தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாமென என்ற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இந்தக்கட்டுப்பாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கைக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோன பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாகவும், உயிரிழப்புகளை தடுக்க தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூடுதல் கட்டுப்பாடுகளில் ஷாப்பிங் மால்களை தற்காலிகமாக மூட பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போல திரையரங்குகள், மதவழிபாட்டுத்தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும், இரவு நேர ஊரடங்கின் நேரமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
புதியகட்டுப்பாடுகள் பெரிதளவு கொரோனா பரவலை கட்டுப்படுத்தாது:
இந்தப்புதிய கட்டுப்பாடுகள் கொரோனா பரவலை தடுக்குமா என்பது குறித்து நுரையீரல் மருத்துவ நிபுணர் பிரசன்னா குமார் தாமஸ் பேசினார். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு:
“புதிய கட்டுப்பாடுகள் பெரிதளவு கைக்கொடுக்காது. நாம் இரண்டு விஷயங்களில் தவறு செய்து விட்டோம். அவை கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றாதது. மற்றொன்று கொரொனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்காதது.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவம்
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு நுரையீரல் பாதிக்கப்படும் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகையால் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கொரொனா பாதுகாப்பு வழிமுறைகள் நமக்கு கை கொடுத்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது மிக முக்கியமானது. ஆகையால் மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் பணியை விரைவு படுத்த வேண்டும்.
அரசு தலைவர்கள் முன்னுதாரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள், ஊடகங்கள் மட்டும் தடுப்பூசி குறித்து பேசாமால் அனைவரும் தடுப்பூசி குறித்த பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். இதனை ஜனவரியிலேயே நாம் ஆரம்பித்திருந்தால் இன்று நிலைமை சரியாக இருந்திருக்கும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,000 ஆயிரத்தை நெருங்கியது. உயிரிழப்பு 78 ஆக உயர்ந்தது. இதில் 200க்கும் மேற்ப்பட்ட சிறார்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில் இன்று தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்த உள்ளது கவனிக்கத்தக்கது.