சிறப்புக் களம்

கொண்டாடப்படும் தமிழக அரசின் அதிகாரிகள் - ஆலோசகர்கள்... கவனிக்கத்தக்க 'ஒற்றுமை' என்ன?

கொண்டாடப்படும் தமிழக அரசின் அதிகாரிகள் - ஆலோசகர்கள்... கவனிக்கத்தக்க 'ஒற்றுமை' என்ன?

Veeramani

தமிழ்நாட்டில் புதிதாக திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பல அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் நியமனங்கள் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தலைமை செயலாளர் வெ.இறையன்பு, காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, முதல்வரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் உட்பட பல நியமனங்களும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. இதற்கு காரணம் இவர்கள் அனைவருமே ஏற்கனவே புத்தகங்கள், மேடைப்பேச்சுகள் மூலமாக மக்களிடம் அறிமுகமானவர்கள், மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர்கள் என்பது முக்கியமானது.

தமிழ்நாடு அரசின் நியமனங்களில் மக்களின் மனம் கவர்ந்தவர்கள் பற்றிய புரஃபைல் இதோ…

வெ.இறையன்பு ஐஏஎஸ் (தமிழக தலைமைச் செயலாளர்):

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்-ஸுக்கு அறிமுகமே தேவையில்லை. நிர்வாகம், அனுபவம், எழுத்து, பேச்சு என அத்தனைத் தளங்களிலும் மக்களுக்கு அறிமுகமானவர்.  இவரின் தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்களும், மேடைப்பேச்சுக்களும் மக்களிடம் பெரும் மதிப்பினை பெற்றவை. அத்துடன் வரலாறு தொடர்பான தகவல்களை விளக்கும் அறிவு பெட்டகமான இவரின் புத்தகங்கள் தமிழில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எழுத்து, பேச்சு மூலமாக மக்களின் இதயம் தொட்ட இவர் இப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆகியிருப்பதால் மக்கள் கொண்டாடுகின்றனர்.  

சேலம் மாவட்டத்தில் காட்டூர் என்கிற கிராமத்தில் பிறந்த இறையன்பு, பல்வேறு பட்டப் படிப்புகளை முடித்தவர். வணிக நிர்வாகம் மற்றும் வள்ளுவர் - ஷேக்ஸ்பியர் ஆகிய கருப்பொருள்களில் இரு டாக்டர் பட்டங்களையும் பெற்றவர். 1987-ஆம் ஆண்டு ஆட்சிப் பணித்தேர்வில்  இந்திய அளவில் 15-வது ரேங்கிலும், தமிழகத்தில் முதல் இடத்திலும் தேர்ச்சிபெற்றார். நாகை மாவட்ட துணை ஆட்சியராக ஆட்சிப் பணியைத் தொடங்கிய இறையன்பு, நகராட்சி நிர்வாக ஆணையர், செய்தி ஒளிபரப்புத் துறைச் செயலர், முதல்வரின் கூடுதல் செயலர், சுற்றுலாத்துறைச் செயலர் எனப் பல பதவிகளை வகித்துள்ளார். கடலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்தவர். தமிழ்மீது பெரும் பற்றுகொண்ட இவர் 100-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார், அழகு தமிழில் மேடைகளில் சிறப்பாகப் பேசக் கூடியவர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.

சைலேந்திரபாபு, (தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு காவல்துறை டிஜிபி)

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸும் எழுத்து, பேச்சு மூலமாக மக்களிடம் நன்றாக அறிமுகமானவர்தான். இவரின் வழிகாட்டுதல் நூல்கள், தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்துகள், ஊக்கமளிக்கும் மேடைப்பேச்சுகள், பிட்னஸ் குறித்த ஆர்வத்தை தூண்டும் வீடியோக்கள் என தமிழகத்தில் மிகவும் அறியப்பட்ட ஆளுமை இவர். இதனால் இவரின் நியமனமும் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் பிறந்தவர். விவசாயத்தில் முதுகலை அறிவியல் பட்டம், எம்பிஏ மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை முடித்தவர். சைபர்கிரைம் ஆய்வுப்படிப்பையும் முடித்துள்ளார். தனது 25 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ம் ஆண்டு தமிழக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்பியாக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், சென்னை அடையாறு துணை ஆணையர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணிபுரிந்தார். வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக இருந்தவர்.

சென்னை காவல்துறை வடக்கு மண்டல  இணை ஆணையராக பணியாற்றிய போது 2004ம் ஆண்டு கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் மற்றும் மாமூல் வசூலிப்பதில் கொடி கட்டிப் பறந்த தாதாக்கள் ‘காட்டான்’ சுப்பிரமணி, ‘கேட்’ ராஜேந்திரன், ‘பூங்காவனம்’ ராமமூர்த்தி, ‘மாட்டு’ சேகர், ‘டைசன்’ சேகர், ‘பாக்சர்’ வடிவேல், வீரமணி போன்ற ரவுடிகளின் கதைக்கு முடிவு கட்டினார். தற்போது சென்னையில் பெரிய ரவுடிகள் அந்த அளவுக்கு இல்லை என்றால் அதற்கு சைலேந்திரபாபுவின் ஆரம்பகால துணிச்சல் நடவடிக்கைகள்தான் காரணம் என காவல்துறையிரே கூறுகின்றனர்.

அதன்பின் கோவை மாநகர காவல்துறை ஆணையர், வடக்கு மண்டல ஐஜி, கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி, சிறைத்துறை தலைவர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, ரயில்வே காவல்துறை டிஜிபி என பல்வேறு பொறுப்புகளிலும் தனது அழுத்தமான முத்திரையை பதித்தவர். ‘YOU TOO BECOME AN IPS OFFICER’, ‘BE AMBITIOUS’, ‘PRINCIPLES OF SUCCESS IN INTERVIEW’, ‘A GUIDE OF HEALTH AND HAPPINESS’, ‘அமெரிக்காவில் 24 நாட்கள்’ உள்ளிட்ட இவர் எழுதிய பல தமிழ், ஆங்கில நூல்கள் விற்பனையில் சாதனை படைத்தவை

உதயச்சந்திரன் ஐஏஎஸ் (முதல்வரின் முதன்மைத் தனிச் செயலாளர்)

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்-ஸுக்கும் பெரிதாக மக்களிடம் அறிமுகம் தேவையில்லை. வரலாறு வழியாக தன்னம்பிக்கை ஊட்டும் இவரின் எழுத்துக்கள் இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றவை. மிகச்சிறந்த சொற்பொழிவாளராகவும் மக்களிடம் அறிமுகமாகியிருக்கும் இவர், தமிழில் பல சிறப்புமிக கட்டுரைகளையும் எழுதிவருகிறார். அதுபோல உதயச்சந்திரன் பதவி வகித்த துறைகளில் செய்த சீர்திருத்தங்கள் மூலமாகவும் தமிழகத்தில் நன்கு அறிமுகமானவர். 1995 பேட்ஜ் அதிகாரியான உதயச்சந்திரன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இளம்வயதிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியானவர். அதனால்தான் என்னவோ இவர் பணியாற்றிய இடமெல்லாம் புது ரத்தம் பாய்ச்சினார். ஈரோடு மாவட்ட ஆட்சியராக மக்கள் இதயங்களில் இடம்பிடித்த உதயச்சந்திரன், மதுரையில்  பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 3 கிராமங்களுக்கு வெற்றிகரமாக தேர்தலையும் நடத்திக் காட்டியவர்.

முன்பெல்லாம் காசு கொடுத்தால்தான் அரசுப்பணி என்ற நிலையில் முறைகேடுகள், ஊழல் மண்டிக்கிடந்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் களைகளை பிடுங்கியெடுத்தவர் இவர். டிஎன்பிஎஸ்சி துறையின் அத்தனை அம்சங்களையும் டிஜிட்டலில் வெளிப்படைத்தன்மையுடன் கொண்டுவந்து பல்லாயிரக்கணக்கானவர்களின் அரசு வேலைக் கனவை உறுதிப்படுத்தியவர். பள்ளிக் கல்வித்துறையில் பதவியேற்றபின்னர் புதிய சமச்சீர் பாடத்திட்டம் உருவாக்கத்திலும், வெளிப்படையாக மதிப்பெண் அறிவிக்கும் முறையை ஒழித்ததிலும் முக்கிய பங்காற்றியவர். தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் தமிழரின் ஆணிவேரான கீழடியின் பெருமைகளை ஆவணப்படுத்தியதும் இவரின் அரும்பணிதான்.

ஜெயரஞ்சன், (மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர்)

பொருளாதாரம் குறித்து சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் மேடைகளில், தொலைக்காட்சி விவாதங்களில் ஆழமான கருத்துகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாகவே மக்களின் கவனத்தை ஈர்த்தவர். பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். அவர் தற்போது தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம், திருவையாறில் 1960-ம் ஆண்டு பிறந்த ஜெயரஞ்சன், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க பொருளாதார வல்லுநர்களில் ஒருவராக விளங்குகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்.சி பட்ட மேற்படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்ற இவர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பணியாற்றியவர். தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்காக பொருளாதாரம் மற்றும் சமூக நீதி சார்ந்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை இவர் சமர்ப்பித்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்து 70-க்கும் மேற்பட்ட மிக முக்கியமான ஆய்வுப் பணிகளை இவர் மேற்கொண்டிருக்கிறார். இவர் எழுதிய பல ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற பல ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. டெல்லியிலிருந்து வெளிவரும் ‘எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி’ உள்பட பல முக்கிய இதழ்களில் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார். சமூகநீதி பொருளாதாரத்தின் முக்கிய ஆளுமையாக விளங்கும் இவரின் நியமனமும் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

கு.சிவராமன், (மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினர்)

தமிழகத்தில் தற்போது சித்த மருத்துவம் என்பது புத்துயிர் பெற்றுவருகிறது என்றே சொல்லலாம். அத்தகைய சித்த மருத்துவத்தின் மீட்சிக்காக தொடர் செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சித்த மருத்துவர் கு.சிவராமனும், புத்தகங்கள், காணொலிகள், தொலைக்காட்சி, மேடைப்பேச்சுகள் என ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவர். தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தை உயிர்ப்பிக்கும் இவரின் வார்த்தைகள் பலருக்கும் புத்துயிர் ஊட்டுவன, இதனால்தான் இவரின் நியமனமும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

பாராட்டை பெற்ற மற்ற நியமனங்கள்:

முதல்வரின் தனிச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் போன்றோர் தனது கடந்த பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டவர்கள் என்பதால் அவர்களின் நியமனங்களும் வரவேற்பை பெற்றுள்ளது. ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாகவும், முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஷில்பா பிரபாகர் சதிஷ், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஜோ.அமலோற்பவநாதன், நர்த்தகி நடராஜ் ஆகியோரின் நியமனங்களும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது என்பது உண்மை.