சிறப்புக் களம்

வான்வழி அத்துமீறலில் சீனா... 'தயாராகும்' தைவான்... - தொடரும் பதற்றமும் பின்னணியும்

வான்வழி அத்துமீறலில் சீனா... 'தயாராகும்' தைவான்... - தொடரும் பதற்றமும் பின்னணியும்

PT WEB

தைவான் நாட்டு வான் பரப்பில் சீனாவின் போர் விமானங்கள் பறந்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், '2025-க்குள் தைவான் மீது சீனா முழுமையாக படையெடுக்கும்' என்று தைவான் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் நேற்று முன்தினம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டார். ''கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீன உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 2025-க்குள் தைவான் மீது சீனா முழுமையாக படையெடுக்கும்" என்று அந்த எச்சரிக்கையில் தெரிவித்திருந்தார்.

இவர் எச்சரிக்கை விடுக்க காரணம், சீனாவின் சமீபத்திய வான்வழி அத்துமீறல்கள்தான். கடந்த நான்கு நாள்களில், தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சுமார் 150 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. அதிலும் முதல்நாள் மட்டும் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் திறன் கொண்ட போர் விமானங்கள் உள்பட 38 விமானங்கள் தைவான் வான் பரப்பில் நுழைந்ததை அடுத்து அமைச்சர் இந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சீனா - தைவான் இடையே என்ன பிரச்னை? - தமிழக மக்கள் தொகையில் கால்வாசி அளவே கொண்டே தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே பல தலைமுறைகளுக்கு முன்பே தொடங்கிய இந்த சண்டையை தெரிந்துகொள்ள ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் அவசியம். சீனாவின் கடைசி எல்லையில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவே தைவான். தற்போதைய நிலவரப்படி, 2.36 கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த தைவான், ஜப்பான் - சீன போருக்கு பின் ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

மாவோ புரட்சிக்கு முன் சீனாவை ஆட்சி செய்துவந்தார் சியாங் கே சேக் என்ற ஆட்சியாளர். இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோற்று நாட்டை விட்டு வெளியேறி தஞ்சம் அடைந்த இடம் தைவான். இவர் சில ஆண்டுகள் தைவானை தலைமையாக கொண்டு அந்த நாட்டை சுற்றியுள்ள தீவுகளை ஆட்சி செய்து வந்தார். இவர்தான் தைவானை தனிநாடாக முதலில் அறிவித்து ஆட்சி செய்து வந்தார். ஆனால், தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கியது.

ஐ.நா அமைப்பு உட்பட சில நாடுகள் சீனாவின் வற்புறுத்தல் காரணமாக தைவானை தனிநாடாக இன்று வரை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. 1975 வாக்கில் சியாங் மறைந்துவிட, தைவான் ஜனநாயக ஆட்சி பக்கம் திரும்பியது. என்றாலும், தொடர்ந்து தைவான் தனி நாடு என்ற கோட்பாட்டில் இதுவரை தைவானை ஆட்சி செய்தவர்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள். சீனா இதனை துளி அளவும் ஏற்க மறுத்து வருகிறது. மேலும், தங்கள் நாட்டைச் சேர்ந்த யாரேனும் தைவானுக்கு ஆதரவாக பேசினால் உடனடியாக கைது என்று இறங்கிவிடுகிறது.

இதில் அமெரிக்கா தொடர்ந்து தைவான் பக்கம் நின்றுவருகிறது. இப்படி இறையாண்மை, வெளிநாட்டு உறவுகள் மற்றும் ராணுவத்தை கட்டியெழுப்புதல் போன்ற விஷயங்களில் வரலாற்று நெடுங்கிலும் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பெரும் மோதல்களாக இருந்துவந்துள்ளன. தன்னை ஓர் இறையாண்மை கொண்ட நாடு என்பதில் தொடர்ந்து தைவான் உறுதியாக இருந்துவரும் இந்தநிலையில்தான் கடந்த நான்கு நாட்களாக தொடர் வான்வழி அத்துமீறல்களை சீனா மேற்கொண்டு வருகிறது.

ஒரு நாட்டின் வான்வெளி சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால், ஒரு நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலம் என்பது சம்பந்தப்பட்ட நாட்டின் தற்காப்பு நோக்கங்களுக்காக அதன் ராணுவத்தால் கண்காணிக்கப்படும் ஒரு சுய-பிரகடனப் பகுதியாகும். இப்படியான தைவானின் வான் பாதுகாப்பு மண்டல பகுதிகளில்தான் சீனா விமானங்கள் விதியை மீறி பறந்துள்ளன. அதுவும் போர் விமானங்கள், ராணுவ விமானங்கள் போன்றவைதான் தைவானுக்குள் நுழைந்தவை. தைவான் பாதுகாப்பு படைகளின் திறன்களை சோதிக்கும் ஒரு தந்திரமாக சீனா இந்த ஊடுருவலை நிகழ்த்தி வருவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்வினை எப்படி இருந்தது? - இந்த ஊடுருவல்களை தங்கள் நாட்டின் போர் விமானங்களை வைத்து தைவான் முதல்கட்டமாக முறியடித்துள்ளது. என்றாலும், எதிர்காலத்தில் சீனாவை எதிர்க்க திட்டமிட்டு வருகிறது. அதற்கேற்ப தைவான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள கூடுதல் ராணுவ செலவுத் திட்டங்களை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளது. ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க இந்த 8.6 பில்லியன் டாலர் பட்ஜெட் செயல்படுத்தப் போவதாக தைவான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நிலைப்பாடு என்ன? - தைவானின் தனி நாடு கூற்றுக்கு ஆரம்பத்தில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா மட்டுமே. தைவானின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா இப்போதும் முதல் ஆளாக சீனாவின் அத்துமீறலை எதிர்த்து குரல்கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ''ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் 'தைவான் உடன்படிக்கைக்கு கட்டுப்படுவோம்' என சீனா கூறியுள்ளது. தைவான் உடன்படிக்கையை கடைபிடிப்பதைத் தவிர வேறு எதையும் சீனா செய்யக்கூடாது என்பதை ஜி ஜின்பிங்கிடம் தெளிவுபடுத்தினோம்" என்றுள்ளார்.

சீனாவின் மக்கள் லிபரேஷன் ராணுவம் - என்ன சொல்கிறது?

தைவான் எல்லைப் பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறந்தது தொடர்பாக பேசியுள்ள மக்கள் சீன ராணுவம்(PLA), தைவான் பகுதியில் அந்நிய நாடுகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால் அதற்கு எச்சரிக்கை ஊட்டும் விதமாக இதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் தலையிட்டு பதற்றத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “தைவானின் பிரிவினை வாத கட்சியான ஜனநாயக முற்போக்கு கட்சி தற்போது அபாயத்தை உணர்ந்திருக்கும். ஆனால், தன்னுடைய தவறுகளை அந்த கட்சி திருத்திக் கொள்ளாமல் இருக்கிறது. தொடர்ந்து வெளிநாடுகளுடன் உறவை மேம்படுத்திக் கொள்வதிலும், ராணுவ உறவை வலுப்படுத்திக் கொள்வதிலும் முனைப்பு காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது தைவானின் பிரிவினைவாத கட்சிகளின் அமெரிக்கா உடனான நெருக்கான உறவுதான் இந்த சிக்கல்களுக்கு காரணம் என்று சீனாவின் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தைவான் மூலமாக சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின் வலிமையை சோதிக்க அமெரிக்கா நினைத்தால் அதற்கு அவர்கள் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதனிடையே, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றங்களை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சீனா - தைவான் நாடுகள் தங்கள் தூதரகத்தின் மூலம் பதற்றத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி, சீனாவும் தைவானும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள வேளையில், ஆஸ்திரேலியா வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் செய்தித் தொடர்பாளரோ, ''தைவான் மற்றும் பிற பிராந்திய பிரச்னைகளில் உள்ள வேறுபாடுகளைத் தீர்ப்பது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இருக்க வேண்டும்" என்றுள்ளார்.

- மலையரசு

தகவல் உறுதுணை: https://www.globaltimes.cn/page/202110/1235761.shtml