும் சரியாமல் இருந்தால் ஆச்சர்யம் " என்று அவர் கூறுகிறார்.

தகவல் உறுதுணை - பிபிசி