சிறப்புக் களம்

'பினராயிக்கு தெரியாமலே அனுமதியா..?' - பேபி அணை மரங்களை வெட்டுவதில் சர்ச்சையும் தாக்கமும்

'பினராயிக்கு தெரியாமலே அனுமதியா..?' - பேபி அணை மரங்களை வெட்டுவதில் சர்ச்சையும் தாக்கமும்

PT WEB

முல்லைப் பெரியாறு பேபி அணையை ஒட்டிய 15 மரங்களை வெட்ட உத்தரவிட்டது கேரள முதல்வர் பினாரயி விஜயனுக்குத் தெரியாமல் நடந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் புதிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கேரள முதல்வர் பினாரயி விஜயனுக்கு ஒரு கடிதம் எழுதினார். "முல்லைப் பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்ததற்கு நன்றி. பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது. மேலும், கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்க இந்த அனுமதி உதவும். இந்த அனுமதி இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்துக்குப் பயன் அளிக்கும் வகையில் அமைகின்ற அதேவேளையில் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என நம்புகிறேன்" என்று எழுதிய ஸ்டாலினின் நன்றி கடிதம் கேரள அரசியலில் இன்றைய ஹாட் டாபிக்.

குறிப்பாக நேற்று நடந்த கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தில் மரம் வெட்ட அனுமதி கொடுத்த விவகாரம் பெரிய விவாதத்துக்கு வித்திட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏ திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த விவகாரத்தை முன்வைத்து ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து, "பேபி அணைக்கு அருகில் உள்ள 15 மரங்களை வெட்ட தமிழகத்திற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்ததில் மர்மமும் அவசரமும் இருப்பதாக தோன்றுகிறது. மரங்கள் வெட்டுவது தொடர்பாக தமிழகத்தின் கோரிக்கை 2015 முதல் நிலுவையில் உள்ள நிலையில், திடீரென இந்த கோரிக்கையை கேரள வனத்துறை அக்டோபர் 30-ஆம் தேதி நீர்ப்பாசனத் துறைக்கு அனுப்புகிறது. பின்னர், இதற்கடுத்த மறுநாள் நீர் பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

எங்களுக்கு இருக்கும் கேள்வி இதுதான். உச்ச நீதிமன்றத்தில் கேரளா ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டை முற்றிலும் மீறி நீர்ப்பாசனம் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் எவ்வாறு செயல்பட முடியும்? நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மரம் வெட்ட அனுமதி கொடுத்துள்ள உத்தரவும், உத்தரவின் வேகமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சட்டப்பேரவையில் பதில் கொடுத்த கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், "முதல்வர் பினாராயி விஜயன், நீர்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் மற்றும் நான் உட்பட அரசு நிர்வாகிகளுக்கு உயர் அதிகாரிகள் எடுத்த இந்த முடிவு தெரியாது. இது எங்களுக்குத் தெரிந்தவுடன், நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்" என்றார். குறிப்பாக, முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் தெரியாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் பேசுகையில், "பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்ததையடுத்து கேரளா அளித்த ஒப்புதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விஷயத்தில் அமைச்சர்களின் அறியாமையைக் கண்டு நான் திகைக்கிறேன். கேரள அதிகாரிகள் எடுத்த முடிவுகள் எங்கள் அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் தெரியாது, ஆனால், தமிழக முதல்வருக்கு தெரியும். எப்படி இருக்கிறது பாருங்கள். உங்களுக்குக் கீழ் உள்ள ஓர் அதிகாரி பிறப்பித்த உத்தரவு உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் ஏன் இன்னும் அமைச்சராக இருக்கிறீர்கள்?" என்று காட்டமாக வாதம் செய்தார். இதற்கு பதில் கொடுத்த வனத்துறை அமைச்சர் சசீந்திரன், "இந்த உத்தரவு எந்த ஒரு குறிப்பிட்ட முடிவையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் கோரிக்கை செயல்படுத்தப்பட்டு வருவதாக மட்டுமே அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதனைக் கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், "தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக நீங்களே கூறியுள்ள நிலையில், நீதிமன்றம் அனுமதி கொடுக்காமல் இருக்கும் நிலையில், உங்கள் தலைமையின் கீழ் உள்ள அதிகாரிகள் எப்படி கோரிக்கையை செயல்படுத்துவதாகக் கூற முடியும்? வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-ன் படி தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதிகளை வாங்காமல், மரங்களை வெட்டுவதற்கான கோரிக்கையை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் கேரளா தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில், எப்படி மரங்களை வெட்ட அதிகாரிகள் உத்தரவு கொடுத்தார்கள்? மூத்த அதிகாரிகள் மாநில நலன்களுக்கு எதிராகச் செயல்பட எப்படி துணிந்தார்கள்? கூடுதல் தலைமைச் செயலாளரும், முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழுவில் உள்ள கேரளத்தின் தனி உறுப்பினரும் அரசின் அனுமதி இல்லாமல் இந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது" என்று குற்றம்சாட்டி பேசினார்.

முதல்வர் பினாரயி விஜயன் இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும் என்று கேரள எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கெனவே பருவமழை தொடங்கியதில் இருந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கேரளத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில் இந்த விஷயமும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

- மலையரசு