சிறப்புக் களம்

வான்னக்ரை வரிசையில் அடுத்த ரான்சம்வேர் - மிரட்டும் ’பெட்யா’

வான்னக்ரை வரிசையில் அடுத்த ரான்சம்வேர் - மிரட்டும் ’பெட்யா’

webteam

வான்னக்ரை ரான்சம்வேர் வரிசையில் சமீபத்திய இணைவு இந்த பெட்யா ரான்சம் வேர். இந்த ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் உள்ள தரவுகளை முடக்குவதே இதன் முக்கிய நோக்கம்.

பெட்யா ரான்சம் வேர் என்பது என்ன?: 

பெட்யா ரான்சம் வேர் என்பது கணினிகளைத் தாக்கி, அதிலுள்ள தரவுகளை பயனாளர்கள் திறக்க முடியாத அளவுக்கு முடக்கிவிடும். தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் உள்ள தகவல்களைத் திரும்பப்பெற, ஹேக்கர்கள் கேட்கும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தபின்னரே அந்த தரவுகளை பயனாளர்கள் திறக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியும். உலகம் முழுவதும் உள்ள கணினிகளை கடந்த மே மாதத்தில் தாக்கிய வான்னக்ரை ரான்சம்வேரைப் போலவே எடெர்னல் ப்ளூ (EternalBlue) எனும் தொழில்நுட்பத்தையே இந்த பெட்யா ரான்சம்வேரும் பயன்படுத்துவதாக சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

எப்படி செயல்படுகிறது?:
பாதிக்கப்பட்ட கணினியில் உள்ள தரவுகளை மீட்டெடுக்க 300 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தினை பிட் காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சியாகக் கொடுக்கும்படி கேட்கும். உங்கள் தரவுகளை நாங்கள் அளிக்கும் டீக்ரிப்ஷன் கோட்டைத் தவிர வேறு யாராலும் மீட்டெடுக்க முடியாது என்கிறது பாதிக்கப்பட்ட கணினிகளில் வரும் செய்தி.

எங்கிருந்து தொடங்கியது பாதிப்பு?
உக்ரைனில் இருந்தே இந்த தாக்குதல் தொடங்கியதாகக் கூறுகிறது சைபர் பாதுகாப்பு வழங்கும் ஃபிளாஷ் பாயிண்ட் எனும் நிறுவனம். அந்நாட்டில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் அக்கவுண்டிங் சாஃப்ட்வேர் ஒன்றின் புதிய அப்டேட் என்ற பெயரில் இணையம் மூலம் கணினிகளில் பெட்யா ரான்சம்வேர் ஊடுருவியதாகவும் கூறுகிறார்கள். இதனால், உக்ரனின் தேசிய வங்கி மற்றும் கீவ் விமான நிலையம் ஆகியவற்றிலுள்ள கணினிகள் மிகமோசமான பாதிப்புக்குள்ளானது. 

பாதிப்புகள் என்னென்ன?:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 20,000த்துக்கும் மேற்பட்ட கணினிகள் பெட்யா ரான்சம்வேர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கேஸ்பெஸ்கே எனும் ஆண்டிவைரஸ் சாஃப்ட்வேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவும், உக்ரைனும் பெரியளவிலான பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறுகிறார்கள் சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். வான்னக்ரை ரான்சம்வேர் தாக்குதலுக்குப் பின்னர், விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் பெரும்பாலான கணினிகள் பாதுகாப்பு அப்டேட்டைப் பெற்றுவிட்டன. இதனால், வான்னக்ரை அளவுக்கு பெட்யா ரேன்சம்வேர் வைரஸால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்றே கணிக்கப்படுகிறது. 

தீர்வு என்ன?
வான்னக்ரை ரான்சம்வேரை அழிக்கும் ’கில் சுவிட்ச்’ (Kill Switch) எனும் ப்ரோகிராமை இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது மார்க்கஸ் ஹர்சன்ஸ் எழுதினார். அதனால் வான்னக்ரை தாக்குதலுக்கு உள்ளான கணினி பயனாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த பெட்யா ரான்சம்வேர் வான்னக்ரை ரான்சம்வேர் வைரஸை விட பலம் கொண்டதாகவும், எளிதில் தடுக்க முடியாததாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பெட்யாவைத் தடுப்பது கடினம் என்றும் கருதப்படுகிறது. 

இந்தியாவில் பாதிப்புகள் எப்படி?
நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான மும்பை துறைமுகத்தினை நிர்வகிக்கும் கணினிகள் ரான்சம்வேர் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றன. ஆனால், அந்த ரான்சம்வேர்கள் பெட்யாவா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை. பெட்யா தாக்குதலுக்கு உள்ளானதாக இந்தியாவில் எந்தவித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் வெளிவரவில்லை.